போனஸ் இல்லா தீபாவளி; களையிழந்த நகை விற்பனை!

DIWALI FESTIVAL PEOPLES  JEWELLERY SHOPS SALES

கரோனா ஊரடங்கால் வேலையிழப்பு, ஊதிய இழப்பு மட்டுமின்றி போனஸூம் கிடைக்காமல் போனதால் தீபாவளி நேரத்தில் நகை வியாபாரமும் உற்சாகத்தை இழந்தது. நடப்பு ஆண்டு பண்டிகைக்கால தங்கம், வெள்ளி நகை விற்பனை வழக்கத்தைக் காட்டிலும் 30 சதவீதம் சரிந்துள்ளதாக நகைக்கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கரோனாவால் உலகமே முடங்கி இருந்த நிலையிலும் கூட அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி காரணமாக தங்கத்தின் விலை மட்டும் தொடர்ந்து ஜெட் வேகத்தில் உயர்ந்து வந்தது.

கரோனாவுக்கு முன்பு ஒரு பவுன் தங்கம் 28 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை ஆகி வந்தது. படிப்படியாக உயர்ந்த ஒரு பவுன் தங்கத்தின் விலை ஒரு கட்டத்தில் 44 ஆயிரம் ரூபாய் வரை உயர்ந்து, வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியது.

கையில் கருப்புப்பணம் வைத்திருந்தவர்கள் தங்கத்தில் முதலீட்டைக் குவித்தனர். பவுன் விலை 60 ஆயிரம் ரூபாய் வரை எகிறக்கூடும் என்ற எதிர்பார்ப்பு இருந்ததும், புதிய முதலீட்டாளர்கள் அதிகளவில் தங்கத்தில் பணத்தை கொட்ட காரணமாக அமைந்தது. இதனால் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் நகைகளின் விற்பனை கணிசமாக அதிகரித்தது.

அக்டோபர் மாதத்தில் இருந்து தங்கத்தின் விலை படிப்படியாக இறங்கத் தொடங்கியது. பவுன் 38 ஆயிரம் முதல் 39 ஆயிரம் ரூபாய் வரை நிலை கொண்டிருந்த நிலையில், முதன்முதலாக நவ. 19- ஆம் தேதி, 38 ஆயிரம் ரூபாய்க்கும் கீழே சரிந்தது.

சேலம், தங்க நகை வர்த்தகத்தில் தனித்துவமாக விளங்குகிறது. தங்கத்தின் விலை ஏற்றம், இறக்கம், பண்டிகைக்கால விற்பனை குறித்து சேலம் தங்க நடைக்கடை உரிமையாளர்கள் சிலர் நம்மிடம் பேசினர். தமிழகத்தில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெரிய, சிறிய நகைக்கடைகள் உள்ளன. தீபாவளி, பொங்கல், அட்சய திருதியை, முகூர்த்த காலங்களில் தங்க நகை விற்பனை வழக்கத்தை விட 30 முதல் 50 சதவீதம் வரை அதிகரிக்கும்.

கரோனா தொற்று காரணமாக நடப்பு ஆண்டில் பெரும்பாலான காலக்கட்டங்கள் ஊரடங்கிலேயே கழிந்து விட்டன. பல தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், வணிகர்கள் ஊரடங்கைக் காரணம் காட்டி விற்பனை ஊழியர்களுக்கு முழுமையான ஊதியம் தர முடியவில்லை. அதனால் இந்த ஆண்டு தீபாவளி போனஸூம் வழங்கப்படவில்லை.

போனஸ் தொகையைக் கொண்டு புது துணிமணிகள், நகைகள் வாங்குவதில் ஆர்வம் காட்டும் மக்கள், போனஸ் இல்லாததால் நகை வாங்க அவ்வளவாக இந்தாண்டு ஆர்வம் காட்டவில்லை. நடப்பு ஆண்டு தீபாவளி பண்டிகை காலத்தில் 30 சதவீதம் வரை தங்க நகை விற்பனை குறைந்துள்ளது. வரும் காலங்கள் சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம்"இவ்வாறு நகைக்கடை உரிமையாளர்கள் கூறினர்.

diwali festival jewel shop peoples sales
இதையும் படியுங்கள்
Subscribe