/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/bjk.jpg)
வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில், திமுக 21 வார்டுகளில் வெற்றி பெற்றது. அதிமுக 10 இடங்களிலும், காங்கிரஸ், மதிமுக, பாஜக தலா ஒரு இடத்திலும் சுயேட்சைகள் இரண்டு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளார்கள். திமுக கூட்டணியில் 23 பேரும், அதிமுக, பாஜக, சுயேட்சைகள் என 13 கவுன்சிலர்களும் இருந்தனர். நகரமன்ற தலைவர் தேர்தலில் திமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் ந.செ சௌந்தர்ராஜன் வெற்றி பெற்றார்.
துணைத்தலைவர் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் விஜயன் திமுக கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்டார், அவரும் மனுத்தாக்கல் செய்தார். அதிமுக சார்பில் பூங்கொடி நிறுத்திப்பட்டார். வாக்கு எண்ணிக்கையில் இருவரும் 18 வாக்குகள் வாங்கி சமமாக இருந்தனர். குலுக்கல் சீட்டுப் போடப்பட்டு எடுத்ததில் அதிமுக பூங்கொடி மூர்த்தி வெற்றி பெற்றார்.
இதில் அதிருப்தியாகியுள்ள திமுகவின் ஒருதரப்பினர், " அதிமுகவின் பலம் 10, துணைத்தலைவருக்கு நின்றவர் கூடுதலாக 8 வாக்குகள் வாங்கியுள்ளார். அந்த வாக்குகள் யாருடையது என்கிற கேள்வி எழுந்துள்ளது. பாஜக, சுயேச்சைகள் இருவர் அதிமுகவுக்கு வாக்களித்ததாக வைத்துக்கொண்டாலும், மீதி 5 வாக்குகள் நிச்சயமாக எங்கள் கட்சி கவுன்சிலர்கள் தான் வாக்களித்துள்ளார்கள் என்பது உறுதியாகியுள்ளது. இப்படி கட்சிக்குத் துரோகம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் தானே? கட்சித் தலைமை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கிய இடங்களில் திமுகவினர் போட்டிப்போட்டு வெற்றி பெற்றிருந்தால் அந்த பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என உத்தரவிட்ட எங்கள் தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இப்படி கட்சி மாறி ஓட்டுப்போட்டவர்களைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்தால்தானே சரியாக இருக்கும், கட்சியில் கட்டுப்பாடு இருக்கும், அதைச் செய்ய மறுப்பது ஏன்" என்கிற கேள்வியை எழுப்புகின்றனர்.
தற்போது சமூக வலைத்தளத்தில் சில புகைப்படங்கள் வலம் வருகின்றன. சேர்மன் சீட் தனக்குத் தரவேண்டும் எனக்கேட்ட திமுக நிர்வாகி கோபாலகிருஷ்ணன், அதிமுக சார்பில் தற்போது வெற்றி பெற்று துணைத்தலைவராகியுள்ள பூங்கொடி அவரது கணவர் மூர்த்தி இருவருடன் பொது நிகழ்ச்சி மற்றும் திறப்பு விழா ஒன்றில் கலந்துகொள்ளும் போட்டோ வெளியாகியுள்ளது. இவர்தான் அந்த துரோகி, இவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கட்சித் தலைமைக்கும், மாவட்டச் செயலாளர் நந்தகுமாரிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காதது ஏன் எனக் கேள்வி எழுப்புகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2019-02/02 Raja.jpg)