ADVERTISEMENT

விஜயகாந்த் அவர்களுக்கு தலைவணங்கி நன்றி... தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம்

06:03 PM Apr 21, 2020 | rajavel

தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நிறுவனர் மற்றும் மாநிலத் தலைவரான சு.ஆ.பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ADVERTISEMENT


கரோனோ எனும் கொள்ளை நோயிடமிருந்து மக்களை காத்திட மருத்துவர்களும், செவிலியர்களும் தன்னலம் பாராமல், கடுமையாக போராடி மருத்துவப்பணி செய்து வருகிறார்கள். அதன் காரணமாக, அவர்களுக்கும் கரோனோ வைரஸ் தொற்று ஏற்பட்டு, மருத்துவர்களும் உயிரிழந்த நிகழ்வு கடும் வேதனையையும், அச்சத்தையும் தருகிறது.


மக்களை கரோனோ வைரஸ் தாக்கத்தில் இருந்து காத்திடும் அரும்பணியில் மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்பட்டு, அதன் காரணமாக அந்நோய் தாக்கி இன்னுயிர் நீத்த அந்த மருத்துவ பெருமக்களுக்கு உரிய மரியாதை செய்யவும், அவர்களின் பூத உடலை நல்லடக்கம் செய்யவும் விடாமல் தடுத்து போராட்டம் என்கிற பெயரில் கற்களை வீசி தாக்குதல் நடத்தி காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொண்ட தமிழர்களின் செயல் தமிழகத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் மக்கள் நலனுக்காகவே தன்னலம் பாராமல் உயிரைக் கொடுத்து பாடுபடும் மருத்துவர்கள் மட்டுமின்றி கரோனோ வைரஸ் தாக்கி உயிரிழப்போரின் உடல்களை, தனது ஆண்டாள் அழகர் கல்லூரிக்கு சொந்தமான இடத்தில் நல்லடக்கம் செய்து கொள்ளலாம் என தேமுதிக தலைவர் மரியாதைக்குரிய விஜயகாந்த் அறிவித்துள்ளது மனிதாபிமானம் இன்னும் மரித்துப் போகவில்லை என்பதை உறுதி செய்துள்ளது.

ADVERTISEMENT



மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர், தூய்மை பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்க பிரதமர் கைதட்டவும், விளக்கேற்றவும் சொன்னார் என்பதற்காக கண்ணை மூடிக்கொண்டு அதனை பின்பற்றியவர்கள், கரானா வைரஸ் தாக்கத்தால் மரணமடைந்த மருத்துவர்களின் உடலை மயானங்களில் அடக்கம் செய்ய விடாமல் தடுத்த சூழ்நிலையில், எதைப் பற்றியும் யோசிக்காமல் தனது கல்லூரியின் ஒரு பகுதியில் கரோனோ வைரஸ் தாக்கத்தால் மரணமடைந்தவர்களின் உடலை அடக்கம் செய்து கொள்ளலாம் என அறிவித்த திரு. விஜயகாந்த் அவர்களுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் தலைவணங்கி நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.

ஏற்கனவே கரோனோ நிவாரண முகாமாக தனது இல்லத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவித்துள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், கலைஞர் அரங்கை பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மற்றும் தேமுதிக கட்சி அலுவலகத்தை பயன்படுத்திக் கொள்ள அழைப்பு விடுத்த அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் போன்ற தலைவர்களின் மனிதாபிமானத்திற்கும், ஊரடங்கு காரணமாக தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் ஏழை, எளிய மக்களுக்கு உதவிக்கரம் நீட்டி முக கவசம், கையுறை உள்ளிட்ட கரோனா நோய் தடுப்பு உபகரணங்களையும், சாப்பாடு, அரிசி, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி வரும் தன்னார்வலர்கள், சமூக ஆர்வலர்கள், பல்வேறு சமூக நல அமைப்புகள், அரசியல் கட்சிகளுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் மனமார்ந்த பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

உலகமே இக்கட்டான சூழ்நிலையில் தவித்துக் கொண்டிருக்கும்போது ஆறறிவு கொண்ட மனிதர்களாகிய நாம் குறைந்தபட்ச மனிதாபிமானத்தோடாவது நடந்து கொள்வது சாலச்சிறந்தது. எப்போதும் மனிதர்களாக வாழ்வோம்.! இக்கட்டான தருணங்களில் மனிதம் காப்போம்...!! என்று கூறியுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT