
தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பல்வேறு கரோனா தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. மாவட்டங்களுக்கு ஒரு அமைச்சர் நியமிக்கப்பட்டு, கரோனா தடுப்புப் பணிகள் மற்றும் ஊரடங்கு பணிகளை கண்காணித்து வருகின்றனர். அதேபோல் தமிழகத்தில் ஆக்சிஜன் இருப்பு ,படுக்கை இருப்பு குறித்தும் தெரிந்துகொள்ள கட்டளை அறை (War Room) உருவாக்கப்பட்டு செயலில் உள்ளது.
இந்நிலையில் ஊரடங்குக்கு பிறகு சில நாட்களாக தமிழகத்தில் பதிவாகி வரும் கரோனா தொற்று எண்ணிக்கை சற்று குறைந்து வந்தாலும் கோவையில் பாதிப்பு மிக அதிகமாகவே உள்ளது. குறிப்பாக கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கரோனா சிறப்பு தடுப்பு கண்காணிப்புகளுக்காக மூன்று ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நியமித்துள்ளார். அதேபோல் மறுபுறம் தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு குறித்த எச்சரிக்கைகளும், விழிப்புணர்வுகளும் தமிழகத்தில் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கருப்பு பூஞ்சை நோய்க்கான மருந்து குப்பிகள் வாங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 111 பேருக்கு இதுவரை கருப்பு பூஞ்சை பாதிப்பு உருவாகியுள்ளது. சென்னையில் அரசு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவரும் 108 பேருக்கும், தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் மூன்று பேருக்கும் கருப்பு பூஞ்சை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வேலூரில் 74 பேருக்கும், கோவையில் 43 பேருக்கும், சேலத்தில் 38 பேருக்கும், மதுரையில் 26 பேருக்கும், தஞ்சையில் 23 பேருக்கும், திருச்சியில் 21 பேருக்கும் என மொத்தம் தமிழக அரசு மருத்துவமனைகளில் 196 பேருக்கும், தனியார் மருத்துவமனைகளில் 204 பேருக்கும் கருப்பு பூஞ்சை நோய்க்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.