குளம், ஏரி தூர்வாரப்பட்டாலும் கான்கிரீட் கட்டுமானம் அமைக்கப்படாது என்ற அமைச்சர் கே.என்.நேருவின் அறிவிப்புக்கு தி.மு.க.வின் சுற்றுச்சூழல் அணியின் மாநிலச் செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி நன்றி தெரிவித்துள்ளார்.
இது குறித்து கார்த்திகேய சிவசேனாபதி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "நேற்று காலை 11.30 மணிக்கு மாண்புமிகு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவைச் சந்தித்து கோவை மாநகரில் உள்ள குளங்களில் தி.மு.க.வின் சுற்றுச்சூழல் அணி மற்றும் கோவையிலுள்ள சுற்றுச்சூழல் அமைப்புகள் இணைந்து நடத்திய ஆய்வு தொடர்பான அறிக்கையினை வழங்கினோம்.இனி குளங்கள்,ஏரிகள் எங்கு தூர்வாரப்பட்டாலும் கான்கிரீட் தளங்கள் அமைக்கப்படாமல் சுற்றுச்சூழல் பேணி பாதுகாக்கப்படும் என்ற முடிவை அமைச்சர் தற்போது அறிவித்துள்ளார்.உடனடி நடவடிக்கைக்காக தமிழக முதல்வருக்கும், அமைச்சருக்கும் மனமார்ந்த நன்றி" எனத் தெரிவித்துள்ளார்.