publive-image

Advertisment

விழுப்புரத்தில் சட்டக்கல்லூரி உருவாக்கப்பட்டு இயங்கிவருகிறது. இதில் படித்த மாணவர்களுக்கு முதல் பட்டமளிப்பு விழா நேற்று (20.12.2021) கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் கல்லூரி முதல்வர் கயல்விழி வரவேற்புரையாற்றினார். இந்தப் பட்டமளிப்பு விழாவில் உச்ச நீதிமன்ற நீதியரசர் எம்.எம். சுந்தரேஷ் தலைமை தாங்கி தேர்ச்சிபெற்ற மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கினார். அந்த நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, “சட்டம் படிக்கும் மாணவர்கள் முதலில் தங்களுக்கான தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும். தெளிவான சிந்தனை, அதன் வாயிலாக வெளிப்படும் வார்த்தைகள் மிக அவசியம்.

சட்டத்தை எப்படி கையாள வேண்டும் என்பதையும் நன்கு தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். வழக்கறிஞர் தொழில் மிகச் சிறந்த தொழில். ஆனால் அதில் முன்னேறுவதற்கு மிகவும் கடினமாக உழைக்க வேண்டும். முதன்முதலில் வழக்கறிஞராகப் பணியாற்ற வருபவர்களுக்கு சிரமங்கள் அதிகமாகவே இருக்கும். எனவே அப்படிப்பட்டவர்கள் என்னென்ன பணிகளை எப்படி எப்படி செய்ய வேண்டும், செயல்படுத்த வேண்டும் என்பதை நீங்கள் முன்கூட்டியே திட்டமிட்டு முடிவுசெய்ய வேண்டும். அதன் மூலம் சிறந்த வழக்கறிஞர்களாக வர முடியும், வர வேண்டும். நீதித்துறையில் சேர்ந்து உயர்நிலைக்கு வர வேண்டும் என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள். இன்றைய காலகட்டத்தில் பல்வேறு நீதிமன்றங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நீதிபதிகள் உள்ளனர்.

இதில் பெண்களுக்காக தனியாக இடஒதிக்கீடு இருக்கிற ஒரே மாநிலம் தமிழ்நாடுதான். மற்ற மாநிலங்களிலும் பெண்களுக்கான இடஒதுக்கீடு உள்ளது. ஆனால் இங்கு மட்டும்தான் 30% சதவீதம் உள்ளது. இருந்தாலும் இது இன்னும் அதிகரிக்க வேண்டும். அதன் மூலம் மற்றவர்களுடன் அவர்களால் போட்டி போட முடியும். எனவே ஒரு கனவோடு உங்கள் தொழிலைத் தொடங்குங்கள். இந்தத் தொழிலில் தர்மம் இருக்க வேண்டும், தர்மத்தை தொழிலாக செய்யக் கூடாது. இன்றைய காலகட்டத்தில் இளம்பெண் வழக்கறிஞர்களுக்கு சில துறைகள் உருவாக்கப்பட்டிருந்தாலும் நீதிபதிகளாக வர வேண்டும் என்ற கனவை அவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

Advertisment

ஏனென்றால் தமிழகத்தில் மொத்தம் உள்ள 14 அரசு சட்டக் கல்லூரிகளில் 9 சட்ட கல்லூரிகளில் பெண்கள்தான் சட்டக்கல்லூரி முதல்வராக இருக்கிறார்கள். இதையெல்லாம் பார்க்கும்போது நாளை நீதித்துறை பெருமளவு பெண்கள் கையில் இருக்கும் நிலை உள்ளது. அது சமுதாய மாற்றத்தைப் பொறுத்து நீதித்துறையும் மாறும், வழக்கின் தன்மைகளும் மாறும். இப்போதைய காலகட்டத்தில் விவாகரத்து, அதன் மூலம் குழந்தைகள் பராமரிப்பு போன்ற வழக்குகள் நடைபெறுகின்றன. இதுபோன்ற வழக்குகள் வரும் காலங்களில் அதிகரிக்கும் நிலை உள்ளது என்பதால், அதுபோன்ற வழக்குகளைக் கையாள பெண்கள் அதிக அளவில் நீதித்துறையில் பணியாற்ற வேண்டும்” இவ்வாறு உச்ச நீதிமன்ற நீதியரசர் சுந்தரேஷ் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் செஞ்சி மஸ்தான், எம்.எல்.ஏ.க்கள் விக்கிரவாண்டி புகழேந்தி, விழுப்புரம் டாக்டர் லட்சுமணன் ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும், பேராசிரியர்கள், மாணவர்கள் பெருமளவில் கலந்துகொண்டனர். விழுப்பும் சட்டக்கல்லூரியில் பயின்ற மாணவர்களுக்கு முதல் பட்டமளிப்பு விழா வெகு சிறப்பாக நடந்தது.