Skip to main content

தலைக்கு விலை; ஓட்டுக்கும் விலை! செய்வது இன்னதென்று அறியாதிருக்கிறார்களா?  -எடப்பாடி பிரச்சார எழுச்சி பின்னணி! 

Published on 06/04/2019 | Edited on 06/04/2019

 

திமுகவோ, அதிமுகவோ, தலைவர்கள் பிரச்சாரம் செய்யும் இடங்களில் திரளாகத் தலைகள் தென்படாவிட்டால், மக்களின் அபிமானத்தை இழந்துவிட்டதாக,  அந்தத் தலைவர்கள் குறித்து விமர்சனங்கள் எழுகின்றன.  ஆள் இல்லாத கடையில் டீ ஆற்றுவதாக, அந்தத் தலைவர்கள் குறித்து போட்டோவுடன் மீம்ஸ் வெளியிட்டு கலாய்த்து விடுகின்றனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும்கூட இதற்குத் தப்பவில்லை.  

 

சேலத்தில் வாக்கு சேகரித்தபோது, வழிநெடுகிலும் ஆட்களே இல்லாத சாலையில்தான் அவர் கும்பிட்டுச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.  இனிமேல், எடப்பாடி பழனிசாமிக்கு அப்படி ஒரு நிலை வரக்கூடாது என்ற தெளிவோடு  அதிமுகவினர் செயல்பட ஆரம்பித்துவிட்டனர்.  பிறகென்ன? எடப்பாடி பிரச்சாரம் செய்யும் அத்தனை பாய்ண்ட்டுகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.   விருதுநகர் பாராளுமன்றம் மற்றும் சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செவல்பட்டி, தாயில்பட்டி, படந்தால் விலக்கு, சாத்தூர், அனுப்பன்குளம் போன்ற பாய்ண்ட்டுகளில் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்தபோது உடன் பயணித்தோம். அப்போது, கள்ளம் கபடமற்ற கிராமத்து மனிதர்களிடம் பேச்சு கொடுத்தோம். 

 

e

 

குட்டியானை ஓட்டுநர் குஷி!

செவல்பட்டியில் குட்டியானை எனப்படும் டாடா ஏஸ் சரக்கு வாகன ஓட்டுநரான கிருஷ்ணமூர்த்தி, “போனவாரம் விறகு லோடு ஏத்திட்டு போனேன். அப்ப ஊர்க்காரங்க நாலுபேரையும் ஏத்திக்கிட்டேன். போற வழியில போலீஸ் பிடிச்சிருச்சு. முன்னூறு ரூபாய் பைன் கட்டித் தொலைச்சேன். இப்ப அதே குட்டியானைல ட்ரிப்புக்கு 20 பேர்ன்னு ரெண்டுதடவை கூட்டிட்டு வந்திருக்கேன். போலீஸ் கண்ணு முன்னாலதான் இறக்கிவிடறேன். எந்தப் போலீசும் கேள்வி கேட்கல. என்ன இருந்தாலும் எடப்பாடி முதலமைச்சர் இல்லியா? அவரு பேசுறத கேட்கிறதுக்கு ஆளுங்கள கூட்டிட்டு வந்திருக்கேன்ல. அதான், என்னோட குட்டியானைக்கு இத்தனை மரியாதை.” என்று குஷியாகச் சிரித்தார்.  

 

‘ஏற்காடு’ பழனிசாமி காமெடி! 

 

k

 

“வருகிறார்.. வருகிறார்.. ஏற்காடு பழனிசாமி வந்துகொண்டிருக்கிறார்..” என்று ஒலிபெருக்கியில் முதல்வரின் ஊரை ஒரு ஆசாமி மாற்றிச்சொல்ல, “அடே..ஏற்காடு இல்லடா.. எடப்பாடி..” என்று ஒருவர் திருத்தினார். இதுபோன்ற காமெடிகள், காத்திருந்த கூட்டத்தைச் சிரிக்க வைத்ததென்றால்,  கேரள செண்டை மேளமோ பொதுஜனத்தின் காதுகளை அதிரச் செய்தது.

