Skip to main content

“தீ குளிக்கத் தயாராக இருக்கிறேன்...” - அமைச்சர் வீட்டில் தொண்டர் ஆவேசம்

Published on 17/07/2023 | Edited on 17/07/2023

 

DMK members are in a frenzy at Minister Ponmudi's house

 

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். காலை 7 மணி முதல் 7க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மத்திய காவல் படையினருடன் பொன்முடி வீட்டில் அதிரடியாகச் சோதனை நடத்தி வருகின்றனர். அவரது சென்னை வீடு, அலுவலகம், விழுப்புரம் உள்ளிட்ட 9 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.  அமைச்சரின் மகனும், கள்ளக்குறிச்சி தொகுதி எம்.பியுமான கௌதம சிகாமணி வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.

 

அமைச்சர் பொன்முடி தொடர்பான வழக்கு ஒன்றில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடைபெற்று இருக்கிறதா என்பதன் அடிப்படையில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் இருக்கும் நிலையில் தற்போது மீண்டும் ஒரு அமைச்சரின் வீட்டில் சோதனை நடைபெற்று வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்த நிலையில் காலையில் சைதாப்பேட்டையில் உள்ள அமைச்சர் பொன்முடி வீட்டிற்கு  மன்னார்குடியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர்  மனு கொடுக்க வந்துள்ளார்.  அந்த நேரம் பார்த்து அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் வீட்டிற்குச் சோதனைக்கு வந்த போது கதவை மூடி யாரும் இங்கிருந்து வெளியே போகக்கூடாது என்று கூறியுள்ளனர். அதனால் மனுகொடுக்க வந்த ராஜேந்திரன் அமைச்சர் வீட்டிலேயே மாட்டிக்கொண்டார். காலையிலிருந்து அவருக்குக் குடிப்பதற்குத் தண்ணீர் கூட தரவில்லை என்று கூறப்படுகிறது. தற்போது அமலாக்கத்துறை அவரை வெளியே அனுப்பியுள்ளது. 

 

பத்திரிகையாளர்களைச் சந்தித்த அவர், “நான் அமைச்சரிடம் எங்க தொகுதி கலைக்கல்லூரி தொடர்பாக மனு கொடுக்க வந்தேன். அப்போது அமைச்சர் வீட்டின் கதவு வழியாக எட்டிப்பார்த்தேன் என்னை உடனே அதிகாரிகள் உள்ளே வரச்சொல்லி என்னுடைய செல்போனை வாங்கிக்கொண்டு வெளியே செல்லக் கூடாது என்று கூறிவிட்டு சென்றுவிட்டனர். நான் இதய நோயாளி என்னை வெளியே விடுங்கள் என்று கூறியும் கேட்கவில்லை. வெளியே இருந்து டீ, தண்ணீர் எல்லாம் வாங்கி கொடுத்தார்கள், ஆனால் அதையும் அதிகாரிகள் உள்ளே அனுமதிக்கவில்லை. அதன்பிறகு தற்போது அதிகாரிகள் என்னை அழைத்து எதற்காக உள்ளே வந்தீர்கள் என்று கேட்டார்கள். நானும் வந்த காரணத்தை கூறினேன். “என்னைக் கொண்டு வந்தீர்கள் என்று கேட்டார்கள். கொண்டு வருவதற்கு என்னிடம் ஒன்றுமில்லை; கொண்டு போவதற்கும் இங்கேயும் ஒன்றுமில்லை” என்று கூறினேன். அதன் பிறகு என்னுடைய செல்போனை கொடுத்து நீங்கள் செல்லலாம் என்றார்கள். ஆனால் நான், எங்க தளபதி எங்களை அப்படி வளர்க்கவில்லை என்னால் வெளியே போகமுடியாது என்று கூறினேன். அவர்கள் கேட்காமல் என்னிடம் போனை கொடுத்து வெளியே அனுப்பிவிட்டார்கள். 30 வருடங்களுக்கு ஸ்டாலினுடன் எடுத்த புகைப்படத்தை எனது பர்சில் வைத்திருக்கிறேன். நான் கட்சிக்காரன். பாஜக அண்ணாமலை மாதிரி பாதியில் கட்சிக்கு வரவில்லை. இப்போது கட்சியில் இருந்து தீ குளிக்கச் சொன்னாலும் தயாராக இருக்கிறேன்” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு; உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரிய அமலாக்கத்துறை!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Senthil Balaji Bail Petition ED apologized to the Supreme Court

போக்குவரத்துத்துறையில் சட்ட விரோதமாகப் பணப்பரிமாற்றம் செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி சட்ட விரோதப் பணப்பரிமாற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ், அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார். இந்த வழக்கு தொடர்பாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு எதிராகக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி குற்றப்பத்திரிகை மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர்.

அதே சமயம் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடித்து வந்தார். மேலும் செந்தில் பாலாஜி வகித்து வந்த இலாகாக்களான மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்குத்துறை அமைச்சர் சு. முத்துசாமிக்கும் ஒதுக்கப்பட்டது. இத்தகைய சூழலில் செந்தில் பாலாஜி கடந்த பிப்ரவரி 12 ஆம் தேதி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தார். இதற்கிடையே பலமுறை செந்தில் பாலாஜிக்கு சென்னை அமர்வு நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் நிராகரிக்கப்பட்டது. 

Senthil Balaji Bail Petition ED apologized to the Supreme Court

இத்தகைய சூழலில் மீண்டும் ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி சார்பில் ஜாமீன் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு கடந்த 1 ஆம் தேதி (01.04.2024) உச்சநீதிமன்ற நீதிபதி அபய் எஸ்.ஓஹா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது கீழமை நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்ததுடன் அமலாக்கத்துறை பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மேலும் இந்த வழக்கு விசாரணையை ஏப்ரல் 29 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்திருந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று (29.04.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது. முன்னதாக  அமலாக்கத்துறை சார்பில் நேற்று (28.04.2024) இரவு தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், “செந்தில் பாலாஜிக்கு எதிரான ஆதாரங்கள் வலுவாக உள்ளதால் அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். அமைச்சராக இல்லாவிட்டாலும், எம்.எல்.ஏ.வாக உள்ள செந்தில் பாலாஜி அதிகாரமிக்க நபராக உள்ளதால், சாட்சியங்களை அழிக்க வாய்ப்புள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டது. 

Senthil Balaji Bail Petition ED apologized to the Supreme Court

இதனையடுத்து செந்தில்பாலாஜி தரப்பில் வாதிடுகையில், “வழக்கில் விசாரணையை தாமதப்படுத்த அமலாக்கத்துறை முயற்சிக்கிறது. தனிநபர்களுக்குள் நடந்த கொடுக்கல், வாங்கல் விவகாரத்தை நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட மோசடியாக கட்டமைக்கின்றனர்” என குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது. இத்தகைய சூழலில் இந்த வழக்கில் தாமதமாக பதில் மனு தாக்கல் செய்ததற்கு உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மன்னிப்பு கோரியது. முன்னதாக அமலாக்கத்துறை மிகத் தாமதமாக பதில் மனு தாக்கல் செய்துள்ளதாக செந்தில் பாலாஜி தரப்பு குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கு மே 6 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.