District and corporation administration giving   gifts for the vaccine! What is the reason?

Advertisment

கரோனா இரண்டாம் அலை தமிழ்நாட்டில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. அதனைக் கட்டுக்குள் கொண்டுவர தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. குறிப்பாக இரண்டாம் அலை உச்சம் அடைந்தபோது, கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு தொற்று பரவலின் எண்ணிக்கை சற்று குறையவே, ஊரடங்கில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு தளர்வுகள் அளிக்கப்பட்டுவருகிறது. இது கரோனா பரவலை ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டுவந்தாலும், கரோனா தொற்றிலிருந்து தற்காத்துக்கொள்ள தடுப்பூசிகள் அவசியமாக இருக்கிறது.

இதனால், கரோனா தடுப்பூசியை மக்கள் அதிகளவில் செலுத்திக்கொள்ள அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. குறிப்பாக தமிழ்நாடு அரசு தொடர்ந்து வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமையில் மெகா தடுப்பூசி முகாம்களை நடத்திவருகிறது. அதன்படி கடந்த வாரம்வரை தொடர்ந்து மூன்று மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் அனைத்து அரசு துறைகளையும் இணைத்து தடுப்பூசி விழிப்புணர்வும், தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கான அவசியத்தையும் வலியுறுத்தி தடுப்பூசி போடப்படுகின்றன. வீடு வீடாகச் சென்றும் தடுப்பூசி போடப்பட்டுவருகின்றன.

இருந்தபோதிலும், இன்னும் பலர் முதல் தவணை தடுப்பூசியையே செலுத்தாமல் இருந்துவருகின்றனர். இந்நிலையில், இந்த வார ஞாயிற்றுக்கிழமையும் (10.10.21) தமிழ்நாடு அரசு சார்பில் தமிழ்நாடு முழுக்க மெகா தடுப்பூசி முகாம் நடைபெறவிருக்கிறது. இதில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் மக்களுக்குப் பல்வேறு பரிசுகளை சில மாவட்ட நிர்வாகங்கள் அறிவித்துள்ளன.

Advertisment

அந்த வகையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் நாளை (10ஆம் தேதி) நடைபெறும் மெகா தடுப்பூசி முகாமில் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் நபர்களின் பெயர்களைக் குறிப்பெடுத்து அதைக்கொண்டு குலுக்கல் நடத்தப்படவிருக்கிறது. அந்தக் குலுக்கலில் தேர்ந்தெடுக்கப்படும் மூன்று நபர்களுக்கு 40 இன்ச் எல்.இ.டி கலர் டிவி வழங்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

அதேபோல், மதுரை மாநகராட்சியில் நாளை நடைபெறும் மெகா தடுப்பூசி முகாமில் முதல் தவணை கரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்பவர்களுக்கு குலுக்கல் முறையில் பரிசுகள் வழங்கப்படவுள்ளது. முதல் பரிசாக வாஷிங் மிஷின், 2ஆம் பரிசாக 2 நபர்களுக்கு ஆண்ட்ராய்டு செல்ஃபோன், 3ஆம் பரிசாக 10 நபர்களுக்கு பிரஷர் குக்கர், சிறப்பு பரிசாக 30 நபர்களுக்கு சேலைகள், வேட்டிகள் மற்றும் துண்டுகள் வழங்கப்படவுள்ளன.

தமிழ்நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி செலுத்தி 100 சதவீத தடுப்பூசி செலுத்தப்பட்டு மக்களைக் காக்க மாநில அரசு முதல் மாவட்ட, மாநகராட்சி நிர்வாகங்கள் வரை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றன.