
தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடரில் இன்று (28/08/2021), மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான தனி தீர்மானத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொண்டுவந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் வெளியேறிய நிலையில், காங்கிரஸ், விசிக, பாமக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் குரல் வாக்கெடுப்பின் மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், "மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் என்னைப் புகழ்ந்து பேசினால் திமுகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். எதையும் லிமிட்டாக வைத்துக்கொள்ளுங்கள். நேற்றே இது தொடர்பாக கட்டளையிட்டேன். நேரத்தின் அருமை கருதி மானியக் கோரிக்கை விவாதத்தில் என்னைப் பற்றி பேசுவதைத் தவிர்க்க வேண்டும். திமுக சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் மீது நடவடிக்கை எடுப்பேன்" எனக் கூறி தனது உரையை முடித்துக்கொண்டார்.
புகழ்ந்து பேச வேண்டாம் எனக் கூறியும் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் புகழ்ந்து பேசியதால், திமுகவைச் சேர்ந்த அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் முதலமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.