Skip to main content

தமிழிசையோ...மோடியோ... நிரூபித்துவிட்டால் அரசியலை விட்டு விலக தயார்!!-ஸ்டாலின்

Published on 14/05/2019 | Edited on 14/05/2019

‘’திமுக தலைவர் ஸ்டாலின் நிறம் மாறிக்கொண்டிருக்கிறார். பாஜகவுடன் ஸ்டாலின் பேசுகிறார் என்று அமைச்சர் ஜெயக்குமார்  கூறியது உண்மைதான். பாஜக வெற்றி பெறும் என்று தெரிந்து பாஜகவுடன் ஸ்டாலின் பேசி வருகிறார்.  மோடியுடனும் தொடர்பில் இருக்கிறார்’’ என்று பாஜக தமிழக தலைவர் தமிழிசை செய்தியாளர்களுக்கு இன்று அளித்த பேட்டியில் தெரிவிதிருந்தார். இந்நிலையில் தமிழிசையின் இந்த கருத்திற்கு பதிலளிக்கும் வகையில் திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், 

 

தமிழிசை சவுந்திரராஜனோ அல்லது  நரேந்திர மோடியோ “மத்தியில் ஆட்சி அமைக்க பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்க நான் அவர்களுடன் பேசி வருகிறேன்” என்பதை நிரூபித்து விட்டால் அரசியலில் இருந்து விலக நான் தயார்; நிரூபிக்கத் தவறினால் அவர்கள் இருவரும் அரசியலை விட்டு விலகத் தயாரா?"

 

stalin

 

“மோடியுடனும் ஸ்டாலின் பேசி வருகிறார்.  பா.ஜ.க கூட்டணி வெற்றி பெறும் என தெரிந்துதான் எங்களுடன் பேசி வருகிறார்” என்று “பச்சைப் பொய்” நிறைந்த ஒரு பேட்டியை பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் அளித்திருப்பதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். தோல்வியின் விளிம்பிற்கு சென்று விட்ட பா.ஜ.கவிற்கு இதுபோன்று குழப்பங்களை விதைப்பது கைதேர்ந்த விளையாட்டு. ஆனால் பாரம்பரியமான அரசியல் குடும்பத்தில் பிறந்த திருமதி தமிழிசை சவுந்திரராஜன் இப்படியொரு “பொய்” பேட்டியை அளிப்பதற்காக தன்னை இந்த அளவிற்கு தரம் தாழ்த்திக் கொண்டு விட்டாரே என்பதை நினைத்து வேதனைப்படுகிறேன்.

 

காங்கிரஸ் கட்சித் தலைவர்  ராகுல் காந்தியை முதன்முதலில் பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்தது திராவிட முன்னேற்றக் கழகம் தான். அதே நேரத்தில் ஐந்தாண்டு காலத்தில் மக்களுக்கு சொல்லொணாத் துயரத்தை அளித்த பிரதமர் நரேந்திர மோடியை “பாசிஸ்ட்” “சேடிஸ்ட்” “சர்வாதிகாரி” என்று முதன்முதலில்  விமர்சித்தது மட்டுமின்றி, “மீண்டும் இந்தியாவின் பிரதமராக  நரேந்திர மோடி வரவே கூடாது” என்று சென்னையில் மட்டுமல்ல - கல்கத்தாவிலும், டெல்லிலும் மாறி மாறி பிரச்சாரம் செய்தவனும் அடியேன்தான். தமிழகம் முழுவதும் மக்கள் மத்தியிலும் அதே பிரச்சாரத்தை செய்திருக்கிறேன். நடைபெறவிருக்கின்ற நான்கு சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தல் பிரச்சாரத்திலும் மே 23 ஆம் தேதியுடன் பிரதமர்  மோடி வீட்டுக்கு அனுப்பப்படுவார் என்பதை உறுதியாகவும், இறுதியாகவும் பேசி வருகிறேன்.

