சுதந்திரப் போராட்ட தியாகி வ.உ.சி.யின் 88வது குருபூஜை விழாவை முன்னிட்டு திருச்சி நீதிமன்றம் அருகில் உள்ள அவரது சிலைக்கு நாம் தமிழர் கட்சி சார்பில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிர்வாகிகளுடன் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அவர், “தி.மு.க.வும், பா.ஜ.க.வும் கள்ள உறவில் அல்ல, நல்ல உறவில் நேரடியான கூட்டணியில் தான் உள்ளார்கள். இதற்கு உதாரணம் ஜெயலலிதா நினைவு நாணயம் வெளியீட்டு விழாவில் அ.தி.மு.க.வுடன் கூட்டணியிலிருந்தும் பா.ஜ.க. பங்கேற்கவில்லை. கலைஞர் நாணயம் வெளியீட்டு விழாவில் தி.மு.க. கூட்டணியில் இல்லாவிட்டாலும் பா.ஜ.க. பங்கேற்றது .இதுதான் நேரடியான உறவுக்கு சாட்சி. கூட்டணி என்பது தற்கொலைக்கு சமமானது. எங்கள் கால்களை நம்பிதான் எங்கள் லட்சிய பயணம் தொடரும்.
நாங்கள் 2026 சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துத் தான் போட்டியிடுவோம். அ.தி.மு.க. வலுவான கூட்டணி அமைக்கும் என எடப்பாடி பழனிச்சாமி பேசி வருவது அவரின் நம்பிக்கைதான். ஆட்சியாளர் தன் ஆட்சி சிறப்பாக இருக்கிறது என அவரே கூறினால் ஆட்சி கொடுமையாக இருக்கிறது என்று தான் அர்த்தம். ஆட்சி சிறப்பாக இருக்கிறது என மக்கள் கூற வேண்டும்” என்றார்.
பின்னர் நிருபர்கள் சீமானிடம், விஜய் அ.தி.மு.க.வுடன் தமிழக வெற்றி கழகம் கூட்டணியில் இல்லை என்று அறிக்கை வெளியிட்டுள்ளாரே என்று கேட்டதற்கு, “இதை என்னிடம் கேட்க வேண்டாம். நாங்கள் என்ன செய்கிறோம் என்று மட்டுமே கேளுங்கள். நாங்கள் தனித்துப் போட்டியிடுகிறோம்” என்றார்.