 

ar

 

அக்கா அரசலட்சுமி எட்டாம் வகுப்பும். தங்கை மகிதா நான்காம் வகுப்பும் படிக்கிறார்கள். கூட்டத்தோடு கூட்டமாக அவர்களும் நின்றுகொண்டிருந்தனர்.   கையில் அதிமுக கொடியைச் சுருட்டி வைத்திருந்த அரசலட்சுமியிடம் ‘வர்றது யாருன்னு தெரியுமா?’ என்று கேட்டோம். “எடப்பாடி” என்று சொல்லத் தெரிந்த அரசலட்சுமி, முதல்வரின் பெயரை மறந்துபோனாள். சகோதரிகள் இருவரும் எடப்பாடி பழனிசாமிதான் தமிழக முதல்வர் என்பதை அறிந்திருக்கவில்லை. தன் இரு குழந்தைகளையும் அழைத்து வந்திருந்த ராக்கம்மா நம்மிடம், 

 

r

 

“அய்யா.. குடியிருக்க ஒரு வீடு இல்ல. பயராபீஸ் வேலை இல்லாம நாலு மாசமா ரொம்ப கஷ்டப்பட்டோம். கடனாயிப் போச்சு. இங்கே வர்றவரு (எடப்பாடி) மனசு வச்சு ஒயின் ஷாப்பை அடைக்கலாம்ல. என் ஓட்டு எப்பவும் ரெட்ட இலைக்குத்தான். யாருகிட்ட சொன்னா எனக்கு வீடு கிடைக்கும்?” என்றார் பரிதவிப்புடன். 


எடப்பாடி முகத்தில் என்ன இருக்கிறது?

 

p

 

முதியோர்களான பேச்சியம்மாவும் மாரியம்மாவும் பிரச்சார ஸ்பாட்டிலிருந்து மெல்ல நடையைக் கட்டினார்கள். “வந்தது வந்துட்டீங்க.. அவரு வர்ற வரைக்கும் இருந்துட்டுப் போங்கம்மா..” என்று கெஞ்சினார் அந்த ஏரியா அதிமுக பொறுப்பாளர். “அட, போங்கப்பா.. மணி எட்டாச்சு. அஞ்சு மணிக்கே கூட்டியாந்து இம்புட்டு நேரமா காக்க வைக்கிறீங்க.  மயக்கமா வருது. இருந்து பார்த்துட்டுப் போறதுக்கு  எடப்பாடி முகத்துல என்ன இருக்கு?” என்று எரிச்சலாகச் சொல்லிவிட்டு கிளம்பினர். பக்கத்து கிராமமான துலுக்கன்குறிச்சியிலிருந்து அழைத்துவரப்பட்ட பெண்கள் “நாலு மணிநேரமா நிக்கிறோம். யாரும் பச்சத்தண்ணிகூட தரல. பசி வயித்தக் கிள்ளுது. வீட்டுக்குப் போயி ரெண்டு வாய் சோறு சாப்பிட்டாத்தான் உசிரு வரும்.” என்றனர். கூட்டம் கலைய ஆரம்பித்தவுடன் “தைப்பொங்கலுக்கு 1000 ரூபாய் கொடுத்த முதல்வர் எடப்பாடி வருகிறார்.. வருகிறார்.. வந்துகொண்டிருக்கிறார்..” என்று ஒலிபெருக்கி அலறியது. துலுக்கன்குறிச்சி பெண்களோ “ரெண்டாயிரத்துக்கு எழுதிக்கொடுத்தோம். தேர்தல் முடிஞ்சதுக்கு அப்புறம் தருவோம்னு சொல்லுறாங்க. தருவாங்களோ? மாட்டாங்களோ?” என்று முணுமுணுத்தபடியே தங்கள் ஊருக்குக் கிளம்பினர். 

 

கால்கடுக்க வயதானவர்களை நிற்கவைத்த பாவம்!

 

oo

 

ஊர் நாட்டாமையான கனகராஜுவுக்கு வயது 85 ஆகிறது. கிளம்பிக்கொண்டிருந்த மக்களைப் பார்த்து, “பாவம்யா.. வயசானவங்கள கூட்டிட்டு வந்து மூணு மணி நேரமா கால்கடுக்க நிற்க வச்சா எப்படி? இது சரியில்ல.  தலைக்கு 200-ன்னு பேசி, 150 தான் கொடுத்திருக்காங்க. 50 ரூபாய் கூட்டிட்டு வர்ற பொறுப்பாளருக்கு கமிஷனாம். இதெல்லாம் என்ன அரசியலோ?   நேருகாலத்துல இருந்து நான் காங்கிரஸ்ல இருக்கேன். எனக்கு முன்னால எங்கப்பா பால்ச்சாமித்தேவர் இந்த ஊரு நாட்டாமையா இருந்தாரு. நாங்கள்லாம் பரம்பரை நாட்டாமை.” என்றார் பெருமிதத்துடன். 

