“கண்டிப்பாக எங்கள் சின்னத்தில்தான் போட்டியிடுவோம்” - மதிமுக திட்டவட்டம்

DMK-MDMK Talks on Parliamentary Constituency Distribution

இந்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி வருகின்றன. அந்த வகையில் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள திமுக, நாடாளுமன்றத் தேர்தலுக்கான பல்வேறு குழுக்களை உருவாக்கி அதற்கான அறிவிப்புகளைக் கொடுத்திருந்தது. அதன்படி கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திட நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு தலைமையில் அமைக்கப்பட்ட குழுவில் அமைச்சர்கள் கே.என். நேரு, ஐ. பெரியசாமி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், நாடாளுமன்ற உறுப்பினர்களான திருச்சி சிவா, ஆ. ராசா மற்றும் பொன்முடி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து திமுகவுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நேற்று பேச்சுவார்த்தை நடத்தியது. பேச்சுவார்த்தையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 4 விருப்ப தொகுதியில் இருந்து 2 மக்களவை தொகுதிகள், மற்றும் ஒரு மாநிலங்களவை இடங்களையும் கேட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியது.

இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து திமுகவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போச்சு வார்த்தை நடத்தியது. தொகுதி பங்கீடு தொடர்பாக இரு கட்சிகளுக்குமிடையே நடந்த பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்தது. விரைவில் தொகுதி பங்கீடு குறித்து உடன்பாடு ஏற்படும் எனவும் தெரிவித்தனர்.

இந்த நிலையில், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் நாடாளுமன்றத் தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுக மற்றும் மதிமுக இடையேயான பேச்சுவார்த்தை நடந்தது. அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மதிமுக தேர்தல் குழு, “கூட்டணி தலைமையிடம்2 மக்களவை தொகுதிகளும், 2 மாநிலங்களவை தொகுதிகளும் கேட்டிருக்கிறோம். ஆனால் முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டில் இருந்து வந்த பிறகு முடிவு தெரிவிக்கப்படும். ஆனால் எந்த தொகுதியில் போட்டியிடுகிறோம் என்று முடிவாகவில்லை. விரைவில் அதுகுறித்தும் அறிவிப்பு வெளியாகும். இந்த முறை கண்டிப்பாக எங்களது கட்சி சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்று தெரிவித்தனர். கடந்த முறை ஒரு மக்களவை தொகுதி, ஒரு மாநிலங்களவை தொகுதி மதிமுகவிற்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

mdmk
இதையும் படியுங்கள்
Subscribe