/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/dmk3232111.jpg)
சேலம் அருகே, தி.மு.க. முன்னாள் இளைஞரணி துணை அமைப்பாளர் உள்ளிட்ட இருவரை மர்ம நபர்கள் சரமாரியாக கத்தியால் குத்திக்கொல்ல முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் உடையாப்பட்டியைச் சேர்ந்தவர் நாகராஜன் (வயது 31). தி.மு.க.வில் அயோத்தியாப்பட்டணம் ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளராக இருந்து வந்தார். கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாகக்கூறி, அவரை அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் கடந்த மார்ச் 22- ஆம் தேதி கட்சி மேலிடம் டிஸ்மிஸ் செய்தது.
இந்நிலையில், வியாழக்கிழமை இரவு நாகராஜனும், மேட்டுப்பட்டியைச் சேர்ந்த அவருடைய நண்பரும் பாமக பிரமுகருமான பிருத்விராஜன் (வயது 42) என்பவரும் சங்ககிரியில் இருந்து சேலத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். ஆட்டையாம்பட்டி எஸ்.பாலம் அருகே வந்தபோது, நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் அவர்களை வழிமறித்து, கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச்சென்றனர்.
இந்த தாக்குதலில் நாகராஜன், பிருத்விராஜன் ஆகிய இருவருக்கும் உடலில் பல இடங்களிலும் பலத்த காயம் ஏற்பட்டது. அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அந்த வழியாக வந்தவர்கள் இருவரையும் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த ஆட்டையாம்பட்டி காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க, கடந்த மார்ச் மாதம் தி.மு.க. பிரமுகர் ஒருவர் தன்னிடம் பணம் கேட்டு மிரட்டுவதாகக் கூறி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு குடும்பத்துடன் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். அவருடைய புகார் மனு, அம்மாபேட்டை காவல்நிலையத்தில் விசாரணையில் உள்ளது.
இது ஒருபுறம் இருக்க, தி.மு.க. பிரமுகர்கள் உள்ளிட்ட பலரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாகக்கூறி லட்சக்கணக்கில் பணம் வசூலித்துவிட்டு நாகராஜன் ஏமாற்றியதாகவும், பலருடைய கார்களை சினிமா படப்பிடிப்புக்கு வாடகைக்கு விட்டு சம்பாதிக்கலாம் எனக்கூறி பெற்றுச்சென்று, அவர்களுக்குத் தெரியாமல் அடமானம் வைத்து மோசடி செய்ததாகவும் கூறப்படுகிறது.
நாகராஜன் மீதான மோசடி புகார்களும், அம்மாபேட்டை காவல்நிலையத்தில் விசாரணையில் உள்ள நிலையில், கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக அவர் தலைமறைவாக இருந்து வந்தார்.இதனால் பணம் கொடுக்கல் வாங்கல் காரணமாக, பாதிக்கப்பட்ட கும்பலைச் சேர்ந்தவர்கள் நாகராஜனை குறிவைத்து இந்த தாக்குதலை நடத்தி இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.
சம்பவம் நடந்த நேரத்தில் சந்தேகத்திற்கு இடமான வகையில் சென்ற வாகனங்கள், இளைஞர்கள் ஆகியோர் முகங்கள் எங்கேயாவது சிசிடிவி கேமராக்களில் பதிவாகி உள்ளதா? என்பது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். நாகராஜன், பிருத்விராஜன் ஆகியோரின் செல்போன்கள் மூலம் பேசப்பட்ட அழைப்புகள் குறித்த விவரங்களையும் சேகரித்து வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)