Skip to main content

“என்னைய வீட்டுக்குள்ள விடுங்க” – ரெய்டு நடக்கும் இடத்தில் சி.வி.சண்முகம் வாக்குவாதம்

Published on 13/09/2022 | Edited on 13/09/2022

 

"The DMK government is trying to suppress the opposition parties"- CV Shanmugam alleges!

 

அ.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் ஆகியோரது வீடுகள், அவர்களுக்கு சொந்தமான இடங்களில் இன்று (13/09/2022) அதிகாலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். 

 

அதன் தொடர்ச்சியாக, சென்னையில் உள்ள முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அங்கு சென்ற அ.தி.மு.க.வைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம், தன்னை வீட்டிற்குள் அனுமதிக்குமாறு காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதைத் தொடர்ந்து, சி.வி.சண்முகத்தை வீட்டிற்குள் செல்ல காவல்துறையினர் அனுமதி வழங்கினர். 

 

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சி.வி.சண்முகம் எம்.பி., "கோவை ஒருங்கிணைந்த பேருந்து நிலைய பிரச்சனையில் ஜி ஸ்கொயர் சம்பந்தப்பட்டிருப்பதால் அதை திசை திருப்பவே சோதனை. அரசியல் காழ்ப்புணர்ச்சியால் பழிவாங்கவே எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. விலைவாசி, சொத்து வரி, மின் கட்டணம், கட்டுமானப் பொருட்கள் ஆகியவற்றின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. மக்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்; தவறிழைக்கும் தி.மு.க. தப்பவே முடியாது. எதிர்க்கட்சிகளை அடக்கி ஒடுக்க தி.மு.க. அரசு முயற்சிக்கிறது" எனத் தெரிவித்தார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“தமிழக அரசுக்கு நன்றி” - குகேஷ் நெகிழ்ச்சி!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Thank you to the Government of Tamil Nadu Gukesh 

கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி கனடாவில் நடைபெற்றது. இதில் சாம்பியனுக்கான இறுதி போட்டியின் கடைசி சுற்றில் இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் குகேஷ் (வயது 17) அமெரிக்காவின் நகமுராவை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் இருவரும் 1/2 புள்ளிகள் பெற்றனர். இதன் மூலம் 14 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியின் முடிவில் 9 புள்ளிகள் பெற்று குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றார். நகமுரா 8.5 புள்ளிகள் மட்டுமே பெற்றிருந்தார்.

இந்த தொடரை வென்றதன் மூலம் உலக செஸ் சாம்பியன்ஷிப் செஸ் போட்டியில் சீனாவில் டிங் லிரெனை எதிர்கொள்ள குகேஷ் தகுதி பெற்றுள்ளார். மேலும் இந்தத் தொடரை வென்று இளம் வயதில் கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடரை வெல்லும் நபர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். மூத்த செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்திற்குப் பின் செஸ் கேண்டிடேட்ஸ் தொடரை வெல்லும் இந்திய வீரர் குகேஷ் ஆவார்.

அதே சமயம் செஸ் வீரர் குகேஷுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்த பதிவில், “அபாரமான சாதனை படைத்த குகேஷுக்கு வாழ்த்துகள். 17 வயதில் கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் செஸ் தொடரை வென்ற இளம் வீரர் என்ற வரலாற்றை படைத்துள்ளார். உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்திற்காக சீனாவின் டிங் லிரனுக்கு எதிரான போட்டியிலும் குகேஷ் வெல்ல வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் கேண்டிடேட்ஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற பிறகு கனடாவில் இருந்து சென்னை வந்த செஸ் வீரர் குகேஷூக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “இந்த வெற்றி எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்று. இந்த தொடரில் முதல் இடம் பிடிக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. சென்னை கிராண்ட் மாஸ்டர் தொடரை நடத்திய தமிழக அரசுக்கு நன்றி. அதாவது கேண்டிடேட்ஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்ல சென்னை கிராண்ட் மாஸ்டர் தொடர் உதவியாக இருந்தது. உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன்” எனத் தெரிவித்தார்.

முன்னதாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி - 2023, சென்னை லீலா பேலஸில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்றது. இந்தப் போட்டியில் தமிழக வீரர் குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது. 

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.