 

இதைப் பொறுக்க முடியாத பா.ஜ.க. மேலிடத் தலைவர்கள் கடைந்தெடுத்த அரசியல் கயமைத்தனம் மூலம் அ.தி.மு.கவை மிரட்டி கூட்டணி வைத்தது போல், இட்டுக்கட்டிய பேட்டிகளை கற்பனைக் குதிரைகள் போல் தட்டி விட்டு தி.மு.க.வை வம்புக்கு இழுக்க முயற்சிக்கிறார்கள். தி.மு.க.வின் வெற்றியும், அதன் கூட்டணிக் கட்சிகளின் வெற்றியும் அந்த அளவிற்கு பா.ஜ.க.வை மிரட்டி விட்டது. பிரதமர்  நரேந்திர மோடி உள்ளிட்ட மேலிடப் பா.ஜ.க. தலைவர்களின் சுயநலனுக்கு திருமதி தமிழிசை சவுந்திரராஜன் கடைசிக்கட்டமாக பகடைக்காயாக ஆக்கப்பட்டுள்ளார்.

 

தெலுங்கானா முதல்வர்  சந்திரசேகர் ராவ் அவர்கள் இப்போது முதன்முதலாக என்னை வந்து பார்க்கவில்லை. இதற்கு முன்பும் வந்து சந்தித்து விட்டுச் சென்றிருக்கிறார். இந்த முறை அவர் சந்தித்து விட்டுச் சென்றவுடனையே “இது மரியாதை நிமித்தமான சந்திப்பு” என்று தி.மு.க. தலைமைக் கழகத்திலிருந்து தெளிவான பத்திரிக்கைக் குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. குழப்பவாதிகள் அப்போதாவது குறிப்பறிந்திருக்க வேண்டும். ஆனாலும் “மரியாதை நிமித்தமான சந்திப்பிற்கு” காது மூக்கு வைத்து, பூச்சூடி பொட்டு வைத்து வெளியில் விட்டால் தி.மு.க.விற்கு விழும் சிறுபான்மையின வாக்குகளை இந்த நான்கு இடைத்தேர்தல்களில் தடுத்து விடலாம்- சிதறடித்து விடலாம் என்றும், மக்களவைத் தேர்தலின் கடைசிக் கட்ட வாக்குப் பதிவு நடைபெறவிருக்கின்ற நிலையில்  ராகுல் காந்தி அவர்களை பிரதமராக முன்னிறுத்திய தி.மு.க.வின் பிரச்சாரத்தை முனை மழுங்கச் செய்து விடலாம் என்றும் “தப்புக் கணக்கு”ப் போட்டு  தமிழிசை இந்த பேட்டியை திட்டமிட்டு, உள்நோக்கத்தோடு கொடுத்திருக்கிறார். குறிப்பாக அ.தி.மு.க அமைச்சர்  ஜெயக்குமார் சொன்னதை  தமிழிசை சவுந்திரராஜன் வழி மொழிந்திருக்கிறார் என்றால் ஊழல் அ.தி.மு.கவை எப்படியாவது இந்த நான்கு இடைத் தேர்தலிலாவது தோல்வியடைய விட்டுவிடக் கூடாது என்று “போகாத ஊருக்கு பொய்யான வழி தேடியிருக்கிறார்”! “உனக்கு நான்”, “எனக்கு நீ” என்று ஊழல் அ.தி.மு.கவும், மதவாத பா.ஜ.க.வும் கச்சை கட்டிக் கொண்டு “தி.மு.க தலைமையிலான” கொள்கைக் கூட்டணிக் குளத்தில் கல் எறியும் இந்த முயற்சி படு தோல்வியடையும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

 

 திராவிட முன்னேற்றக் கழகம், “அ.தி.மு.க- பா.ஜ.க” போல் திரைமறைவில் “தரகு”பேசும் கட்சியல்ல. கொள்கையை பகிரங்கமாக அறிவித்து- யார் பிரதமர் என்பதை முன்கூட்டியே மக்களிடம் எடுத்துக் கூறி- யார் பிரதமராகக் கூடாது என்பதை இன்னும் தெளிவாக எடுத்துரைத்து தேர்தலைச் சந்தித்து வருகின்ற கட்சி. அந்த வகையில்தான் இந்த மக்களவைத் தேர்தலையும் திராவிட முன்னேற்றக் கழகம் சந்தித்துள்ளது. மத்தியில் பிரதமர்  நரேந்திர மோடி மீண்டும் பிரதமராகக்கூடாது என்பதிலும் தி.மு.க. உறுதியாக இருக்கிறது. காங்கிரஸ் தலைமையில் மத்தியில் மதசார்பற்ற ஆட்சி அமைய வேண்டும் என்பதிலும், ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என்பதிலும் அதைவிட இரட்டிப்பு மடங்கு உறுதியுடன் இருக்கிறது. ஆகவே, கழகத் தலைவராக பொறுப்பேற்ற போது நான் உறுதியளித்தது போல், இந்தியா முழுவதும் காவி வண்ணம் அடிக்க நினைக்கும் மோடி அரசை மே 23- ஆம் தேதிக்குப் பிறகு மாற்றிக்காட்டுவோம்! முதுகெலும்பில்லாத இந்த அ.தி.மு.க அரசைத் தூக்கியெறிவோம்!

