Skip to main content

மாநில கட்சி அந்தஸ்தை இழக்கும் தேமுதிக.... தேர்தல் ஆணையம் முன்னெடுப்பு!

Published on 02/06/2019 | Edited on 02/06/2019

தேமுதிகவின் மாநில அந்தஸ்தை நீக்கும் பணிகளை தேர்தல் ஆணையம் முன்னெடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

 

மாநில கட்சி என்ற அங்கீகாரத்தை பெறுவதற்கு மாநிலத்தில் அந்த கட்சியானது 6 சதவிகித வாக்குகளை  மொத்த வாக்குகளில் பெற்றிருக்க வேண்டும். அதோடு ஒரு மக்களவை தொகுதி மற்றும் இரண்டு சட்ட பேரவை தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும் என்பது தேர்தல் ஆணையத்தின் விதி.

 

 dmdk  will lose its state party status... Election commission initiative

 

கட்சி தொடங்கிய ஓராண்டில் 2006 சட்ட பேரவையில் தனித்து போட்டியிட்ட தேமுதிக 8.38 சதவிகித வாக்குகளை பெற்றது. அதற்கடுத்து 2009 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் 10.3 சதவிகித வாக்குகளை பெற்றது. 2011 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியுடன் போட்டியிட்ட தேமுதிகவின்  வாக்கு விகிதம் 7.9 ஆக சரிவை கண்டது. 2014 மக்களவை தேர்தலில் 5.1 ஆகவும், 2016 சட்டப்பேரவை தேர்தலில் 2.31 ஆக கடும் சரிவை கண்டது.

 

இந்நிலையில் தற்போது நடந்து முடிந்த மக்களை தேர்தலிலும் தேமுதிக வாக்கு சதவிகிதம் 2.19 ஆக குறைந்துள்ளது. தொடர்ந்து இரண்டாவது முறையாக 3 சதவிகிதத்திற்கும் குறைவான வாக்கு சதவிகித்தை பெற்றிருப்பதால் தேமுதிகவின் மாநில அந்தஸ்து ரத்தாக உள்ளது. இதற்கான பணிகளை துவக்கியுள்ள மாநில தேர்தல் ஆணையம் இதற்கான அறிக்கையை மத்திய தேர்தல் ஆணையத்திற்கு விரைவில் அனுப்ப உள்ளது.

 

மாநில அந்தஸ்தை தேமுதிக இழந்தால் முரசு சின்னமும் பறிபோய்விடும் என்பது குறிப்பிடத்தக்கது

.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேமுதிக ஒன்றிய செயலாளரை தாக்கிய அதிமுக ஒன்றிய செயலாளர்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
AIADMK union secretary attacked DMK union secretary in Karur!

கரூர் மாவட்டத்தில் தேமுதிக  ஒன்றிய செயலாளரை கூட்டணியில் உள்ள அதிமுக ஒன்றிய செயலாளர் தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் கடவூர் தேமுதிக தெற்கு ஒன்றிய  செயலாளரும் முன்னாள் கவுன்சிலருமான ஆல்வின் என்பவர் பாலவிடுதி காவல் நிலையம் அருகே தன் கட்சி நிர்வாகிகளுடன் பேசிக்கொண்டு இருக்கையில் அவ்வழியே வந்த அதிமுகவைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் வேண்டுமென்றே ஆல்வின் இடம் வாய் தகராறு செய்துள்ளார்.

இதற்கு ஆல்வின் சாதாரணமாக பதில் அளித்ததையடுத்து ஏற்கனவே தேர்தல் பணப்பட்டுவடாவில் ஏற்பட்ட பகையில் அதிமுக கடவூர் தெற்கு ஒன்றிய செயலாளரும் மாவட்ட கவுன்சிலருமான ரமேஷ் நேரடியாக சம்பவ இடத்திற்கு வந்து காவல் நிலையம் முன்பே கொலை செய்யும் நோக்கோடு ரமேஷ் ஆல்வினை தாக்கி உள்ளார். இதனால் படுகாயம் அடைந்த ரமேஷ் மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்து பாதிக்கப்பட்ட ஆல்வின் கூறுகையில், கொலைவெறி தாக்குதல் நடத்திய அதிமுக கவுன்சிலர் ரமேஷை மாவட்ட காவல்துறை கைது செய்திட வேண்டும். அவரை குண்டர் சட்டத்தில் அடைத்திட வேண்டும். அதிமுக, தேமுதிக கூட்டணியில் இருந்தும் அதிமுகவினர்  தாக்குதல் நடத்தி உள்ளனர். இதனால் தான் பெரும் அளவில் மன உளைச்சல் அடைந்ததாகவும் இதற்கு அதிமுக தலைமை பதில் சொல்லியே ஆக வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். தேர்தல் முடிந்ததும் கூட்டணி முடிந்தது போல அதிமுகவினர் தங்கள் வேலையை காட்ட துவங்க உள்ளனர் என பாதிக்கப்பட்டவருடன் வந்த தேமுதிக நிர்வாகிகள் வேதனையுடன் புலம்பினர்.

