Skip to main content

காவல் ஆய்வாளரை அடித்த தி.மு.க. பிரமுகரின் மனைவி! 

Published on 29/12/2023 | Edited on 29/12/2023
DMK member's wife conflict with police inspector

புகழ்பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் சுவாமி தரிசனத்துக்காகவும், கிரிவலத்திற்காகவும் வருகின்றனர். கோவில் அறங்காவலர் குழுத் தலைவராக உள்ள ஜீவானந்தம் மீது பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன. கோவில் கொடிமரம் அருகே நாற்காலி போட்டு அமர்ந்து கொண்டு ஒருமையில் பேசுவது, மோசமாக பேசுவது என நடந்து கொண்டுள்ளார். உள்ளூரை சேர்ந்த அதிமுக வழக்கறிஞரும், வட்ட பிரதிநிதியுமான அப்பு கோவிலுக்கு சென்றபோது, அறங்காவலர் குழுத் தலைவர் தகராறு செய்துள்ளார். அதிமுகவினர் பெரும் படையாக கோவிலுக்குள் சென்று ஜீவானந்தத்திடம் தகராறு செய்துள்ளனர். அதிகாரிகள் சமாதானம் செய்து அனுப்பியுள்ளனர். இந்நிலையில், அவரின் தம்பியும் திமுக பிரமுகருமான ஸ்ரீதர், அவரது துணைவியார் சிவசங்கரி இருவரும் அண்ணாமலையார் கோவிலுக்குள் காவல்துறை அதிகாரியை அடித்து அதிர்ச்சியை உருவாக்கியுள்ளார்கள்.  

டிசம்பர் 27ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலிலும் பெருவிழாவாக நடைபெற்றது. தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகாவில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆருத்ரா தரிசனம் காண வருகை தந்திருந்தனர்.

கோவிலுக்குள் ஆருத்ரா தரிசனத்தை ஆயிரக்காண ஆண், பெண் பக்தர்கள் வணங்கிக்கொண்டு இருந்தனர். நூற்றுக்கணக்கான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தனர். திருவண்ணாமலை மாவட்டம், தேசூர் காவல் நிலைய ஆய்வாளரும், வந்தவாசி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பொறுப்பில் உள்ள காந்திமதி பக்தர்களை ஒழுங்குபடுத்தி சுவாமி தரிசனம் செய்து வைத்துக் கொண்டு இருந்துள்ளார். அப்போது கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் ஜீவானந்தம் தம்பியும், திமுக முன்னாள் நகர மன்றத் தலைவரும், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினருமான ஸ்ரீதர் மனைவி சிவசங்கரி, சுவாமிக்கு நேராக நின்று நீண்ட நேரம் கும்பிட்டதால் பின்னால் இருந்த பக்தர்களுக்கு சுவாமி தெரியவில்லை என கத்தியுள்ளனர். அப்போது இன்ஸ்பெக்டர், ஏம்மா கொஞ்சம் தள்ளி நின்னு பாரும்மா பின்னாடி இருக்கறவங்களுக்கு மறைக்குதுயில்ல எனச் சொன்னார்களாம். சடாரென கோபமாகி திரும்பி நான் யார் தெரியுமா?, என் மேல கை வச்சி தள்ளற என எகிறியுள்ளார் அப்பெண்மணி.

சுவாமி மறைக்குதுன்னு பின்னாடி இருக்கறவங்க சொல்றாங்க, அவுங்களும் பக்தர் தானே?, அவுங்களும் சுவாமி பார்க்கத்தான் வந்திருக்காங்க, நகரும்மா எனச் சொல்லியுள்ளார் இன்ஸ்பெக்டர். நான் இந்த கோவில் அறங்காவலர் குழு தலைவரோட தம்பி மனைவி தெரிஞ்சிக்க என அந்தப் பெண் சொல்ல, அரசியல்வாதி மனைவியா இருந்துக்கிட்டு இப்படி நடந்துக்கிட்டா எப்படி எனக்கேட்டுள்ளார் ஆய்வாளர். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு பிறகு கை கலப்பாகியுள்ளது. அப்போது மனைவி இருந்த இடத்துக்கு சுவாமி கும்பிட்டுவிட்டு வந்த திமுக பிரமுகர் ஸ்ரீதர், பெண் காவல் ஆய்வாளர் காந்திமதியிடம் ஒருமையில் பேசத் துவங்கியுள்ளார். அப்போது பதிலுக்கு அவரும் ஸ்ரீதரிடம் ஒருமையில் பேசியதும், ஸ்ரீதர் துணைவி சிவசங்கரி, காந்திமதியின் கன்னத்தில் பளாரென அடித்துள்ளார்.

