
ஒவ்வொரு பண்டிகையின் மறுநாளும், தமிழ்நாட்டில் மண்டலம் வாரியாகவும், மாவட்டம் வாரியாகவும் டாஸ்மாக்கில் எவ்வளவு கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்றது என்பது குறித்தான தகவல்கள் வரும். அதுவும் தீபாவளி பண்டிகையின் போது மதுவிற்பனையின் அளவு எப்போதுவும் விட சற்று கூடுதலாகவே இருக்கும்.
தமிழ்நாட்டை அடுத்துள்ள பாண்டிச்சேரியில் மது வகைகளின் விலை குறைவு என்பதால் அங்கிருந்து தமிழ்நாட்டிற்கு மது கடத்துவது வழக்கமாக நடைபெறும். குறிப்பாக உயர் ரக மது வகைகளின் மதுவின் விலை குறைவு என்பதால் உயர் ரக வகையான மதுவும் அதிகளவில் கடத்தப்படும். சாராயமும் கடத்தப்படுகிறது. அதனை கடலூர் சோதனைச் சாவடிகளில் போலீஸார் சோதனையிட்டு பறிமுதல் செய்வதும் வழக்கமாக நடைபெறும். அந்த வகையில் தற்போது நாடு முழுவதும் நாளை (12ம் தேதி) தீபாவளி கொண்டாடவுள்ள நிலையில், கடலூர் எல்லையில் போலீஸார் சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
நேற்று இரவில் இருந்து கடலூர் சோதனைச் சாவடியில் கடலூர் போலீஸாரும், மதுவிலக்கு பிரிவு துறையினரும் இணைந்து தீவிர சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர். சோதனையில் பறிமுதல் செய்யப்படும் மது பாட்டில்களை போலீஸார் அங்கேயே கீழே கொட்டி அழித்துவருகின்றனர். அதேபோல், மதுவை கடத்துபவர்கள் மீது வழக்குப் பதிவு செய்வது, அபராதம் மற்றும் தண்டனை விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளையும் போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர். அதிகளவில் மது கடத்துபவர்களின் வாகனங்களையும் போலீஸார் பறிமுதல் செய்து வருகின்றனர்.