Skip to main content

தேவையான ஒத்துழைப்பை முதலமைச்சருக்கு வழங்கிட தி.மு.க. எம்.பி.,க்கள் தயார்... மு.க.ஸ்டாலின் 

Published on 23/04/2020 | Edited on 23/04/2020


மாநில நிதி உரிமையை மீட்டெடுக்க, மத்திய அரசை வலியுறுத்துவதற்குத் தேவையான ஒத்துழைப்பை முதலமைச்சருக்கு வழங்கிட தி.மு.க. எம்.பி.,க்கள் தயார் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநிலத்தின் நிதித்தன்னாட்சி உரிமைக்கும், கூட்டாட்சித் தத்துவத்திற்கும் எதிராக - மத்திய வரிகளில் தமிழ்நாட்டிற்கு வெறும் 1928.56 கோடி ரூபாய் மட்டுமே மத்திய அரசு நிதி ஒதுக்கியிருப்பது மிகவும் வேதனையளிக்கிறது. 15-வது நிதிக்குழு அமைக்கப்பட்டதிலிருந்தே - மாநிலங்களுக்குக் கிடைக்கும் நிதிப் பகிர்வினைக் குறைக்கும் விதத்தில் உள்ள “ஆய்வு வரம்புகளை” மாற்றியமைத்திட வேண்டும் என்று நிதிக்குழு முன்பும், மத்திய பா.ஜ.க. அரசிடமும் எடுத்து வைத்து திராவிட முன்னேற்றக் கழகம் வாதாடிப் போராடியது.

 

பிரதமர் அவர்களுக்கே நான் நேரடியாகக் கடிதம் எழுதி “2011 மக்கள் தொகையைக் கணக்கில் எடுத்துக் கொள்வது” உள்ளிட்ட மாநிலங்களின் நிதி உரிமையை வஞ்சிக்கும் நிதிக்குழுவின் ஆய்வு வரம்புகளை நீக்க வேண்டும் என்றும், 1971 மக்கள் தொகை அடிப்படையில் நிதிப் பகிர்வினை செய்திட முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்தினேன். பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத பத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம் எழுதி எனது கோரிக்கைக்கு வலுசேர்த்தேன்.
 

http://onelink.to/nknapp


 

mk stalin



ஆனால் அந்தநேரத்தில் மக்களவையில் 37 உறுப்பினர்கள்- மாநிலங்களவையில் 13 உறுப்பினர்கள் என்று 50 எம்.பி.,க்களுடன் மத்திய அரசுடன் கூட்டணியாக இருந்த முதலமைச்சர் எடப்பாடி திரு. பழனிசாமி, என்ன நினைத்துக் கொள்வார்களோ என்ற பயத்தில் - எவ்வித அழுத்தமும் கொடுக்காமல் - வெறும் கடிதம் எழுதினால் போதும் என்று அமைதி காத்திருந்தார்.
 

15-வது நிதிக்குழு ஆய்வு வரம்பு குறித்து விவாதிக்க கேரள அரசு கூட்டிய தென்மாநில நிதியமைச்சர்கள் மாநாட்டைப் புறக்கணித்தார். இதன் விளைவாக - ஐந்தாண்டுகளுக்கு நிதிப் பகிர்வினை அளிக்க வேண்டிய நிதிக்குழு ஒரேயொரு ஆண்டுக்கு மட்டும் (2020-21) நிதிப் பகிர்வினை அளிக்கும் இடைக்கால அறிக்கையை சமர்ப்பித்து - மாநில அரசுகளுக்கு மத்திய வரிகளில் இருந்து பகிர்ந்தளிக்க வேண்டிய நிதியினை 42 சதவீதத்திலிருந்து 41 சதவீதமாகவும் குறைத்துவிட்டது.  நிதிப் பகிர்விற்குப் பிறகும் வருவாய்ப் பற்றாக்குறையைச் சந்திக்கும் 14 மாநிலங்களுக்குப் பரிந்துரைத்த மானியத்தில்கூட தமிழ்நாட்டிற்கு வெறும் 4025 கோடி ரூபாய் மட்டுமே பரிந்துரைக்கப்பட்டது.

