/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/our-arrest-art_3.jpg)
நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் மைத்துனர் எல்.கே. சுதீஷ். இவர் தேமுதிகவில் துணை செயலாளர் பொறுப்பில் உள்ளார். இந்நிலையில் இவரது மனைவியான பூர்ண ஜோதி சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் சமீபத்தில் புகார் மனு அளித்திருந்தார். அதில், “எனக்கும் எனது கணவருக்கும் சொந்தமாக சென்னை மாதவரம் மெயின் ரோடு 200 அடி சாலையில் சுமார் 2.10 ஏக்கர் காலியிடம் இருந்தது. அதில், அடுக்குமாடி வீடுகள் கட்டி விற்பனை செய்வதற்காக தனியார் கட்டுமான நிறுவனத்தைச் சேர்ந்த சந்தோஷ் சர்மா (வயது 44) என்பவரின் நிறுவனத்துடன் கடந்த 2014 ஆம் ஆண்டு ஒரு ஒப்பந்தம் செய்தோம்.
அதன்படி மொத்தம் 234 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி அதில் 78 வீடுகளை நில உரிமையாளரான எனக்கும், 156 வீடுகளை சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனத்துக்கும் ஒதுக்கி ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்நிலையில் தனக்கு ஒதுக்கிய 78 வீடுகளில் 48 வீடுகளை எனக்கு தெரியாமல் எனது கையெழுத்தை போலியாக போட்டு சந்தோஷ் சர்மாவின் கட்டுமான நிறுவனம் வெளி நபர்களுக்கு விற்பனை செய்துள்ளது. அதன் மூலம் சுமார் ரூ.43 கோடி மோசடி நடைபெற்றுள்ளது.
எனவே சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவன உரிமையாளரான சந்தோஷ் சர்மா, அந்நிறுவனத்தின் மேலாளர் சாகர் (வயது 33) மற்றும் இந்த முறைகேட்டில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தனது புகாரில் தெரிவித்து இருந்தார். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டிருந்தார். இதன் பேரில் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து சந்தோஷ் சர்மா,சாகர் ஆகிய இருவரையும் நேற்று முன்தினம் (21.02.2024) கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)