
ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 27ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதைத் தொடர்ந்து ஆளுங்கட்சியான திமுக தனது கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு இத்தொகுதியை ஒதுக்கித் தந்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டுத் தேர்தல் பணியை தொடங்கியுள்ளார். திமுக அணி தொடர்ந்து மக்களிடம் வாக்கு கேட்கும் பணியைத் தொடர்கிறது.
இந்நிலையில் தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தின் சார்பாக அக்கட்சியின் வேட்பாளராக ஈரோட்டைச் சேர்ந்த ஆனந்த் என்பவரை கட்சியின் பொருளாளரான பிரேமலதா இரண்டு நாட்களுக்கு முன்பு ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளர் என அறிவித்தார். இந்நிலையில் வேட்பாளர் ஆனந்த் 27ஆம் தேதியிலிருந்து ஈரோடு கிழக்கு தொகுதி மக்களிடம் வாக்கு கேட்க தொடங்கிவிட்டார். அவரோடு அவரது கட்சியின் நிர்வாகிகள் தொண்டர்கள் மக்களிடம் ஓட்டு கேட்டு வருகிறார்கள். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களத்தில் இரண்டாவது கட்சியாக தேமுதிக ஓட்டு வேட்டை நடத்தி வருகிறது.