 

 தமிழிசை சவுந்திரராஜனோ அல்லது அவர் மீண்டும் பிரதமராக வர வேண்டும் என்று ஆசைப்படும்  நரேந்திர மோடியோ “மத்தியில் ஆட்சி அமைக்க பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்க நான் அவர்களுடன் பேசி வருகிறேன்” என்பதை நிரூபித்து விட்டால் அரசியலில் இருந்து விலக நான் தயாராக இருக்கிறேன். அப்படி இருவரும் நிரூபிக்கத் தவறினால் திரு நரேந்திர மோடியும், மாநில பா.ஜ.க. தலைவராக இருக்கும் திருமதி தமிழிசை சவுந்திரராஜனும் அரசியலை விட்டு விலகத் தயாரா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“ஜிஎஸ்டி மூலம் மத்திய அரசு வழிப்பறிக் கொள்ளையடிக்கிறது” - உதயநிதி குற்றச்சாட்டு

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Udhayanidhi alleges Central govt is looting through GST

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட ஒத்தக்கடை பகுதியில், ஈரோடு மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கே.இ.பிரகாஷை ஆதரித்து இன்று (ஏப்.16) காலை பிரச்சாரம் செய்தார் அமைச்சர் உதயநிதி. அப்போது அவர் பேசியதாவது, “கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு வாக்களித்தவர்கள் மற்றும் வாக்களிக்கத் தவறிய மக்களும் பெருமைப்படும் வகையில் முதல்வர் ஸ்டாலின் பணிபுரிந்து வருகிறார்.

உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல்வர் ஆனார் ஸ்டாலின். ஆனால், பழனிசாமியை நீங்கள் முதல்வராக தேர்ந்தெடுக்கவில்லை. பாஜகவுடன் நான்கு ஆண்டுகள் கூட்டணியில் இருந்து, தமிழகத்தின் உரிமைகள், மொழி, நிதி, கல்வி உரிமைகளை பழனிசாமி விட்டுக் கொடுத்து விட்டார். நீட் தேர்வுக்கு போராட்டம் பாஜகவுக்கு பயந்து நீட் தேர்வினை தமிழகத்தில் அனுமதித்து விட்டார். நீட் தேர்வினால், இதுவரை 21 மாணவ, மாணவியர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். திமுக ஆட்சி அமைந்த பிறகு, நீட் தேர்வினை ரத்து செய்ய சட்டரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திமுக ஆட்சிக்கு வந்ததும் பால் விலை, பெட்ரோல் விலை குறைக்கப்பட்டது. கரோனா காலத்தில், பி.எம்.கேர் என்ற பெயரில், வசூலிக்கப்பட்ட ரூ.32 ஆயிரம் கோடிக்கு இதுவரை கணக்கு காட்டவில்லை. ஆனால், தமிழகத்தில் கரோனா காலத்தில் உதவித்தொகை வழங்கப்பட்டது. இலவச பேருந்து பயண சலுகையை, ஈரோடு மாவட்டத்தில் 21 கோடி முறை பெண்கள் பயன்படுத்தி உள்ளனர். புதுமைப்பெண் திட்டம் மூலம் 11 ஆயிரம் மாணவிகள் பயன்பெற்று வருகிறார்கள். காலை உணவுத் திட்டத்தில், 56 ஆயிரம் மாணவர்கள் பயன்பெற்று வருகிறார்கள். 4 லட்சம் மகளிர் உரிமைத் தொகை பெற்று வருகின்றனர்.

