ADVERTISEMENT

'கவர்ச்சிகரமான பொய்களைப் பேசி மக்களை திமுக ஏமாற்றி வருகிறது'-எடப்பாடி பழனிச்சாமி பேச்சு   

06:22 PM Apr 04, 2024 | kalaimohan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

ADVERTISEMENT

இந்நிலையில் கோவை மாவட்டம் காரமடையில் நீலகிரி அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வனை ஆதரித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார். கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில், 'அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படும் எனக் கூறி அதிமுக அரசு ஏமாற்றி விட்டது. படித்தவர்கள் மட்டுமல்லாது படிக்காதவர்கள் என அனைத்து தரப்பையும் திமுக ஏமாற்றி வருகிறது. கேஸ் சிலிண்டருக்கு 100 ரூபாய் குறைக்கப்படும் என கூறி திமுக ஏமாற்றிவிட்டது. திமுக ஆட்சியில் அரிசி, சர்க்கரை உள்ளிட்ட மளிகை பொருட்கள் விலை 40 சதவீதம் உயர்ந்து விட்டது. விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த முடியாத தமிழக முதல்வர் 'நீங்கள் நலமா' என தொலைபேசியில் மக்களிடம் நலம் விசாரிக்கிறார். கவர்ச்சிகரமான பொய்களை பேசிப் பேசி மக்களை திமுக ஏமாற்றி வருகிறது. மாணவர்களுக்கு கல்விக் கடன் தள்ளுபடி என்று திமுக சொன்ன வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை.

ADVERTISEMENT

பல ஆயிரம் பெண்களுக்கு திருமணம் நடக்க காரணமாக இருந்த தாலிக்கு தங்கம் திட்டத்தையும் திமுக அரசு நிறுத்திவிட்டது. அதிமுக கொண்டு வந்த திட்டம் என்பதால் அதனைத் திட்டமிட்டு திமுக அரசு நிறுத்திவிட்டது. கடன் வாங்குவதில், போதைப்பொருள் புழக்கத்தில், ஊழல் செய்வதில் திமுக அரசு நம்பர் ஒன் இடத்தில் உள்ளது. அதிமுகவை அவதூறாக பேசுபவர்களுக்கு நான் மட்டும் அல்ல அதிமுகவின் தொண்டன் கூட பதிலடி கொடுப்பான்'' என்று பேசிய எடப்பாடி பழனிச்சாமி, 'சத்தியம் தவறாத உத்தமன் போலவே நடிக்கிறார்' என்ற எம்ஜிஆர் பாடலை பாடி விமர்சனம் செய்தார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT