மு.க.ஸ்டாலினுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த 4 அவதூறு வழக்குகளை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் குறித்து தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், தி.மு.கதலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்த கருத்துகள் தொடர்பாக, தமிழகத்தில் பல்வேறு நீதிமன்றங்களில் தமிழக அரசு சார்பில் அவர் மீது அவதூறு வழக்குகள் தொடரப்பட்டது. அதைத் தொடர்ந்து அவதூறு வழக்குகளை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தி.மு.கதலைவர் மு.க.ஸ்டாலின் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கு இன்று (10/12/2020) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது வழக்கை விசாரித்த நீதிபதி சதீஸ்குமார், கட்சித் தலைவர்கள் தீவிர தனிப்பட்ட விமர்சனங்களைத் தவிர்த்து, தங்கள் ஆளுமையை, செயல்பாடுகளில் வெளிப்படுத்த வேண்டும். பொது வாழ்வில் உள்ளவர்களுக்கு விமர்சனங்களை எதிர்கொள்ளும் சகிப்புத்தன்மை வேண்டும். வலுவில்லாத ஆதாரங்களுடன் அவதூறு வழக்குகள் தொடருவதை நிறுத்த வேண்டும்,எனக் கூறி மு.க.ஸ்டாலினுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த 4 அவதூறு வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும், 8 வழக்குகளின் விசாரணையை டிசம்பர் 14- ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.