Next Story

'அப்பாவி மக்களை இன்னல்களுக்கு ஆளாக்குவதையும் அனுமதிக்க முடியாது'- ராமதாஸ் கருத்து

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
 'Innocent people can't be allowed to suffer' - Ramadoss opined

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று முன்தினம் (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் ஜூன் 6ஆம் தேதி வரை தொடரும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாடு மற்றும் புதுவையில் மக்களவைத் தேர்தல்கள் அமைதியாக நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகள் ஜூன் 6 ஆம் நாள் வரை தொடரும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகளுக்கு எந்தத் தேவையும் இல்லாத நிலையில், அதை தொடர்வது மக்களுக்கு பாதிப்புகளையே ஏற்படுத்தும்.

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல்கள் நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்தப்பட வேண்டும் என்பதற்காகத் தான் நடத்தை விதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. தமிழ்நாட்டில் தேர்தல்கள் நடத்தி முடிக்கப்பட்டு விட்ட நிலையில், இனி நடத்தை விதிகளுக்கு எந்தத் தேவையும் இல்லை. இந்தியாவின் பிற மாநிலங்களில் இன்னும் தேர்தல்கள் நடத்தப்படவில்லை என்பதற்காக தமிழ்நாட்டில் நடத்தை விதிகளை இன்னும் நடைமுறைப்படுத்திக் கொண்டிருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. ஒருவேளை ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடத்தப்பட்டிருந்தாலோ அல்லது தமிழ்நாட்டில் கடைசி கட்ட வாக்குப்பதிவு நடத்தப்பட்டிருந்தாலோ வாக்குப்பதிவு முடிந்த சில நாட்களில் வாக்கு எண்ணிக்கை நடத்தி முடிவுகள் அறிவிக்கப்பட்டிருக்கும். அத்துடன் தேர்தல் நடத்தை விதிகளும் முடிவுக்கு வந்திருக்கும். தமிழ்நாட்டில் முதல் கட்ட வாக்குப்பதிவு  நடத்தப்பட்டது என்ற ஒரே காரணத்திற்காக மற்ற மாநிலங்களிலும் வாக்குப்பதிவு முடிவடையும் வரை தமிழக அரசும், மக்களும் தேவையற்ற கட்டுப்பாடுகளை சுமந்து கொண்டு வாட வேண்டிய தேவையில்லை.

 'Innocent people can't be allowed to suffer' - Ramadoss opined

மக்களவைத் தேர்தலுக்கான அறிவிக்கை கடந்த மார்ச் 16 ஆம் நாள் வெளியிடப்பட்டது. மக்களவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு ஜூன் 6ஆம் நாள் தான் தேர்தல் நடைமுறைகள் முடிவுக்கு வரும் என்பதால், அதுவரை நடத்தை விதிகள் நடைமுறையில் இருக்கும். அதாவது தேர்தல் நடைமுறை என்ற பெயரில் தமிழ்நாடு அரசு நிர்வாகத்தை 83 நாட்களுக்கு முடக்கி வைப்பதையும், அதே காலத்திற்கு அப்பாவி மக்களை பல்வேறு வகைகளில் இன்னல்களுக்கு ஆளாக்குவதையும் அனுமதிக்க முடியாது.

நடத்தை விதிகள் நடைமுறையில் இருக்கும் போது ஆட்சியாளர்கள் புதிய திட்டங்கள் எதையும் அறிவிக்க முடியாது. மக்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை தீர்ப்பது குறித்து அதிகாரிகளுக்கு எந்த வித ஆணைகளையும் பிறப்பிக்க முடியாது; அதிகாரிகளுடன் முதலமைச்சரோ, அமைச்சர்களோ ஆய்வுக்கூட்டங்களைக் கூட நடத்த இயலாது. கடைநிலை பணியாளர்கள் முதல் தலைமைச் செயலர் வரை அனைத்து நிலை அதிகாரிகளும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் தான் இருப்பார்கள். மொத்தத்தில் அரசு நிர்வாகம் என்பது செயல்பட முடியாத அளவுக்கு மொத்தமாக முடக்கப்பட்டிருக்கும். அதனால், மக்களுக்கான நலத்திட்ட உதவிகளைக் கூட அரசால் செய்ய முடியாத நிலை உருவாகும்.

தேர்தல் நடத்தை விதிகளால் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பது வணிகர்கள் தான். சில்லறை வணிகம் செய்யும் வணிகர்கள் அதில் கிடைத்தப் பணத்தை சந்தைக்கு கொண்டு சென்று தான் தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கி வர வேண்டும். அவ்வாறு வணிகர்கள் பணத்தைக் கொண்டு செல்லும் போது, அவர்களை மடக்கி சோதனை நடத்தும் பறக்கும் படையினர் வணிகர்களிடம்  ரூ.50 ஆயிரத்திற்கு மேல் ஒரு ரூபாய் கூடுதலாக இருந்தாலும் கூட மொத்தப் பணத்தையும் பறிமுதல் செய்கின்றனர். அதனால், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வணிகர்கள் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளானார்கள். அவர்களை மேலும் 45 நாட்களுக்கு பாதிப்புகளுக்கு உள்ளாக்குவது நியாயமற்றதாகும்.

எனவே, தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் நடைபெற்று முடிந்து விட்ட நிலையில், மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகளை உடனடியாக தளர்த்த வேண்டும். மக்களுக்குத் தேவையான நலத் திட்டங்களை செயல்படுத்த  தமிழக அரசையும், வணிகத்திற்கு தேவையான பணத்தை தடையின்றி எடுத்துச் செல்ல வணிகர்களையும் தேர்தல் ஆணையம் அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்' என தெரிவித்துள்ளார்.