/nakkheeran/media/post_attachments/UltimateEditorInclude/UserFiles/Newsphoto-2017/SEPTEMBER/27/PROTEST FARM.jpg)
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மறியலில் ஈடுபட்ட 20 பெண்கள் உட்பட 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது.
கடலூர் மாவட்டம் டெல்டா பகுதிகளான சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் உள்ளிட்ட டெல்டா பகுதிகளில் சம்பா சாகுபடிக்கு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்க கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாநிலத்தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாவட்ட துணைதலைவர்கள் கற்பனைச்செல்வம், சதானந்தம், துணை செயலாளர் மூர்த்தி உள்ளிட்ட விவசாயிகள் கலந்துகொண்டு விவசாயிகளின் பயிர் சாகுபடிகளுக்கு தண்ணீர் திறக்காததையும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்யாத மத்திய மாநில அரசுகளை கண்டித்து கோசங்களை எழுப்பினர். மேலும் கொள்ளிடம் ஆற்றில் குமாரமங்கலம் மா.ஆதனூர் குறுக்கே கதவனை கட்ட அறிவிப்பு வெளியிட்டு மூன்று ஆண்டுகள் முடிந்தும் பணிகளை துவக்காமல் தமிழக அரசு காலதாமதம் செய்து வருவதையும் கண்டித்து கோசங்களை எழுப்பினர்.
இதுகுறித்து தமிழ்நாடு விவசாய சங்கத்தலைவரும் சிதம்பரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், மத்தியில் இருக்கின்ற மோடி அரசாங்கம் உச்சநீதிமன்ற உத்தரவு அளித்த போதும் காவேரி மேம்பாட்டு ஆணையத்தை அமைக்க மறுத்து வருகிறது. ஆனால் மாநிலத்தில் ஆட்சி பொறுப்பை ஏற்று கொண்டுள்ள எடப்பாடி பழனிச்சாமி அரசு மத்திய அரசை கண்டித்து ஒரு வார்த்தைக்கூட பேச மறுக்கிறது. மேலும் தமிழகத்திற்கு இதுவரையில் கிடைக்க வேண்டிய தண்ணீரை கர்நாடகா அரசிடம் பெற்று உடனடியாக மேட்டூர் அணையை திறக்க வேண்டும். மேட்டூர் அணையை திறக்க காலதாமதம் செய்தால் தமிழக அரசை கண்டித்து டெல்டா மாவட்டத்தில் இன்னும் இரண்டு நாட்களில் தொடர் போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.
- காளிதாஸ்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)