ஆயிரக்கணக்கானவர்கள் முன்னிலையில் கோவிலில் பெண் காவல் ஆய்வாளரை ஸ்ரீதர் துணைவியார் அடித்து, எச்சரித்து மிரட்டியதை தொடர்ந்து பெண் காவல் ஆய்வாளர் சிவசங்கரியை பிடித்து இழுக்க முயன்றபோது, ஆய்வாளரை பிடித்து தள்ளியிருக்கிறார். அப்போது கோவில் ஊழியரான ஒரு பையன் ஸ்ரீதருடன் சேர்ந்து ஆய்வாளரை தள்ளிவிடுகிறான்.

இது ஆயிரக்கணக்கானவர்கள் முன்பு நடந்தது ஆய்வாளருக்கு அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது. அனைவருக்கும் இது அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. டூட்டி பார்த்துக்கொண்டியிருந்த சக அதிகாரிகள், ஆண், பெண் காவலர்கள் அதிர்ச்சியாகி, திகைத்துப்போய் பார்த்துள்ளனர். ஆய்வாளரை அடித்துவிட்டு தன் மனைவியை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு சென்றுள்ளார் ஸ்ரீதர்.

இந்த சம்பவத்தில் கோபமான போலீஸார் இனி நாங்கள் டூட்டி பார்க்கமாட்டோம் எனச்சொல்லியுள்ளனர். இந்த விவகாரம் அங்கே டூட்டியில் இருந்த நகர காவல் துணை கண்காணிப்பாளர் குணசேகரன், எஸ்.பி.கார்த்திகேயன் கவனத்துக்கு சென்றுள்ளது. காவல்துறை அதிகாரிகள் காந்திமதியிடம் பேசியபோது, புகார் தரேன் வழக்கு பதிவு செய்யச் சொல்லுங்க என்றுள்ளார். 

யூனிபார்ம்ல இருக்கற என்னை அடிச்சியிருக்காங்க, எனக்கு, டிபார்ட்மெண்ட்டுக்கு என்ன சார் மரியாதை, மத்தவங்க என்னை எப்படி மதிப்பாங்க எனக்கேட்டுள்ளார். சமாதானத்தை ஏற்றுக்கொள்ளாமல், நடந்ததை புகாராக எழுதி தந்தவர், மற்றொரு கடிதத்தில் ஒரு மாதம் விடுமுறை கடிதம் எழுதி இரண்டையும் தந்துவிட்டு புறப்பட்டவர் தனது செல்போனை சுச் ஆப் செய்துவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார் ஆய்வாளர் காந்திமதி.

கோவிலுக்குள் நடந்த விவகாரம் மீடியாவில் வராமல் சைலண்டாக்கினர். இரவு சமூக ஊடகங்களில் வெளிவந்து பரபரப்பாகிவிட்டது. இதுகுறித்து இன்டலிஜெண்ட்ஸ் ரிப்போர்ட் மூலமாக ஏ.டி.ஜி.பி. அருண் கேள்வி எழுப்பத்தொடங்கினார். வேலூர் சாரக டி.ஐ.ஜி. முத்துச்சாமி, திருவண்ணாமலை எஸ்.பி கார்த்திகேயனிடம் சரமாரியாக கேள்வி எழுப்பியதன் விளைவாக திருவண்ணாமலையில் இருந்த அதிகாரி ஒருவரை அனுப்பி வந்தவாசியில் இருந்த ஆய்வாளர் காந்திமதியிடம் கெஞ்சி கூத்தாடி  திருவண்ணாமலை எஸ்.பி அலுவலகத்துக்கு அழைத்துவந்தனர்.

அவரிடம் நேற்று விடியற்காலை 3 மணிக்கு எஸ்.பி கார்த்திகேயன் அமர்ந்து காம்ப்ரமைஸ் செய்துள்ளார். அவுங்க அடிச்சதுக்கு உங்கக்கிட்ட மன்னிப்பு கேட்கறன்னு சொல்றாங்க எனச்சொல்லியுள்ளார். எப்.ஐ.ஆர் போடுங்க சார், இல்லன்னா நான் ஐகோர்ட் போவேன் என்று உறுதியாக கூறியுள்ளார் இன்ஸ்பெக்டர் காந்திமதி. அதன்பின் டிசம்பர் 28ஆம் தேதி விடியற்காலை 4 மணிக்கு, பணி செய்யாமல் தடுத்தல், தாக்குதல், பெண் வன்கொடுமை பிரிவு என சில பிரிவுகளின் கீழ் ஸ்ரீதர், அவரது துணைவி சிவசங்கரி மற்றும் கோவில் ஊழியர் ஒருவர் என 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது திருவண்ணாமலை ஆளும் கட்சியான திமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சார்ந்த செய்திகள்