DMK former district deputy secretary car burnt

திமுகவிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டவரானதிருவண்ணாமலை தெற்கு மாவட்டதிமுகவின் முன்னாள் மாவட்ட துணை செயலாளர், சாவல்பூண்டி ஊராட்சி மன்றத்தலைவர் சாவல்பூண்டி சுந்தரேசன் வீட்டுக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மீது ஒருவர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் திருவண்ணாமலை திமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

திமுக குறித்து பேசிய ஆடியோ வெளியாகி சர்ச்சையானதால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டவர் சாவல்பூண்டி சுந்தரேசன். அதன்பின் திமுகவின் வரலாறு, திமுகவின் முன்னணி தலைவர்கள் வரலாறு, திருவண்ணாமலை மாவட்டத்தில் திமுகவின் வளர்ச்சி, அவருடைய தனிப்பட்ட கட்சிப் பணிகள், கட்சி தொண்டர்களுடைய மனநிலை, கட்சி தலைவர்களுடன் கலைஞர், முதலமைச்சர் ஸ்டாலின் போன்றவர்களுடன் தனக்கு இருந்து அனுபவங்கள் போன்றவற்றை குறித்து முகநூலில் தொடர்ச்சியாக எழுதியும் வீடியோவாகவும் பதிவிட்டு வருகிறார்.

Advertisment

இந்நிலையில் ஜூன் 11ஆம் தேதி மாலை 4:30 மணி அளவில் அவரது வீட்டுக்கு வெளியே நிறுத்தி இருந்த கார் மீது ஒருவர் வந்து பெட்ரோல் ஊற்றி தீ வைத்து விட்டு செல்வது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதனை அக்கம் பக்கத்தினர் பார்த்துவிட்டு ஓடி வந்து தீயை அணைத்ததோடு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சாவல்பூண்டி சுந்தரேசனுக்கு தகவல் கூறியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து காவல்துறைக்கு தரப்பட்ட புகாரினை தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் நேரில் வந்து விசாரணை நடத்திவிட்டுச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து சாவல்பூண்டி சுந்தரேசன் கூறும் பொழுது, தனக்கு எதிரிகள் யாரும் இல்லை தானும் யாரையும் எதிரியாக நினைப்பதில்லை எனக் கூறியுள்ளார். இந்த தீ வைப்பு சம்பவம் திருவண்ணாமலை மாவட்ட திமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காரணம் இரண்டு வாரங்களுக்கு முன்பு திமுகவின் கலை இலக்கிய பேரவையின் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அமைப்பாளராக உள்ள டிவிஎம் நேரு மீதுஅடையாளம் தெரியாத இருவர் இரவில் தாக்குதல் நடத்தினர். அந்த குற்றவாளியையே இன்னும் காவல்துறை கண்டுபிடிக்கவில்லை. இந்நிலையில் மற்றொரு பிரமுகர் காருக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்த சம்பவங்களால் திருவண்ணாமலை அரசியல் பிரமுகர்களிடையே பரபரப்புஏற்பட்டுள்ளது.