Skip to main content

பிரித்துப் பார்க்காத பேராசிரியர்! -மு.க.அழகிரி ஆதரவாளர் நெகிழ்ச்சி!

Published on 11/01/2019 | Edited on 11/01/2019
p

 

மு.க.அழகிரியின் அடுத்த அரசியல் ‘மூவ்’ என்னவாக இருக்கும் என்பதை அறியாதவர்களாக இருக்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள். ஆனாலும், அங்கங்கே திமுக சீனியர்களோடு தொடர்பில் இருக்கிறார்கள். காரணம் –நெஞ்சுக் கூட்டுக்குள் திராவிட உணர்வை அவர்கள் இன்னும் தேக்கி வைத்திருப்பதுதான்.  

 

திமுக இலக்கிய அணியில் மாநில துணைத் தலைவராக இருந்தவர்  ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த ச.அமுதன். கழக நடவடிக்கைகளிலும் போராட்டங்களிலும் பங்கேற்று, 32 தடவை சிறை சென்றார். மிசா சிறைவாசம் வேறு. அந்தவகையில், கலைஞரிடமும் பேராசிரியரிடமும் நெருக்கம் காட்ட முடிந்திருக்கிறது.     அரசியல் தட்பவெப்பம் திமுகவுக்கு சாதகமாக இல்லாதபோதெல்லாம், பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்கு ச.அமுதனுக்கு வாய்ப்பளித்தது அக்கட்சியின் தலைமை. அண்ணா காலத்து அரசியல்வாதியாக இருந்தாலும், பொருளாதார வசதியில் சொல்லிக்கொள்ளும் நிலையில் அமுதன் இல்லை.   விருதுநகர் மாவட்ட அரசியலில் தாக்குப்பிடிக்க முடியாமல், மு.க.அழகிரி ஆதரவு நிலை எடுத்தார். 

 

an

 

“பேராசிரியருடனான உறவு இன்றுவரை தொடர்கிறது” என்றார் அமுதனின் மகன் மகேஷ் வர்மா.  மார்பில் சளி கட்டியதன் காரணமாக சென்னை அப்பல்லோவில் சிகிச்சை பெற்றுவரும் திமுக பொதுச்செயலாளர் அன்பழகனைச் சந்திந்து நலம் விசாரிப்பதற்காக கடந்த 8-ஆம் தேதி சென்ற மகேஷ் வர்மாவிடம் “அப்பா எப்படி இருக்காங்க? பார்க்கவே இல்ல..” என்று அமுதன் நலம் குறித்து விசாரித்திருக்கிறார் அன்பழகன்.  “அய்யா ஊருல (ஸ்ரீவில்லிபுத்தூர்) இருக்காரு..” என்று மகேஷ் வர்மா கூற, “ஏன் என்னைப் பார்க்க வரமாட்டேங்கிறான்?” என்று கேட்டிருக்கிறார். “இப்பத்தான்.. மூணு மாசத்துக்கு முன்னால வந்து உங்கள பார்த்தாருல்ல. அடுத்து வருவாப்ல..” என்று மகேஷ் வர்மா சொன்னதும், தலையசைத்துச் சிரித்திருக்கிறார் அன்பழகன். 

 

“மு.க.அழகிரி ஆதரவாளராயிற்றே அமுதன்? என்றெல்லாம் பேராசிரியர் அன்பழகன் பிரித்துப் பார்ப்பதில்லை. மு.க. அழகிரியாக இருந்தால் என்ன? மு.க.ஸ்டாலினாக இருந்தால் என்ன? இருவருமே கலைஞரின் பிள்ளைகள் என்பதால், அவர் பிரித்துப் பார்ப்பதில்லை.  அதனால்தான், மு.க.அழகிரி ஆதரவாளாராக இருந்தாலும், அமுதனின் உடம்பில் ஓடுவது திமுக ரத்தம் என்பதால்,   இன்று வரையிலும் மாறாத பாசம் காட்டி வருகிறார் பேராசிரியர் அன்பழகன்.” என்று சிலிர்த்தார் மகேஷ் வர்மா. 

 

அரசியலில் பாசமுகம் காட்டுபவர்கள் அரிதிலும் அரிதாகிவிட்ட இந்தக் காலத்தில், இன உணர்வுக்கு மதிப்பளிப்பவராக இருக்கிறார் இனமானப் பேராசிரியர் என்றழைக்கப்படும் அன்பழகன். 

 

சார்ந்த செய்திகள்