ஒன்றியக் குழு கூட்டத்தில் தி.மு.க கூட்டணி கவுன்சிலர்கள் வெளிநடப்பு!

DMK alliance councilors walk out in union committee meeting!

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி ஒன்றிய குழுக் கூட்டம் ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. இதற்கு ஒன்றியக் குழு தலைவர் கலையரசி கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவஞானசுந்தரம், சதிஷ்குமார், ஒன்றிய குழு துணைத் தலைவர் குணசுந்தரி சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலாளர் உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

அனைத்து கட்சி உறுப்பினர்களும் கலந்துகொண்ட இந்த கூட்டத்தில் பேசிய ராஜபாண்டியன் (தி.மு.க.) "கடந்த இரண்டரை ஆண்டில் பொதுநிதி எவ்வளவு வந்துள்ளது. எந்தெந்த வார்டுகளில் எவ்வளவு பணி நடந்துள்ளது உள்ளிட்ட விவரங்கள் வேண்டும் என்று கடந்த கூட்டத்திலேயே கேட்டோம். இதுவரை பதில் வரவில்லை" என்றார். கஸ்தூரி செல்வராசு (பா.ம.க) பேசும்போது, "எனது பகுதியில் தண்ணீர் பிரச்சனை அதிகமாக உள்ளது. குடிநீர் பைப் லைன் போடப்பட்டு அந்த வேலை பாதியிலேயே நிற்கிறது. அதை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எப்போது கேட்டாலும் நிதி வரவில்லை என்று கூறுகிறீர்கள். மக்களிடம் பதில் கூற முடியவில்லை" என்றார். அதற்கு பி.டி.ஒ சதீஷ்குமார், “குடிநீர் பைப் லைன் பணிகள் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். நடைபெற்ற பணிகள் குறித்து விவரங்கள் விரைவில் தரப்படும்" என்றார்.

DMK alliance councilors walk out in union committee meeting!

அதனைத் தொடர்ந்து தி.மு.க கவுன்சிலர்கள் ராஜபாண்டியன், நட்ராஜ் மற்றும் த.வா.க, வி.சி.க உள்ளிட்ட தி.மு.க. கூட்டணி கட்சிகளின் உறுப்பினர்கள் 12 பேர், "பொது நிதி இதுவரை எவ்வளவு வந்துள்ளது. எந்தெந்த உறுப்பினர் பகுதியில் எவ்வளவு வேலை நடந்துள்ளது என விவரம் சென்ற கூட்டத்தில் கேட்டோம். தருகிறோம் என்று சொல்கிறீர்கள். ஆனால் இதுவரை பதில் கொடுக்கவில்லை. வார்டுகளில் வளர்ச்சிப் பணிகள் ஏதும் நடைபெறாததால் பொதுமக்களிடம் எங்களால் பதில் கூறமுடியவில்லை. இதைக் கண்டித்து மன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்கிறோம்" எனக் கூறி வெளிநடப்பு செய்தனர்.

இந்த கூட்டத்தில் மொத்தமுள்ள 29 உறுப்பினர்களில் அ.தி.மு.க. பா.ம.க உட்பட 17 உறுப்பினர்கள் கலந்து கொண்ட நிலையில் குடிநீர், சாலை வசதி, தெருவிளக்கு உட்பட வளர்ச்சி பணிக்காக 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

admk Cuddalore pmk
இதையும் படியுங்கள்
Subscribe