DMK Former Minister Condemned ADMK

கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் திமுக சார்பில் கரோனா ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ளசிதம்பரம் பகுதி ஆட்டோ தொழிலாளர்கள் சுமார் 600-க்கும் மேற்பட்டவர்களுக்கு அரிசி, காய்கறி அடங்கிய தொகுப்பினை கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வழங்கினார். இதனை ஆட்டோ தொழிலாளர்கள் சமூக இடைவெளியுடன் நீண்ட வரிசையில் நின்று பொருட்களை வாங்கி சென்றனர். இதில் சிதம்பரம் நகர செயலாளர் செந்தில்குமார், மாவட்ட நிர்வாகிகள் ஜேம்ஸ்.விஜயராகவன், அப்பு சந்திரசேகர். சிதம்பரம் நகர நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, பாலு, வெங்கடேசன் உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Advertisment

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பன்னீர்செல்வம், " தமிழக அரசு கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை சரியாக செய்யவில்லை. கோயம்பேடு மார்கெட்டில் வேலை செய்த நபர்களை பரிசோதனை செய்யாமல் அவர்கள் அனைவரும் சொந்த ஊர்களுக்கு வந்துள்ளனர். இதனால் ஆங்காங்கே இப்போது தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த இரண்டு நபர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஊரடங்கில் எந்த அரசியல் கட்சித் தலைவரும் வெளிவராத நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் மட்டுமே வெளிவந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒன்றிணைவோம் திட்டத்தின் மூலம் நிவாரணம் வழங்கி வருகிறார்.

Advertisment

தமிழகம் முழுவதும் திமுக நிவாரணம் வழங்கி வருகிறது. இதை பார்த்து ஆளும்கட்சி வயிற்றெரிச்சல் அடைந்து தடுக்க பார்கிறார்கள். தமிழகத்தில் வைரஸ் பரிசோதனை மையங்கள் அதிக அளவில் இல்லை. அம்மா உணவகத்தில் விலையில்லா உணவு அரசு பணத்தில்செலவு செய்யப்படுகிறதா? அல்லது ஆளுங்கட்சியினர் பணமா என தெரியப்படுத்தவும். ரூ1000 மட்டும் நிவாரணத்தை கொடுத்துவிட்டு மக்களின் வாழ்வாதரத்தை முடக்கியுள்ளனர். இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். பாதிக்கப்படும் மக்களுக்கு திமுக தலைவர் ஒன்றிணைவோம் திட்டத்தின் மூலம் தொடர்ந்து உதவிகள் செய்யப்படும் பொதுமக்கள் கவலையடைய வேண்டாம்" என தெரிவித்தார்.