
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து அனைத்து அரசுத் துறைகளும் அதிகாரிகள் வசம் உள்ளன. இதையடுத்து, தேர்தல் விதிமுறைகளின்படி கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறப் பகுதிகளில் உள்ள பொது இடங்களில், அரசியல் கட்சிக் கொடிகள், கொடிக்கம்பங்கள், போஸ்டர்கள், பேனர்கள் போன்றவற்றை அப்புறப்படுத்துவது வழக்கம்.
இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள கீழ் கூத்தப்பாக்கம் பகுதியில், சாலையோரம் அமைக்கப்பட்டிருந்த அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்களை அகற்றும் பணியில் நேற்று முன்தினம் கிராம நிர்வாக அலுவலர் தீனதயாளன் மற்றும் வருவாய்த் துறை ஊழியர்கள் பலரும் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தேமுதிக கட்சியின் கொடிக்கம்பத்தையும் அகற்ற முயன்றனர். இந்தத் தகவல் அறிந்த அந்தப் பகுதியைச் சேர்ந்த தேமுதிகவின் முக்கியப் பிரமுகரான மூர்த்தி, சம்மந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரிடம் சென்று தங்கள் கட்சிக் கொடிக்கம்பத்தை அகற்றக்கூடாது என்று கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
ஒருகட்டத்தில், ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற மூர்த்தி, கிராம நிர்வாக அலுவலரை ஒரு அறையில் வைத்துப் பூட்டிவிட்டார். இந்தத் தகவல் ஊர் முழுவதும் பரவியது. அங்கு கூடிய பொதுமக்கள் பூட்டிய அறைக்குள் சிறை வைக்கப்பட்டிருந்த கிராம நிர்வாக அலுவலரை விடுவித்தனர். பின்னர், இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் தீனதயாளன், கிளியனூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தேமுதிக கட்சிப் பிரமுகர் மூர்த்தியைக் கைது செய்தனர். கிராம நிர்வாக அலுவலரை, தேமுதிக கட்சிப் பிரமுகர் அறையில் வைத்துப் பூட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.