DMK, ADMK Competitive open mini clinic

Advertisment

மேல் புவனகிரி ஒன்றியம் பி.உடையோர் ஊராட்சியில் மினி கிளினிக் திறப்பதில் தி.மு.க., அ.தி.மு.க. இடையே ஏற்பட்ட போட்டியால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர் மாவட்டம், மேல் புவனகிரி ஒன்றியம் பி.உடையூர் ஊராட்சியில் மினி கிளினிக் திறப்பு விழாவிற்கு ஏற்பாடு செய்தனர். அ.தி.மு.க. ஒன்றிய சேர்மன் சிவப்பிரகாசம் தலைமையில் மேற்கு மாவட்டச்செயலாளர் அருண்மொழிதேவன் திறந்து வைப்பதற்கு இந்த ஏற்பாடு செய்யப்பட்டது.

பின்னர், புவனகிரி தொகுதி எம்.எல்.ஏ(தி.மு.க)சரவணன் திறந்துவைக்க அக்கட்சியினரும் ஏற்பாடு செய்தனர். இதனால் அங்கு பரபரப்பாக இருந்தது. தி.மு.க.வினர் சரவணன் எம்.எல்.ஏ.வை வரவேற்று இடதுபக்கம் பேனரும், வலது பக்கம் அ.தி.மு.கதரப்பினரும் பேனர் வைத்தனர்.

Advertisment

இந் நிலையில், அ.தி.மு.கமாவட்டச் செயலாளர் அருண்மொழிதேவன், நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. தி.மு.க., அ.தி.மு.க.வினர் கட்சிக் கொடிகளைக் கட்டி இரு கோஷ்டிகளாக அங்கு திரண்டனர். சரவணன் எம்.எல்.ஏசம்பவ இடத்திற்கு வந்தவுடன் தி.மு.க.வினர் மேளதாளத்துடன் வரவேற்றனர். அவர் ஊராட்சி அலுவலகத்திலுள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்துக் கொண்டிருந்தபோது, அ.தி.மு.க.வை சேர்ந்த ஒன்றிய சேர்மன் சிவப்பிரகாசம் ரிப்பன் வெட்டி மருத்துவமனையை திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து தி.மு.கஎம்.எல்.ஏசரவணனும் மறுபடியும் கட்டிய ரிப்பனை வெட்டி திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அ.தி.மு.க.வினர் 'ஜெயலலிதா வாழ்க!', 'எடப்பாடியார் வாழ்க!'என முழக்கமிட்டனர். அதேபோல், தி.மு.க.வினர் 'கலைஞர் வாழ்க!', 'ஸ்டாலின் வாழ்க!' என்று முழக்கமிட்டனர். இரு தரப்பினரும் மாறி மாறி முழக்கமிட்டதால் மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து போலீசார் இருதரப்பினரையும் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.