ஈரோடு மாவட்டத்தைப் பொறுத்தவரை, மொடக்குறிச்சியில் மஞ்சள் ஆராய்ச்சி மையம் அமைக்க நடவடிக்கை, ரூ.60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சோலார் புறநகர் பேருந்து நிலையம், சோலார் பகுதியில் விளையாட்டு அரங்கம் அமைக்க நடவடிக்கை, 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் காய்கறிகள் சந்தை, சுதந்திரப் போராட்ட வீரர் பொல்லான் நினைவிடம் அமைக்க இடம் தேர்வு, அறச்சலூர் மலை கோயிலுக்கு செல்ல பாதை வசதி போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்பாட்டுக்கு வரவுள்ளன. முதலமைச்சர் காலை உணவு திட்டம் இந்தியாவில் சிறப்பு வாய்ந்த திட்டமாக உள்ளது. இத்திட்டம் மூலம், 18 லட்சம் மாணவர்கள் பயன்பெற்று வருகிறார்கள்.

தெலங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் காலை உணவு திட்டம் செயல்படுத்த இருப்பது தான் திராவிட மாடல் அரசு சாதனை. கடந்த 10 ஆண்டுகள் நாட்டை ஆண்ட பாஜக தமிழகத்துக்கு எதுவும் செய்யவில்லை. சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் வெள்ள பேரிடர் போது மத்திய அரசு உதவி செய்யவில்லை. ஜிஎஸ்டி மூலம் வசூல் செய்யப்படும் தொகையை மத்திய அரசு முறையாக, சரிசமமாக, மாநிலத்துக்கு நிதியை பகிர்ந்து வழங்குவதில்லை. தமிழகத்தில் இருந்து ஒரு ரூபாய் வரி வசூலித்தால், 29 பைசா மட்டும் திரும்ப வருகிறது.

தமிழகத்தில் இருந்து ஜிஎஸ்டி மூலம் மத்திய அரசு வழிப்பறிக் கொள்ளை அடித்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக, தமிழகத்துக்கு வராத பிரதமர் மோடி, தேர்தலுக்காக தற்போது அடிக்கடி வருகிறார். பாஜக – அதிமுக கூட்டணி இல்லை என்று இப்போது நாடகம் போடுகின்றனர். தேர்தலுக்கு பிறகு, இருவரும் ஒன்று சேர்ந்து விடுவார்கள். கடந்த தேர்தலில் அடிமை அதிமுக வை விரட்டி அடித்தது போல, இந்த முறை அதிமுக எஜமானர்களான பாஜகவையும் விரட்டி அடிக்க வேண்டும்” இவ்வாறு அவர் பேசினார்.

அமைச்சர் உதயநிதி தனது பிரச்சாரத்தில் பிரதமர் மோடி- அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியுடன் இருக்கும் படம், செங்கல், 29 பைசா பதாகை போன்றவற்றை காட்டி அதுகுறித்து விளக்கம் அளித்தார்.

Next Story

11 மாதங்களுக்குப் பிறகு பிரச்சாரத்திற்குச் சென்ற அமித்ஷா; கொந்தளித்த மணிப்பூர் மக்கள்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Opposition to Amit Shah who went to Manipur to campaign after 11 months

கடந்த 2023 ஆம் ஆண்டு மணிப்பூரில் மெய்தி - குக்கி சமூகங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல், ஆளும் பாஜக அரசின் அலட்சியத்தால் கலவரமாக மாறியது. மெய்தி மக்களை, பழங்குடிப் பட்டியலில் சேர்க்கும் பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்ப ஆளும் பாஜக அரசுக்கு மணிப்பூர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அதனை எதிர்த்து குக்கி பழங்குடியின மக்கள் நடத்திய அமைதிப் பேரணியில் வன்முறை வெடிக்க, மாநிலமே கலவர பூமியாக மாறியது. மெய்தி - குக்கி சமூகத்தினருக்கு இடையே நடந்த இந்த மோதல் கொலை, தீவைப்பு, ஆயுதத் திருட்டுச் சம்பவங்ள் எனப் பூதாகரமாக மாறியது. அதுமட்டுமல்லாமல், வன்முறைக்கு இடையில் குக்கி பழங்குடியினத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்ட வீடியோ வெளியாகி, இந்திய நாட்டையே உலுக்கியது. இந்த வன்முறையில் 200க்கும் மேற்பட்டோர் உயரிழந்தனர். 

