தனக்கெதிரான அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரிய வழக்கைத் திரும்பப் பெற கோரிய தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

கடந்த 2012- ஆம் ஆண்டு தேனியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவை விமர்சித்துப் பேசியதாக, தமிழக அரசு தரப்பில் தேனி நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.

DMDK PARTY VIJAYAKANTH CHENNAI HIGH COURT ORDER

Advertisment

இதுதொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்யக் கோரி விஜயகாந்த் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர்நீதிமன்ற தனி நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார். இதை எதிர்த்து விஜயகாந்த் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனு, தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி மற்றும் நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வில் இன்று (20.01.2020) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, விஜயகாந்த் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த மேல் முறையீட்டு மனுவைத் திரும்பப் பெற அனுமதி கோரினார்.

DMDK PARTY VIJAYAKANTH CHENNAI HIGH COURT ORDER

Advertisment

இதையடுத்து, மேல் முறையீட்டு மனுவில் கடுமையான குற்றச்சாட்டுக்களை கூறி விட்டு, தற்போது வழக்கை வாபஸ் பெற அனுமதி கேட்பது, நீதிமன்ற நேரத்தை வீணடிப்பது போன்றது என்பதால் அபராதம் விதிக்கலாம் என நீதிபதிகள் எச்சரித்தனர். மேலும், எதிர்கட்சித் தலைவராக இருந்த விஜயகாந்த் பேசிய பேச்சுகள் அவதூறானவையே எனத் தெரிவித்த நீதிபதிகள், எதிர்கட்சிகள் எப்படி செயல்பட வேண்டும் எனத் துணைக் குடியரசு தலைவர் தெரிவித்துள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளனர். அரசியல் சூழ்நிலைகளைப் பற்றி விவாதிக்க இது இடமில்லை எனத் தெரிவித்த நீதிபதிகள், வழக்கை வாபஸ் பெற அனுமதித்து, மேல் முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

மேலும், மனுதாரர் தரப்பில் கேட்டுக் கொண்டதால் அபராதம் விதிப்பதைத் தவிர்ப்பதாகக் கூறிய நீதிபதிகள், எதிர்காலத்தில் இதுபோல் செயல்படக் கூடாது எனவும் மனுதாரர் தரப்புக்கு அறிவுறுத்தினர்.