மத்திய வரி வருவாய் தொகுப்பிற்கு தமிழகமோ - தென்னிந்திய மாநிலங்களோ அளிக்கும் பங்களிப்பிற்கு ஏற்றதொரு நிதிப்பகிர்வினை 15-வது நிதிக்குழு பரிந்துரைக்கவில்லை. மாறாக, தென் மாநிலங்கள் மூலம் கிடைக்கும் அதிகப்படியான வரி வருவாய், வடமாநிலங்களுக்குச் செல்லும் வகையிலேயே இடைக்காலப் பரிந்துரை அமைந்துவிட்டது. அந்த மிக மோசமான பாதிப்பின் எதிரொலியாகவே தற்போது தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு 16.02 சதவீதத்தின் அடிப்படையில் 7376.73 கோடி ரூபாயும், உத்தரபிரதேசம், பீகார், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்களுக்கு 41.85 சதவீத அடிப்படையில் 19270.4 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகம் உள்ளிட்ட தென் மாநில மக்களின் உணர்வுகளை அப்பட்டமாக அவமதித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
 

தமிழ்நாட்டிற்குப் போதிய நிதிப் பகிர்வு அளிக்கப்படாததை அ.தி.மு.க. அரசு ஆரம்பத்தில் ஆணித்தரமாகத் தட்டிக் கேட்கவும் முன்வரவில்லை. இடைக்கால அறிக்கை அளிக்கப்பட்ட பிறகும் - ஏன், அ.தி.மு.க. ஆட்சியில் ரூ.4.56 லட்சம் கோடிக்கு மேல் தமிழ்நாடு கடனில் மூழ்கியுள்ள உள்ள இந்த நிலையிலும், குறைவாக நிதி ஒதுக்கியுள்ளதற்கு நியாயம் தேடவும் முன்வரவில்லை. அந்த அளவிற்கு முதலமைச்சருக்கு “நாற்காலி” முக்கியமே தவிர, “நாட்டின் நலன்” முக்கியமல்ல என்று செயல்பட்டுக் கொண்டு, மாநில உரிமைகளை விட்டுக் கொடுத்துள்ளனர்.
 

அரசுப் பணத்தில் “விளம்பரப் பிரியராக” எப்படித் தோற்றமளிப்பது என்பது மட்டுமே முதலமைச்சரின் இன்றைய விருப்பமாகவும் தலையாய பணியாகவும்  இருக்கிறது!
 

பொறுப்பற்ற அரசும், கடமையை மறந்த முதலமைச்சரும் இருக்கும் விபரீதத்தால் கரோனா நோய்த் தொற்றால் மாநிலமே பேரிடரில் சிக்கித் தவிக்கும் நேரத்தில் - மத்திய அரசின் வரி வருவாயிலிருந்து முறைப்படி கிடைக்க வேண்டிய அதிகப்படியான நிதிகூட கிடைக்காமல் தமிழகம் நிதியுரிமையைப் பறிகொடுத்து விட்டு நிற்கிறது.
 

ஆகவே, 15-வது நிதிக்குழுவின் இடைக்கால அறிக்கை பரிந்துரை செய்துள்ள நிதிப் பங்கீட்டில் தமிழகத்திற்கு இழைக்கப்பட்டுள்ள மாபெரும் துரோகமும், அநீதியும் உடனடியாகச் சரி செய்யப்பட வேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மீண்டும் கேட்டுக் கொள்கிறேன்.
 

தனது இறுதி அறிக்கையை சமர்ப்பிக்கும் நேரத்தில் மாநிலங்களுக்கான நிதிப் பகிர்வினை மேலும் அதிகரித்து - மத்திய வரி வருவாய்க்கு அதிக அளவில் பங்களிப்பு  செய்யும் தமிழகத்திற்கு அதிக நிதிப் பகிர்வு கிடைப்பதற்குத் தேவையான பரிந்துரைகளை வழங்கி 15-வது நிதிக்குழு அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவானது என்பதை நிலைநிறுத்திட வேண்டும் என்றும் - இப்போதாவது தாமதமாகவேனும் விழித்துக் கொண்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக இதற்குத் தேவையான அழுத்தத்தை மத்திய பா.ஜ.க. அரசுக்கு கொடுக்க முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
 

 

http://onelink.to/nknapp

 

மாநில நிதி உரிமையை மீட்டெடுக்க, மத்திய அரசை வலியுறுத்துவதற்குத் தேவையான ஒத்துழைப்பை முதலமைச்சருக்கு வழங்கிட தி.மு.க. எம்.பி.,க்கள் என்றைக்கும் தயாராக இருக்கிறார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார். 
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர்த்தொட்டியில் மாட்டுச்சாணம் கலப்பு; ராமதாஸ் கண்டனம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Ramdas said mixing of cow dung in the drinking water tank of Sangamviduthi panchayat is reprehensible

சங்கம்விடுதி ஊராட்சி குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் சங்கம்விடுதி ஊராட்சிக்குட்பட்ட குருவண்டான் தெருவில் பட்டியலின மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள்  அதிர்ச்சியளிக்கின்றன. பொதுமக்கள் குடிப்பதற்கான குடிநீர்த் தொட்டியில்  மாட்டுச்சாணம் கலக்கப்பட்டது மனிதநேயமற்றது மட்டுமின்றி, மனிதத் தன்மையற்ற செயலாகும்.  இது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.

