Skip to main content

இடஒதுக்கீடு, மின் கட்டணக் குறைப்பை வலியுறுத்தி ஜூலை 21 திமுக போராட்டம் அறிவிப்பு! மா.செக்கள் கூட்டத்தில் அரசை கண்டித்து தீர்மானம்...

M.K.Stalin

 

மின் கட்டண உயர்வு, உள்ளாட்சி அமைப்புகள் புறக்கணிப்பு, திமுகவினர் மீது பொய் வழக்கு, இறுதி செமஸ்டர் தேர்வை ரத்து செய்யாமல் இருப்பது, கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியிடம் தாரை வார்த்தல், விவசாயிகளுக்கான இலவச மின் திட்டத்தை ரத்து செய்யும் புதிய மின்சார சட்டத் திருத்தம் போன்ற அரசின் பல்வேறு நடவடிக்கைகளைக் கண்டித்து ஜூலை 21 அன்று திமுக சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் வீடுகளின் முன் கறுப்பு கொடி ஏற்றி, கண்டன முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாக இன்று நடைபெற்ற திமுக மாவட்ட செயலாளர்கள் உடனான இணையதள கலந்துரையாடலில் முடிவு செய்துள்ளனர்.

 

இன்று (16-07-2020), திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசைக் கண்டித்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 

 

“கரோனா சங்கிலித்தொடரை” அறுத்து தடுப்பதிலோ, நோய்த் தொற்றாளர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சையிலோ அ.தி.மு.க. அரசு, வெளிப்படைத்தன்மையுடன் நடந்துகொள்ளாமல் - உயிர் காக்கும் சிகிச்சைக்கான கருவிகள், மருந்துகள், கிருமிநாசினிகள் கொள்முதலிலும், மனசாட்சி சிறிதும் இன்றி, ஊழல் - முறைகேடுகள் செய்வதாக அதிமுக அரசின் மீது குற்றச்சாட்டினை முன்வைத்து இக்கூட்டத்தில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு கண்டனங்களை இக்கூட்டத்தில் பதிவு செய்துள்ளனர்.

 

DMK party online meeting

 

இது தொடர்பாக திமுக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “உயர் நீதிமன்ற மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்காகக் காத்திராமல், ஏற்கனவே உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு மற்றும் தமிழகத்தில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீடுச் சட்டத்தின் கீழ், மத்திய தொகுப்பிற்கு மாநிலங்கள் அளிக்கும் முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான இடங்களில் அகில இந்திய அளவில் 27 சதவீத இடஒதுக்கீட்டையும், தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோர்க்கு 50 சதவீத இடஒதுக்கீட்டையும் செயல்படுத்திட வேண்டும் எனவும், இனிவரும் காலங்களில் மத்திய தொகுப்பிற்கு மாநிலங்கள் மருத்துவக் கல்வி இடங்களை அளிக்கும் முறையை அறவே ஒழித்திட வேண்டும்.

 

‘கரோனா பேரிடர் காலத்திலும் செப்டம்பர் 13-ம் தேதி நீட் தேர்வு நடக்கும்’ என்ற மத்திய அரசின் அறிவிப்பைக்கூட எதிர்க்கவும் முடியாமல், கூனிக்குறுகி வாய்பொத்தி நிற்பதற்கு இந்த கூட்டம் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. ஆகவே, செப்டம்பர் 13-ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நீட் தேர்வை ரத்து செய்யும் அவசரச் சட்டத்தைக் கொண்டுவர வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தும் இக்கூட்டம், “பிளஸ் டூ மதிப்பெண்கள் அடிப்படையில்தான் மருத்துவக் கல்வி சேர்க்கை நடைபெறும்” என்று உடனடியாக அவசரச் சட்டம் கொண்டுவந்து நிறைவேற்றிட வேண்டும் என்று அ.தி.மு.க. அரசையும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

 

M.K.Stalin


காவல் நிலைய மற்றும் நீதிமன்றக்  காவல் மரணங்கள்,  இனிமேலாவது ஏற்பட்டுவிடாமல் இருக்க விரிவானதொரு பரிந்துரையை மாநில சட்ட ஆணையத்திடமிருந்து பெற்று - அதன் அடிப்படையில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும்.

 

மாநில அதிகாரங்களுக்கும், விவசாயிகளின் இலவச மின்சாரத்திற்கும் எதிராக உள்ள மின்சாரத் திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற அ.தி.மு.க. அரசு தொடர்ந்து வலியுறுத்த வேண்டும்; எக்காரணம் கொண்டும், எந்த நிலையிலும், விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை பலிபீடத்தில் ஏற்றிவிடக் கூடாது.

