ADVERTISEMENT

திசைமாறும் கடத்தல் டெக்னிக்... கூரியர் வாகனத்தில் 350 கிலோ கஞ்சா

05:05 PM Oct 04, 2022 | kalaimohan

ADVERTISEMENT

லாரிகள், சரக்கு வாகனங்கள், பேருந்துகள், டூவீலர் என்று சமயங்களில் கிடைத்த வாகனங்களில் போதைப் பொருட்கள் கடத்தப்படுவது உளவாளிகளின் தகவலால் போலீசார் வசம் சிக்கிவிடுகின்றன. ஆனாலும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டங்களும், கடத்தல்களும் தலை கவிழ்ந்த மாதிரி தெரியவில்லை. தற்போது கடத்தல் புள்ளிகள் போலீசாரின் பார்வை பதியாதவகையில் தங்களின் கடத்தல் ரூட்டை டெக்னிக்கலாக மாற்றியுள்ளனர்.

ADVERTISEMENT

நேற்றைய தினம் மாலையில் தூத்துக்குடி மாவட்டத்தின் சூரங்குடி போலீசார் வேம்பார் சோதனைச் சாவடியில் வாகனச் சோதனையில் இருந்திருக்கின்றனர். அப்பொழுது அந்த வழியாக வந்த கூரியர் வாகனம் ஒன்று சோதனைச் சாவடியில் நிற்காமல் கிழக்கு கடற்கரை சாலை வழியே தூத்துக்குடி நோக்கிப் பறந்திருக்கிறது. இதனால் சந்தேகமடைந்த போலீசார் கூரியர் வாகனத்தை விடாமல் தொடர்ந்து 15 கி.மீ. தொலைவு விரட்டி சென்றிருக்கிறார்கள். அவர்களின் துரத்தலைக் கண்டு பீதியானவர்கள் குளத்தூரையடுத்த பல்லாங்குளம் காட்டுப் பகுதியின் முள்வேலி புதருக்குள் கூரியர் வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பியோடியுள்ளனர். பின் தொடர்ந்த போலீசார் கூரியர் வாகனத்தை சோதனையிட்டதில் 350 கிலோ கஞ்சா மூட்டைகள் இருப்பதைக் கண்டுபிடித்து அதனையும் வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

தகவலறிந்த எஸ்.பி.பாலாஜி சரவணன், ஏ.டி.எஸ்.பி.கார்த்திகேயன் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து கஞ்சா கடத்தப்பட்ட கூரியர் வாகனத்தைப் பார்வையிட்டனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த சூரங்குடி போலீசார் தப்பியோடியவர்களை தனிப்படை மூலம் தேடி வருகின்றனர். சிக்கிய கஞ்சாவின் இந்திய மதிப்பு 2 கோடி என்றாலும் இதன் சர்வதேச மதிப்பு 8 கோடி என்கிறார்கள். 24 மணி நேரத்திற்குள் குறையாது சரக்குகளை சப்ளை செய்கிற கூரியர் வாகனங்கள் இதுவரை சந்தேக வளையத்தில் இல்லை. தற்போதைய கடத்தல் மூலம் அவைகளும் கண்காணிக்கப்படுகின்றன. இலங்கைக்கு கடத்தும் பொருட்டு கொண்டுவரப்பட்டதா என போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT