Advertisment

ஆட்சியர், அதிகாரிகளை மாவட்ட செயலர் மிரட்டுவது தான் திராவிட மாடலா? - அன்புமணி

 District Secretary threatening Collector and officials the Dravidian model

அதிகாரிகளை திமுக மாவட்டச் செயலாளர்களை வைத்து மிரட்டுவது தான் திராவிட மாடலா? என்பதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் விளக்கமளிக்க வேண்டும். அதிகாரிகளை அச்சுறுத்திய திமுக மாவட்ட பொறுப்பாளர் தர்மசெல்வன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

Advertisment

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தருமபுரி மாவட்டத்தைப் பொறுத்தவரை மாவட்ட ஆட்சியராக இருந்தாலும், காவல்துறை கண்காணிப்பாளர் ஆக இருந்தாலும் நான் சொல்வதைத் தான் கேட்க வேண்டும்; இல்லாவிட்டால் அந்த அதிகாரி இருக்க மாட்டான் என்று தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் தர்மசெல்வன் பேசியதாக ஓர் ஆடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட இந்திய குடிமைப் பணி அதிகாரியை ஒரு கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் ஒருமையில் திட்டுவதும், அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தமிழக அரசு வேடிக்கைப் பார்ப்பதும் கண்டிக்கத்தக்கவை.

Advertisment

தருமபுரி கிழக்கு மாவட்ட திமுகவின் பொறுப்பாளராக அண்மையில் நியமிக்கப்பட்ட தர்மசெல்வன் நேற்று தருமபுரியில் நடைபெற்ற அக்கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டத்தில் பேசியதாக ஆடியோ ஒன்று சமூக ஊடகங்ளில் வேகமாக பரவி வருகிறது. அந்த ஆடியோவில்,‘‘ இந்த மாவட்டத்தில் ஆட்சியராக இருந்தாலும், காவல் கண்காணிப்பாளராக இருந்தாலும், அவர்களுக்குக் கீழ் உள்ள அதிகாரிகளாக இருந்தாலும் நான் சொல்வதைத் தான் கேட்க வேண்டும். இல்லாவிட்டால் அவங்க இருக்க மாட்டாங்க. இதை நான் செய்வேன். எனக்குத் தெரியாமல் அவர்கள் ....... கூட விட முடியாது. இங்கு யாரும் கேம் ஆட முடியாது. அதிகாரிகள் கேம் ஆடினால் அவர்கள் கதை முடிந்து விடும்’’ என்று தர்மசெல்வன் பேசியிருக்கிறார். அதிகாரிகளை இவ்வாறு மிரட்டுவதை அனுமதிக்க முடியாது.

அரசியல்வாதிகள் தற்காலிகமானவர்கள்; அவர்கள் அதிகாரத்திற்கு வருவதும், பதவியிலிருந்து இறங்குவதும் காலத்தின் சுழற்சியில் மாறி மாறி நடந்து கொண்டிருக்கும். ஆனால், அதிகாரிகள் நிரந்தமானவர்கள்; அவர்கள் தான் அரசை இயக்குபவர்கள். முதலமைச்சராக இருப்பவரால் கூட எந்த ஆணையையும் பிறப்பிக்க முடியாது. முதலமைச்சருக்கு செயலாளரை நியமிக்கும் ஆணையாக இருந்தாலும் அதில் அரசுத்துறை செயலாளர்கள் தான் கையெழுத்திட வேண்டும். அரசு நிர்வாகத்தின் ஆணி வேராக திகழும் அதிகாரிகளை ஆட்சியாளர்கள் மிகவும் மரியாதையாக நடத்த வேண்டும். ஆனால், எந்த அதிகாரத்திலும் இல்லாத, பத்தாம் வகுப்புக் கூட படிக்காத ஒருவர், திமுகவின் மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு விட்டார் என்ற ஒரே காரணத்திற்காக மாவட்ட ஆட்சியரையும், காவல்துறை கண்காணிப்பாளரையும் மிரட்டும் வகையில் பேசுவது அரசு எந்திரத்தின் மீது நடத்தப்பட்ட அவமரியாதையான தாக்குதல் ஆகும்.

மாவட்ட அதிகாரிகளை மிரட்டுவதுடன் மட்டும் இல்லாமல், அதற்கு திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்களின் அங்கீகாரமும் இருப்பதாக மாவட்ட பொறுப்பாளர் தர்மசெல்வன் கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.‘‘ தலைவரே என்னிடம் சொல்லியிருக்கிறார். நீ சொல்வதை அதிகாரிகளோ அல்லது மற்றவர்களோ கேட்கவில்லை என்றால் உனது லெட்டர் ஹெட்டில் எழுதி எனக்கு கடிதமாகக் கொடு என்று என்னிடம் தலைவர் கூறியிருக்கிறார்’’ என்று தர்மசெல்வன் எச்சரித்திருக்கிறார். மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பும், அவர்கள் கண்ணியமாக நடத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டிய வேண்டிய பொறுப்பும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு உண்டு. ஆனால், அவரே அதிகாரிகளை மிரட்ட அதிகாரம் கொடுத்திருப்பதாக மாவட்ட பொறுப்பாளர் கூறுகிறார். தமது ஒப்புதலுடன் தான் அவர் அப்படி பேசினாரா? என்பதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் விளக்கமளிக்க வேண்டும்; அப்படி இல்லையெல்லாம் தர்மசெல்வன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் அதிகாரிகளை மிரட்டும் ஆடியோ வெளியாகியிருப்பதால் இந்த உண்மை வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் திமுகவினரால் தொடர்ந்து அவமதிக்கப்பட்டு கொண்டு தான் இருக்கிறார்கள். அவற்றுக்கான ஆதாரங்கள் இல்லாததால் அவை வெளியுலகத்திற்கு தெரியவில்லை. இப்படியாக தமிழ்நாடு முழுவதும் திமுகவினரால் அதிகாரிகள் தொடர்ந்து அவமரியாதை செய்யப்பட்டு வருகின்றனர். ஏதோ சில காரணங்களுக்காக அதிகாரிகளும் இதை சகித்துக் கொள்வது வேதனையளிக்கிறது.

அதிகாரிகள் என் பேச்சைக் கேட்காவிட்டால் அவர்களின் கதையை முடித்து விடுவேன், அவர்கள் இனி இருக்க மாட்டார்கள் என திமுக மாவட்டச் செயலாளர்களை வைத்து மிரட்டுவது தான் திராவிட மாடலா? என்பதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் விளக்கமளிக்க வேண்டும். அதிகாரிகளை அச்சுறுத்திய திமுக மாவட்ட பொறுப்பாளர் தர்மசெல்வன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

anbumani
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe