
நாமக்கல்லைச் சேர்ந்த முதுபெரும் காந்தியவாதியும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரும், இந்திய அரசியல் நிர்ணய சபையின் முன்னாள் உறுப்பினருமான டி. காளியண்ணன், கரோனா பாதிப்பால் வெள்ளிக்கிழமை (மே 28) உயிரிழந்தார். அவருக்கு வயது 101.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சிஹெச்பி காலனியைச் சேர்ந்தவர் டி. காளியண்ணன். சேலம், நாமக்கல் ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்தபோது கஸ்தூரிப்பட்டி, போக்கம்பாளையம் ஜமீன் குடும்பத்தில் பிறந்தவர். சென்னையில் இலயோலா கல்லூரியில் படித்த காலத்திலேயே அரசியலுக்குள் புகுந்தார். கல்லூரி காலத்திலேயே தேசப்பற்றுடன் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் ஜில்லா மாணவர் சங்கத்தை உருவாக்கியிருந்தார்.
காந்திய வழியைப் பின்பற்றிய அவர், நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு, அம்பேத்கர், வல்லபாய் பட்டேல், காமராஜர், ராஜாஜி, தீரர் சத்தியமூர்த்தி, பக்தவச்சலம் ஆகியோருடன் இணைந்து செயல்பட்டார். ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக உப்பு சத்தியாகிரகம், வெள்ளையனே வெளியேறு ஆகிய போராட்டங்களில் அவர் ஆர்வத்துடன் கலந்துகொண்டார்.
இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்பினராகவும் இருந்துள்ளார். இந்தச் சபையின் உறுப்பினர்களாக இருந்த அனைவரும் ஏற்கனவே மரணம் அடைந்துவிட்ட நிலையில், காளியண்ணன்தான் மட்டுமே 101 வயதுவரை உயிருடன் இருந்தவர்.
இவருக்கு ராஜேஸ்வரன், கிரிராஜ்குமார் என இரண்டு மகன்கள்; சாந்தா, வசந்தா, விஜயா ஆகிய மூன்று மகள்கள் உள்ளனர். இவர்களில் கிரிராஜ்குமார் ஏற்கனவே இறந்துவிட்டார். டி.எம். காளியண்ணனின் அரசியல் வாரிசாக கருதப்பட்ட கிரிராஜ்குமார் மறைந்ததை அடுத்து, அவரும் அரசியல் வாழ்வில் இருந்து ஒதுங்கியே இருந்தார்.
எற்கனவே எம்பி., எம்எல்ஏ ஆக பதவி வகித்துள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவராகவும், பொருளாளராகவும், சேலம் மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவராகவும் இருந்துள்ளார். கடந்த சில நாட்களாக உடல்நலம் சரியில்லாமல் இருந்தார். மருத்துவ பரிசோதனையில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. அவருக்குத் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் வெள்ளிக்கிழமை (மே 28) உயிரிழந்தார்.
சமுதாயத்தின் மீது பெரும் அக்கறை கொண்ட அவர், மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்படுவதற்கு முன்ப சேலம், நாமக்கல், தர்மபுரி, ஓசூர், ஆந்திரா ஆகிய பகுதிகளில் 2000 திண்ணை பள்ளிக்கூடங்களை உருவாக்கிய பெருமைக்குச் சொந்தக்காரர்.
தனது சொத்துகளில் பெரும் பகுதியை மக்களுக்கே தானமாக கொடுத்தவர். திருச்செங்கோட்டில் கற்புக்கரசி கண்ணகிக்கு கோட்டம் எழுப்ப வேண்டும் என்பதும், கண்ணகி விழாவை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என்பதே அவருடைய வாழ்நாள் லட்சியமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த ஜன. 10ஆம் தேதிதான் டி.எம். காளியண்ணனுக்கு 101வது பிறந்தநாள் விழாவை வீட்டில் கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடினர். மனைவி பார்வதி (90), மகன், 3 மகள்கள், 16 பேரன் பேத்திகள், 8 கொள்ளுப்பேரன் பேத்திகள் மற்றும் உறவினர்கள் அவருக்கு வாழ்த்துக் கூறி, ஆசி பெற்றனர்.
அவருடைய மறைவுக்குத் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் அழகிரி உள்ளிட்ட அனைத்துக் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். மறைந்த டி.எம். காளியண்ணனின் உடல், வெள்ளிக்கிழமை மாலை, 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க, முழு அரசு மரியாதையுடன் சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்டது.