குருவண்டான் தெரு குடிநீர்த் தொட்டியில் சில நாட்களுக்கு முன்பாகவே மாட்டுச்சாணம் கலக்கப்பட்டிருக்கக் கூடும் என்று தெரியவந்துள்ளது. அத்தொட்டியிலிருந்து விநியோகிக்கப்பட்ட குடிநீரை குடித்த குழந்தைகள் உள்ளிட்ட பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை ஆய்வு செய்த போது தான் இந்த உண்மை வெளிவந்திருக்கிறது. மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கான குடிநீர்த் தொட்டியில் இது போன்ற மிருகத்தனமான செயல்கள் நடப்பதைக் கண்காணிக்க வேண்டியதும், ஒவ்வொரு நாளும் குடிநீர் மக்கள் பயன்படுத்தத் தக்க வகையில் பாதுகாப்பாக இருக்கிறதா?  என்பதை ஆய்வு செய்ய வேண்டியதும் அரசின் பணி. ஆனால், இந்த இரு கடமைகளிலும் திராவிட மாடல் அரசு தோல்வியடைந்து விட்டது.

தமிழ்நாட்டில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக குடிநீர் தொட்டிகளில் மலம், மாட்டுச்சாணம் போன்றவற்றை கலக்கும் நிகழ்வுகள் அதிகரித்து விட்டன. அதிலும் குறிப்பாக பள்ளிகளிலும், பட்டியலின மக்கள் வாழும் பகுதிகளிலும் இத்தகைய நிகழ்வுகள் தொடர்வது மிகுந்த கவலையும், வேதனையும் அளிக்கிறது. பட்டியலின மக்களுக்கு எதிராக இத்தகைய கொடுமைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் அவற்றைத் தடுக்க தமிழக அரசு தவறி விட்டது.

வேங்கைவயல் குடிநீர்த் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட கொடூரம் நிகழ்ந்து இன்றுடன் 17 மாதங்களாகி விட்டன. ஆனால்,  அதில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது தான் இத்தகைய கொடுமைகள் மீண்டும், மீண்டும் நிகழ்வதற்கு காரணம் ஆகும். வேங்கைவயல் விவகாரத்தில் தமிழக அரசு இனியும் உறங்கிக் கொண்டிருக்காமல்  குற்றவாளிகளை அடையாளம் கண்டு, கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும்.

குருவண்டான் தெரு குடிநீர்த் தொட்டியில் சாணம் கலக்கப்பட்ட நிகழ்வும் வேங்கைவயல் நிகழ்வு எந்த அளவுக்கு கொடூரமானதோ, அதே அளவுக்கு கொடூரமானது. அனைவரும் மனிதர்கள் தான். பிடிக்காதவர்களை பழிவாங்குவதற்காக இத்தகைய செயல்களில் ஈடுபட்டவர்கள் மன்னிக்கப்படுவதற்கு தகுதியற்றவர்கள். இந்த நிகழ்வின் பின்னணியில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்தர தமிழக அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

கோடை வெப்பம்; தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Tamil Nadu Chief Minister M. K. Stalin's instructions for summer heat

தமிழகத்தில் கோடை வெயில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாட்டில் 8 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தி வருகிறது. குறிப்பாக மதுரை, ஈரோடு போன்ற பகுதிகளில் வெப்ப அலை வீசி, மக்களைப் பாதிப்படைய செய்கிறது.

வெப்ப நிலை அதிகமாக இருக்கும் இந்த நிலையில் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்பதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் கோடை வெப்பத்தை எதிர்க்கொள்ளும் வகையில் அரசு சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எனத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளதாவது, “வெப்ப நிலை அதிகரிக்கும். வெப்ப அலை வீசும், என்பது போன்ற செய்திகள் தினந்தோறும் வெளிவந்து கொண்டு இருக்கிறது. இதனை உணர்த்தும் வகையில் கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அடுத்த 5 நாட்களுக்கு வடதமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் அதிக வெப்பமும் வெப்ப அலையும் ஏற்படக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இத்தகைய சூழலில் பொதுமக்கள் கவனத்துடனும் மிகுந்த எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