 

அனைவருக்கும் ரூபாய் இரண்டாயிரம்! 

காத்துக் காத்து கண்கள் பூத்திருந்த மக்களுக்கு இரவு 8.20-க்குத்தான் எடப்பாடி பழனிசாமியின் தரிசனம் கிடைத்தது. அவரும் மைக் பிடித்து.. ஸாரி.. ஹேன்ட் ஃப்ரீ மைக்கில், தனக்கு முன்பாக நின்ற கூட்டத்திடம் பேசினார். 

“இடைத்தேர்தல் வருவதற்குக் காரணமான துரோகிகளுக்கு (டிடிவி தினகரன் வகையறாக்கள்), ஆட்சியைக் கலைத்திட சதித்திட்டம் தீட்டியவர்களுக்கு தக்க பாடம் புகட்டி தண்டிக்க வேண்டும். பட்டாசுத் தொழிலுக்கும் பட்டாசுத் தொழிலாளர்களுக்கு என்றும் உறுதுணையாக இருப்போம். மக்களுக்கு சிறப்பு நிதி ரூ.2000 வழங்கும் திட்டத்தை  சென்னையில் தொடங்கிவிட்டோம். அதை, திமுகவும் மு.க.ஸ்டாலினும் மக்களுக்குக் கிடைக்கவிடாமல் செய்துவிட்டார்கள். தேர்தலுக்குப் பிறகு அனைத்துத்தரப்பு மக்களுக்கும் ரூ.2000 கிடைக்கும்படி செய்வோம்.” என்று வாக்குறுதி அளித்தார். 

 

ஜெயலலிதாவுக்கும் இதே நிலைதான்!

செவல்பட்டியில் நாம் சந்தித்த பேச்சியப்பன் “முகத்தைப் பார்க்கிறதுக்காக காத்துக்கிடந்ததெல்லாம் எம்.ஜி.ஆரோட முடிஞ்சு போச்சு. பதினெட்டு வருடங்களுக்கு முன்,  சிவகாசியை அடுத்துள்ள திருத்தங்கல்லில் பிரச்சாரம் செய்வதற்கு ஜெயலலிதா வந்தார். எதிர்பார்த்த அளவுக்கு கூட்டம் இல்லை.  மேடை ஏறாமல் கோபித்துக்கொண்டு போய்விட்டார். கூட்டம் ரத்தானது. மறுநாள், பெருமளவில் ஆட்களைத் திரட்டினார்கள். ஜெயலலிதா வந்து பிரச்சாரம் செய்தார். அன்றிலிருந்தே,  பணம் கொடுத்து கூட்டம் சேர்க்கும் நிலை அக்கட்சிக்கு ஏற்பட்டது. ஆனாலும்,   அதிமுக நல்ல கட்சிங்க. அட்வான்ஸ் புக்கிங்கா முன்கூட்டியே நூறு இருநூறுன்னு கொடுத்து மக்களை நல்லா  கவனிச்சிருது.  திமுக கூட்டணிக்காரங்களும் கொடுப்பாங்க. ஆனா.. ரொம்ப லேட்டாத்தான் தருவாங்க. இவங்க ஐநூறுன்னா.. அவங்க இருநூறு.. நான் சொல்லுறது ரொம்ப பழைய கணக்கு. இப்ப, யார் யாரு எம்புட்டு தரப்போறாங்கங்கிறது சஸ்பென்ஸா இருக்கு.” என்றார் எதிர்பார்ப்புடன். 

‘அழைத்துவரும் ஒவ்வொரு தலைக்கும் விலை; அளிக்கும் ஒவ்வொரு வாக்குக்கும் விலை’ என, கடலளவு ஊழல் பணத்தில் ‘துளியளவு’ தெளித்து, மக்களையும் ‘கரப்ட்’ செய்கிறார்கள் அரசியல்வாதிகள். தாங்கள் செய்வது இன்னதென்று மக்கள்  அறியாதிருக்கிறார்களா?


 

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்