DMK MLA CASE HIGHCOURT

திருப்போரூர் துப்பாக்கிசூடு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட திமுக எம்எல்ஏ இதயவர்மன் உள்ளிட்ட 11 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. இதயவர்மன். இவருடைய தந்தை லட்சுமிபதி. திருப்போரூரை அடுத்த செங்காடு கிராமத்தில் நிலப் பிரச்சனை தொடர்பாக, கடந்த மாதம் நடந்த மோதலில் துப்பாக்கிசூடு நடத்தியதாக எம்எல்ஏ இதயவர்மன் உள்ளிட்டோருக்கு எதிராக மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளில் கைது செய்யப்பட்ட எம்.எல்.ஏ. இதயவர்மன் உள்ளிட்ட 11 பேர், ஜாமீன்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

Advertisment

இந்த மனு, நீதிபதி சதீஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தபோது, எம்எல்ஏவின் தந்தை லட்சுமிபதியை, எதிர்தரப்பினர் அரிவாளால் வெட்டி தாக்கியதால், தற்காப்புக்காக துப்பாக்கிசூடு நடத்தியதாக மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

மேலும்,இந்தசம்பவத்தில் காயமடைந்த சீனிவாசன் என்பவர் குணமடைந்து வீடு திரும்பி விட்டதால், ஜாமீன் வழங்க வேண்டும் எனவும், லட்சுமிபதி அளித்த புகாரின்படி கைது செய்யப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

DMK MLA CASE HIGHCOURT

இதயவர்மன் உள்ளிட்டோருக்கு ஜாமீன் வழங்க கடும் எதிர்ப்பு தெரிவித்த அரசுதரப்பு வழக்கறிஞர்,வழக்கின் விசாரணை முடிவடையவில்லை என்றும் தீவிரவாத தொடர்புகள் குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் தெரிவித்தார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, காயமடைந்தவர் குணமடைந்து வீடு திரும்பி விட்டதையும், மற்றொரு வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதையும் சுட்டிக்காட்டி, இதயவர்மன் உள்ளிட்ட 11 பேருக்கும் தலா 10 ஆயிரம் ரூபாய்க்கான சொந்த பிணையும், அதே தொகைக்கான இருநபர் பிணையும் செலுத்த கூறி, ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

எம்.எல்.ஏ. இதயவர்மன், மூன்று லட்சம் ரூபாயை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு வழங்க வேண்டும் என நீதிபதி நிபந்தனை விதித்துள்ளார். மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை இதயவர்மன், வேலூரில் தங்கியிருந்து, நகர காவல் நிலையத்தில் காலை, மாலை என இருவேளையும் கையெழுத்திட வேண்டும் என்றும், மற்ற 10 பேரும் திருப்போரூர் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் எனவும் நீதிபதி நிபந்தனை விதித்துள்ளார்.