District Collector inspects rain-affected areas in Chidambaram area

கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி. ஆதித்யா செந்தில்குமார் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சிதம்பரம் நகரையொட்டி ஓடும் பாசிமுத்தான் ஓடை, தில்லை காளியம்மன் ஓடை மற்றும் தில்லைவிடங்கன் கிராமத்தில் உள்ள புயல் பாதுகாப்பு மையம், கிள்ளை பேரூராட்சி குச்சிப்பாளையம் மற்றும் பரங்கிப்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Advertisment

அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கீழ்மூங்கிலடி கிராமத்தில் உள்ள இராகவேந்திரா கல்லூரி அருகே அமைந்துள்ள பாசிமுத்தான் ஓடையில் மழைநீர் செல்வதையும், நீர்வரத்து வாய்க்கால் தூர்வாரும் பணிகள் மற்றும் சிதம்பரம் பேருந்து நிலைய மேம்பாலம் அருகே பாசிமுத்தான் ஓடை மற்றும் முத்தையா நகரில் உள்ள பாசிமுத்தான் ஓடைகளில் ஜேசிபி இயந்திரம் மூலம் ஓடையில் உள்ள செடி கொடிகளை அகற்றும் பணிகளும் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து, பைசல் மஹால் அருகே மழைநீர் செல்வதற்கு ஏதுவாக தில்லை காளியம்மன் ஓடையில் ஜேசிபி வாகனம் மூலம் தூர்வாரும் பணிகள், மேலும் அங்கு மழைநீர் வடிந்திட ஓடையின் கரைகளில் இருந்த தேவையற்ற செடிகொடிகளை அகற்றும் பணிகளும் நடைபெற்று வருகிறது.

Advertisment

அனைத்து வடிகால் கால்வாய்கள் மற்றும் வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகளை அலுவலர்கள் தொடர்ந்து கண்காணித்து துரிதமாக பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. தில்லைவிடங்கன் புயல் பாதுகாப்பு மையத்தில் பொதுமக்களை தங்கவைக்க ஏதுவாக மின்சாரம், குடிநீர், ஜெனரேட்டர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தயார் நிலையில் உள்ளன. மேலும், அனைத்து புயல் பாதுகாப்பு மையங்கள் மற்றும் தற்காலிக தங்குமிடங்களில் பொதுமக்களுக்கு உணவு தயார் செய்ய அரிசி உள்ளிட்ட அனைத்து பொருட்களும் தயார் நிலையிலுள்ளது.

கிள்ளை பேரூராட்சி தாழ்வான பகுதியாகவும், மழைநீரினால் பெரிதும் பாதிப்படையும் பகுதியாக அடையாளப்படுத்தப்பட்ட பகுதியாக உள்ளது. தொடர்ந்து, மழைபெய்யும் பட்சத்தில் பொதுமக்களை மீட்டு நிவாரண முகாம்களில் தங்கவைத்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. நீர்வளத்துறைச் செயற்பொறியாளர் காந்தரூபன், சிதம்பரம் நகராட்சி ஆணையாளர் மல்லிகா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நாகராஜபூபதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisment