Skip to main content

பள்ளியில் திடீர் விசிட் அடித்த மாவட்ட ஆட்சியர்; தாமதமாக வந்த ஆசிரியர்கள் மீது அதிரடி நடவடிக்கை

Published on 25/11/2023 | Edited on 25/11/2023

 

The district collector paid a surprise visit to the school; Action taken against late teachers

 

விழுப்புரம் மாவட்டம் ஏனாதிமங்கலம் கிராமத்தில் உள்ள எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டின் மறுசீரமைப்பு நிகழ்ச்சி நேற்று (24-11-23) தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார். இந்த விழாவிற்கு அம்மாவட்ட ஆட்சியர் பழனியும் பங்கேற்றார். அதன் பின்னர், மாவட்ட ஆட்சியர் பழனி விழா முடிந்தவுடன் அருகே உள்ள கோலியனூர் ஒன்றியத்திற்குட்பட்ட கோவிந்தாபுரம், திருப்பச்சாவடிமேடு ஆகிய பகுதிகளில் உள்ள தொடக்கப் பள்ளிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

 

அதில், கோவிந்தாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் சமையல் அறைக்குச் சென்ற ஆட்சியர் பழனி, அங்கு மாணவர்களுக்குத் தயாரிக்கப்படும் காலை உணவை உண்டு பரிசோதித்தார். அதன் பின்னர், அருகில் இருக்கக்கூடிய தொடக்கப்பள்ளிக்கு சென்றார். அங்கு 25க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் படித்து வந்தனர். பள்ளி துவங்கும் நேரமாகி பள்ளி தலைமை ஆசிரியர் அங்கயற்கண்ணி மற்றும் ஆசிரியை மாலதி ஆகியோர் பணிக்கு வராததைக் கண்டு மாவட்ட ஆட்சியர் பழனி அதிர்ச்சியடைந்தார்.

 

அதன்பின், அவர் அங்குள்ள மாணவர்களிடம் நடத்தப்பட்ட பாடங்கள் குறித்தும், மனப்பாட பகுதிகளை ஒப்புவிக்கச் சொல்லியும் கேட்டார். மேலும், மாணவ மாணவிகளுக்கு பாடமும் நடத்தினார். அதனைத் தொடர்ந்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகனை தொடர்பு கொண்டு, பள்ளிக்கு வராத ஆசிரியர்கள் 2 பேர் மீதும் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். மேலும், அவர்களைப் பணியிட மாற்றம் செய்வதற்கான நடவடிக்கையும் எடுக்க உத்தரவிட்டார். இதையடுத்து, இது தொடர்பாக சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பாடம் நடத்தும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விளை நிலங்களில் அரிசி ஆலை அமைப்பதைத் தடுக்க வேண்டும் - விவசாயிகள் மனு

Published on 26/02/2024 | Edited on 26/02/2024
Farmers petition Stop setting up of rice mills on expensive land

ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடந்த மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில், கொடுமுடி வட்டம் சிவகிரி கிராமம், வள்ளிபுரம் கருக்கம்பாளையம் காலனி, பொரசமேட்டு புதூர், புது அண்ணா காலனி, நாவன்காடு விநாயகபுதூர் ஆகிய ஊர்களைச் சேர்ந்த மக்கள் திரண்டு வந்து மனு கொடுத்தனர். 

அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:- ஈரோடு மாவட்டம் கொடுமுடி வட்டம் சிவகிரி கிராமத்தில் பொரசேமேடு ஊர் அமைந்துள்ளது. இங்கு கருக்கம்பாளையம் கருக்கம்பாளையம் காலனி, பொரசமேட்டு புதூர், புது அண்ணா காலனி, நாவன் காடு விநாயகபுதூர் ஆகிய கிராம மக்களின் வாழ்வாதாரம் விவசாயமாகும். மஞ்சள், நெல், கரும்பு, வாழை மற்றும் தென்னை போன்ற பயிர்கள் நாங்கள் அதிக அளவில் பயிர் செய்து வருகிறோம். வளம் மிக்க செழுமையான புஞ்சை விவசாய நிலத்தினை கொண்டது எங்கள் கிராமம். கருக்கம்பாளையம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட குடிநீர் தேவைக்காக ஆழ்குழாய் கிணறு மேற்படி இடத்தினை ஒட்டி அமைந்துள்ளது. இந்நிலையில் எங்கள் விவசாய நிலத்தினை மாரப்பம்பாளையத்தைச் சேர்ந்த சிலர் விவசாயம் செய்வதாகக் கூறி நிலத்தின் உரிமையாளர்களிடம் கிரையம் பெற்றனர்.

இயற்கை விவசாயம் செய்வதாகக் கூறி நிலத்தைப் பெற்று அந்த இடத்தில் நவீன அரிசி ஆலை மற்றும் இதர தொழிற்சாலைகள் கட்டுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்காக இந்த நிலங்கள் தரிசு நிலம் என்று வகைப்படுத்தி தவறான தகவலைக் கொடுத்தும் பொய்யான ஆவணங்களை உருவாக்கி சட்டத்திற்குப் புறம்பாக மின் இணைப்பை அரசுகளிடம் இருந்து என்ஓசி போன்ற இதர உரிமைகளைப் பெற முயற்சி செய்கிறார்கள். இந்த செயல் எங்களுக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. இதனைக் கண்டித்து கடந்த 14 ஆம் தேதி சிவகிரி மின் அலுவலகத்துக்கு முன்பு 200க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் ஒன்றுகூடி கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தினோம். 

இங்கே தொழிற்சாலை தொடங்கப்பட்டுவிட்டால் எங்கள் ஊரின் தண்ணீர் வளம் குன்றி நிலத்தடி நீர் வற்றி நிலமும் கெட்டுப் போய்விடும். விவசாய நிலங்களும் பாழ்படும். பொதுமக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும். காற்று மாசுபாடு போன்ற இயற்கை பேரழிவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தி அதிகாரிகள் கொண்ட குழு அமைத்து கிராமங்களில் கூட்டம் நடத்தி கோரிக்கைகளை கேட்டு அறிந்து உரிய நீதி கிடைக்க வழி செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் அதில் கூறியுள்ளனர்.

Next Story

ரூ. 2 ஆயிரம் கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல்; கைதானவர்கள் விவரங்கள் வெளியீடு!

Published on 26/02/2024 | Edited on 26/02/2024
worth 2 thousand crores incident details released

டெல்லியில் போதைப்பொருள் தடுப்பு காவல்துறை மற்றும் டெல்லி சிறப்பு காவல்துறை சார்பில் நடைபெற்ற சோதனையில் கடந்த 24 ஆம் தேதி 50 கிலோ ரசாயன வகை போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்திருந்தனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கடந்த 3 ஆண்டுகளில் 3 ஆயிரத்து 500 கிலோ போதைப் பொருள்கள் கடத்தப்பட்டுள்ளதாகவும், இதன் மொத்த மதிப்பு ரூ. 2 ஆயிரம் கோடி எனவும் தெரியவந்தது.

தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த போதைப் பொருள் கடத்தலில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் ஒருவருக்கும் தொடர்பு உள்ளதாகவும், அவர் போதைப்பொருள் கடத்தல் சம்பவத்திற்கு மூளையாகச் செயல்பட்டதும் தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்திய நிலையில் திரைப்படத் தயாரிப்பாளரும், தி.மு.க.வின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் ஜாபர் சாதிக்தான் அந்த நபர் என்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து தி.மு.க. சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் ஜாபர் சாதிக் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் கட்சியிலிருந்து அவரை நிரந்தரமாக நீக்குவதாக தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் ரூ. 2 ஆயிரம் கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் கைதானவர்கள் யார் என்ற விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டது சென்னையைச் சேர்ந்த முகேஷ், முஜிபுர் ரஹ்மான் மற்றும் விழுப்புரத்தைச் சேர்ந்த அசோக்குமார் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்ற விவரம் தெரியவந்துள்ளது. மேலும் இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கடத்தல் கும்பல் தலைவனாக ஜாபர் சாதிக் செயல்பட்டதும் உறுதியாகியுள்ளது.