 

‘கூட்டுறவு’ என்ற சீரிய சித்தாந்தம் சிதைந்து போகாமல் கூட்டுறவு இயக்கம் தொடர்ந்து பாதுகாக்கப்படவும், மக்களின் தேவைகள் உரிமைகளின் அடிப்படையில் நிறைவேற்றப்படவும், மத்திய பா.ஜ.க. அரசு அவசர சட்டத்தைத் திரும்பப்பெற வேண்டும்; பாரம்பரியமான கூட்டுறவு இயக்கம் பலியாவதற்கு அ.தி.மு.க. அரசு மௌன சாட்சியாக இருத்தல் ஆகாது.

 

நபார்டு அளித்த நிதியை தவறாகப் பயன்படுத்தியுள்ள விவகாரத்தில் அனைத்து கூட்டுறவு வங்கிகளும், சங்கங்களும்  நகைக் கடன் வழங்கக் கூடாது என்று அ.தி.மு.க. அரசு வாய்மொழி உத்தரவு போட்டிருப்பது உண்மை என்பதால், நபார்டிலிருந்து வந்த உத்தரவு என்ன என்பதை அ.தி.மு.க. அரசு வெளியிட்டு, நகைக்கடன் வழங்குவதை தொடர்ந்திட வேண்டும்.

 

தி.மு.க. சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் ஊராட்சி மன்றங்களுக்கு நிதி ஒதுக்காமல் புறக்கணித்து, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை முடக்கி வைத்து - ஊழலை மையப்படுத்தி, அதில் கட்டுப்பாடில்லாமல் எப்போதும் திளைத்துக் கொண்டும், நாவடக்கமின்றி நடமாடிக்கொண்டும்  இருக்கும் உள்ளாட்சித் துறை அமைச்சர் திரு. வேலுமணிக்கு இக்கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

 

M.K.Stalin

 

ஊரடங்கை பிறப்பித்தது - மக்கள் வெளியில் போனால் கோடிக்கணக்கான ரூபாயை அபராதமாக வசூலித்தது - ஆயிரக்கணக்கான வாகனங்களை பறிமுதல் செய்துவிட்டு, ஊரடங்குகால மின்கட்டணத்தை குறைக்க கோரினால் மட்டும், ‘நீங்கள் வீட்டிற்குள்ளேயே இருந்து மின்சாரத்தை அதிகமாகப்  பயன்படுத்தியுள்ளீர்கள்; அதெல்லாம் கட்டணத்தைக் குறைக்க முடியாது’ என்று மக்கள் மீதே  பழி சுமத்துகிறது அ.தி.மு.க. அரசு.

 

அ.தி.மு.க. அரசின் இந்த கருணையற்ற போக்கைக் கண்டித்தும், ‘ரீடிங்’ எடுத்ததில் உள்ள குழப்பங்களை மின் நுகர்வோருக்கு சாதகமான முறையில் கணக்கிட்டு - ஊரடங்கு கால மின்கட்டணத்தை  குறைக்க வேண்டும் – குறிப்பாக, முந்தைய மாதத்திற்கு செலுத்திய பில் கட்டணத்தைக் குறைப்பதற்குப் பதில் அந்தத் தொகைக்குரிய “யூனிட்டுகளை” கழிக்க வேண்டும், அப்படிக் குறைக்கப்பட்ட மின்கட்டணத்தை எளிய மாதத் தவணைகளில் செலுத்த மக்களுக்கு அனுமதி வழங்க வேண்டும்”

 

1.  கரோனா நோய்த் தொற்று தீவிரமாகப் பரவிவருவதைத் தடுக்கவும், மக்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றிடவும் உருப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும்!

2. பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோர்க்கு மருத்துவக் கல்வியில் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கிடுக!

3.நீட் தேர்வை ரத்து செய்து, ‘பிளஸ் டூ’ மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்களைச் சேர்க்க வேண்டும்.

4. ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலையில் விரைந்து நீதி கிடைக்க வேண்டும்!

5. விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் மின்சார திருத்தச் சட்டம் 2020-ஐ திரும்பப்பெற வேண்டும்.

6. கூட்டுறவு வங்கிகளை, ரிசர்வ் வங்கியிடம்  தாரைவார்த்திடக் கூடாது!

7. மாணவர்களின் இறுதி செமஸ்டரை ரத்து செய்க! அனைத்து செமஸ்டர்களையும் ரத்து செய்க!

8. தி.மு.க. வெற்றிபெற்ற உள்ளாட்சி அமைப்புகளைப் புறக்கணிக்கும் அ.தி.மு.க. அரசுக்குக் கண்டனம்!

9. திருப்போரூர் கழக எம்.எல்.ஏ. மீதான பொய் வழக்கிற்கு கண்டனம்!
புலனாய்வை சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்ற வேண்டும்.

10. ‘வீட்டை விட்டு வெளியே போனால் அபராதம்’; ‘வீட்டிற்குள்ளே இருந்தால் அநியாய மின்கட்டணமா?’

 

இவ்வாறு அந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் திமுக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்