பொதுவாக கோடை காலம் என்பது வெப்பம் அதிகம் உள்ள மாதங்களாக இருந்தாலும், நாளுக்கு நாள் வெப்ப அளவு அதிகமாகி வருகிறது. இதில் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை ஆகும். அதனால்தான் நேற்றைய தினம் தலைமைச் செயலகத்தில் அரசுத் துறை அதிகாரிகளுடன் இது தொடர்பாக விரிவான ஆலோசனை நடத்தினேன். இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், மருத்துவர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் ஆகியோரின் ஆலோசனையை அரசு அதிகாரிகள் கேட்டுத் தெரிந்து கொண்டதன் அடிப்படையில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த அறிக்கையை வெளியிடுவது மிக மிக அவசியமானதாகக் கருதுகிறேன். வெப்பநிலை அதிகமாகும் காலங்களில் குழந்தைகள், பள்ளி மாணவ, மாணவிகள், வயதானவர்கள். கர்ப்பிணிப் பெண்கள், உடல்நலக் குறைபாடுகள் உடையவர்கள் அதிகமாகப் பாதிக்கப்படலாம். இவர்களை மிகக் கவனமாக பாதுக்காக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

கோடை வெயிலினால் அதிக வியர்வை வெளியேறும்போது. உடலில் உப்புச்சத்து மற்றும் நீர்ச்சத்து பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால் அதிக தாகம், தலைவலி, உடல் சோர்வு, தலைச்சுற்றல், தசைப்பிடிப்பு, மயக்கம் மற்றும் வலிப்பு போன்ற அறிகுறிகள் ஏற்படலாம் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். பணிநேரங்களில் அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும். தாகம் இல்லை என்றாலும், போதிய அளவு நீரை தொடர்ந்து பருகவேண்டும். அதிக அளவில் மோர், அரிசிக்கஞ்சி, இளநீர், எலுமிச்சைப் பழச்சாறு போன்றவற்றை பருகவேண்டும். உணவுப் பழக்க வழக்கங்களில் மாறுதல்களைச் செய்து கொள்ள வேண்டும். நீர்ச்சத்து காய்கறிகளைச் சாப்பிட வேண்டும். பழச்சாறுகளை அதிகமாக உட்கொள்ள வேண்டும்.

பயணத்தின்போது துணி, துண்டு, தொப்பி குடிநீர் எடுத்துச் அணிந்து செல்லவேண்டும். தேவையில்லாமல் வெயிலில் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும். வியர்வை எளிதாக வெளியேறும் வகையில் மிருதுவான. தளர்ந்த, காற்றோட்டமான பருத்தி ஆடைகளை அணிவது நல்லது. வயது முதிர்ந்தவர்கள் நடந்து செல்லும் போது களைப்பாக இருந்தால் நிழலில் சற்று ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும். வெப்பம் அதிகமாக உள்ள திறந்த வெளியில் வேலை செய்யும்போது, களைப்பு, தலைவலி, தலைச்சுற்றல் போன்ற அறிகுறிகள் ஒருவருக்கு ஏற்பட்டால், உடனடியாக நிழலுக்குச்செல்லவேண்டும். மேலும், தண்ணீர், எலுமிச்சைப் பழச்சாறு, ஓ.ஆர்.எஸ். பருக வேண்டும். மயக்கம், உடல் சோர்வு, அதிக அளவு தாகம், தலைவலி, கால், மணிக்கட்டு அல்லது அடிவயிற்றில் வலி ஏற்பட்டால் அருகிலுள்ள நபரை உதவிக்கு அழைக்கவும். மிகவும் சோர்வாகவோ, மயக்கமாகவோ இருந்தால் மருத்துவ உதவியை நாடவேண்டும். சிறுபிரச்சனை என்றாலும் அதனைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று அனைத்து பொதுமக்களையும் கேட்டுக் கொள்கிறேன்.

அதிகரித்துவரும் கோடை வெப்பத்தை எதிர்கொள்ளும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் மூலமாகவும், அரசால் தெரிவிக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலமாகவும், பொதுமக்கள். திறந்த இடங்களில் பணிபுரிவோர், நீண்டதூரம் சாலை பயணங்களை மேற்கொள்வோர் பாதுகாப்பாக இருக்குமாறும் கேட்டுக் கொள்கிறேன். அரசு அதிகாரிகள், அலுவலர்கள் அனைவரும் மக்கள் பாதுகாப்பில் முழு அக்கறை செலுத்தி பாதுகாப்பை உறுதி செய்யுமாறும் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.