
மாற்றுத்திறனாளி மக்களுக்கு அலிம்கோ நிறுவனம் வாயிலாகச் செயற்கை உடல் உறுப்புகள் வழங்கிட மத்திய அரசு மூலம் அனுமதி பெற்றிருப்பதாகக் கரூர் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்ட ஆட்சியர் அதற்கான சிறப்பு முகாம்களை நடத்த மறுக்கிறார் என்றும், மேலும் தன்னை மக்கள்பணி செய்ய விடாமல் தடுப்பதாகவும் குற்றம்சாட்டி கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து இன்று உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டார் கரூர் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி.
இதுகுறித்து தகவலறிந்து வந்த கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர், எம்.பி ஜோதிமணியிடம் தரையில் அமர்ந்து மாநில அரசின் மாற்றுத்திறனாளிகள் முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். அதனை எம்பி ஜோதிமணி ஏற்கவில்லை. அலிம்கோ சார்பில் சிறப்பு முகாம்களை நடத்துவதாக உறுதியளித்தால் தான் போராட்டத்தைக் கைவிடுவதாக அவர் உறுதியுடன் தெரிவித்தார்.
மேலும் இந்தப் போராட்டம் குறித்து ஜோதிமணி கூறுகையில்,''கரூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் இருக்கும் ஆட்சியர்கள் சிறப்பு முகாம்களை நடத்தினார்கள். அங்கு ஆயிரம் பேருக்கும் மேல் செயற்கை உடல் உறுப்புகளைப் பெறுவதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள்.
கரூர் மாவட்டத்திலும் அப்படிப் பயனாளிகளைத் தேர்ந்தெடுத்தால், அந்நிறுவனம் உடனடியாக அனைவருக்கும் செயற்கை உறுப்புகளை வழங்கிவிடும். ஆனால் கமிஷன் என்ற ஒரே நோக்கத்திற்காக இந்தத் திட்டம் மூலமாகப் பொதுமக்களுக்குக் கிடைக்கக்கூடிய உபகரணங்களைக் கிடைக்கவிடாமல் மாவட்ட ஆட்சியர் தடுக்கிறார்” என்று குற்றம்சாட்டினார்.