
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலக்குண்டு அருகே சேவுகம்பட்டி பேரூராட்சியில் வேட்பாளர் பட்டியல் வெளியாவதற்கு முன்பே திமுக வேட்பாளர்கள் 15 பேர் வேட்புமனு தாக்கல் செய்து பரபரப்பை ஏற்படுத்தினர்.
திண்டுக்கல் கிழக்கு மாவட்டத்தில் திமுக சார்பில் பேரூராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகாத நிலையில் சேவுகம்பட்டி திமுக வேட்பாளர்கள் வனிதா தங்கராஜன், தனபால், கர்ணன் உள்ளிட்ட 15 பேர் திமுக ஒன்றிய செயலாளர் கே.பி. முருகன் முன்னிலையில் இன்று பேரூராட்சி அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

மொத்தமுள்ள 15 வார்டுகளில் இன்று எட்டு பெண் வேட்பாளர்கள், ஏழு ஆண் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர். ஆனால் திமுகவில் வேட்பாளர்கள் அறிவிக்கப்படாத நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் சேவுகம்பட்டி பேரூராட்சிக்கு மட்டும் திமுகவினர் முதல் முறையாக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.