இந்தச் சம்பவம் நடைபெற்று ஒரு ஆண்டு ஆகியும், இன்றுவரை மணிப்பூரில் கலவரம் ஓய்ந்தபாடில்லை. இந்த வன்முறையை ஆளும் மத்திய, மாநில பாஜக அரசு கண்டுக்கொள்ளாத காரணத்தால், இதுவரை அங்கு அமைதியான சூழல் ஏற்படவில்லை. இந்தியாவில் இப்படி ஒரு கொடூர வன்முறை நடந்த பின்னரும் பிரதமர் மோடி இதுவரை மணிப்பூருக்கு செல்லவில்லை. மேலும், அங்குள்ள பாஜக அரசும் இதுவரை கலைக்கப்படவில்லை என எதர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த நிலையில், தேர்தல் பிரச்சாரத்துக்காக மணிப்பூர் சென்ற மத்திய பாஜக அமைச்சர அமித்ஷாவிற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. மணிப்பூரில், `இன்னர் மணிப்பூர்’, `அவுட்டர் மணிப்பூர்’ என இரண்டு நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளது. அங்கு, வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு  நடைபெற இருக்கிறது. இதையொட்டி, கலவரம் நடைபெற்ற சமயத்தில் கூட செல்லாத மத்திய அமைச்சர் அமித்ஷா 11 மாதங்கள் கழித்து தேர்தல் பரப்புரைக்குச் சென்றார்.

அவருக்கு, பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சாலை மார்க்கமாக சென்ற அமித்ஷாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சாலைகளில் டயர்களுக்கு தீவைக்கப்பட்டது. பல இடங்களில் பாஜக வாகனங்களைப் பொதுமக்கள் முற்றுகையிட்டனர். அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது. சட்ட ஒழுங்கை கட்டுப்படுத்த தவறிய பாஜக வாக்கு சேகரிக்க மட்டும் மணிப்பூர் செல்வாதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு எழுப்பினர்.

இதனிடையே, மணிப்பூர் தலைநகரில் பாஜக சார்பில் நடத்தப்பட்ட கூட்டத்தில் பொதுமக்களின் எதிர்ப்புக்கு மத்தியிலும் அமித்ஷா பங்கேற்றார். ஆனால், அவர் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்ற முந்தைய நாட்களிலும் மணிப்பூரில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லமால் ஆயுதம் ஏந்திய இருப்பிரிவினருக்குள் ஏற்பட்ட கலவரத்தில் இரண்டு இளைஞர்கள் கொல்லப்பட்டதாகவும், உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்க வில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

மணிப்பூரில் இப்படியான அசாதரண சூழல் உள்ள நிலையில், தேர்தல் நேரத்தில் ஓட்டிற்காக அமித்ஷா பிரச்சாரம் நடத்திச் சென்றுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகள் முன்வைக்கின்றனர். இந்த முறை மணிப்பூரில் நாகா மக்கள் முன்னணி, தேசிய மக்கள் கட்சி உள்ளிட்ட 10 கட்சிகளை இணைத்து `மணிப்பூர் ஜனநாயகக் கூட்டணி'யை உருவாக்கியிருக்கிறது பா.ஜ.க. இந்தியா கூட்டணிக்காக காங்கிரஸ், சி.பி.எம்., சி.பி.ஐ., திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட 10 கட்சிகள் இணைந்துள்ளது. இந்த முறை பாஜக அரசின் மேலிருக்கும் அதிருப்தியால் இரண்டு தொகுதியிலும் காங்கிரஸ் கட்சியே வெல்ல வாய்ப்பிருப்பதாக அரசியல் வட்டாரங்களில் தகவல் சொல்லப்படுகிறது.

மணிப்பூரில் பிரச்சாரம் செய்ய வந்த அமித்ஷவிற்கு கடும் எதிர்ப்பு எழுந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது