DMK and ADMK melee DMK member passes away in karur

Advertisment

கரூர் மாவடியான் பகுதியில் விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவிற்கு அதிமுக மற்றும் திமுகவினர் இருதரப்பினரும் தனிதனியே பேனர்கள் வைத்துள்ளனர். நேற்றுமுன்தினம் இந்த விழா முடிவுற்றதும் இரவு திமுகவினரின் பேனரை அதிமுகவினர் கழட்டியதாகக் கூறப்படுகிறது.

இதனை அதேபகுதியைச் சேர்ந்த திமுகவின் தொண்டர் பிரபாகரன்(55) மற்றும் அவரது மகன் விக்னேஷ்(28) ஆகிய இருவரும் எங்கள் பேனரை நீங்கள் ஏன் அகற்றுகிறீர்கள் என கேட்டதாகவும் அதனால் இருதரப்பினருக்கிடையே தகராறு ஏற்பட்டதாகவும் தெரிகிறது. இதில் காயமடைந்த இருவரும் முதலுதவி பெற்றுகொண்டு வீடு திரும்பியுள்ளனர். அதன்பிறகு பிரபாகரனுக்கு நெஞ்சுவலி ஏற்பட தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியிலேயே பிரபாகரனின் உயிர் பிரிந்துள்ளது. தற்போது பிரபாகரனின் உடல் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

Advertisment

தகராறுக்கு பிறகு பிரபாகரனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு இறந்ததால், அவரது உறவினர்கள் மற்றும் திமுகவினர் என 200க்கும் மேற்பட்டோர் கரூர் திருச்சி சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்தத் தகவல் அறிந்து மாவட்ட எஸ்.பி. பகலவன் அப்பகுதிக்கு வந்தார். மேலும் அதிரடிப்படையினர் மற்றும் போலீசார் குவிக்கப்பட்டனர். மாவட்ட திமுக பொறுப்பாளர் செந்தில்பாலாஜியும் வந்தார். எஸ்பி மற்றும் கோட்டாட்சியர் பாலசுப்ரமணியன் ஆகியோர் அவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். விசாரணை மேற்கொள்ளும் அதிகாரியை மாற்ற வேண்டும். மரணத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தரப்பில் வலியுறுத்தப்பட்டது. நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.