ADVERTISEMENT

'தகுதி நீக்கம்... பதவி நீக்கம்...'- விளவங்கோட்டுக்கு இடைத்தேர்தல்

02:44 PM Feb 24, 2024 | kalaimohan

காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதரணி பாஜகவில் இணைந்த நிலையில் அவரை சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

கடந்த மூன்று முறையாக தொடர்ந்து விளவங்கோடு தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வான காங்கிரஸைச் சேர்ந்த விஜயதரணி, நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில் பா.ஜ.க.வில் இணையப்போவதாக தகவல்கள் வெளியாகியிருந்தது. இது, காங்கிரஸ் ஆதரவாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

ADVERTISEMENT

விஜயதரணி, 2021ல் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றபோது, சட்டமன்ற காங்கிரஸ் குழுத் தலைவர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்தாகவும் அது கிடைக்காமல் போக பிறகு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவி கிடைக்கும் என நினைத்ததாகவும் ஆனால், சமீபத்தில் சட்டமன்ற காங்கிரஸ் குழுத் தலைவர் பதவி செல்வப்பெருந்தகைக்கு வழங்கப்பட்டது. மேலும் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டும் கிடைக்காததால் விஜயதரணி அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

முன்னதாகவே அவர் டெல்லியில் முகாமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில், தற்போது இன்று பிற்பகல் 2 மணிக்கு டெல்லியில் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்நிலையில் சுதாகர் ரெட்டி, மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் முன்னிலையில் தற்போது விஜயதரணி பாஜகவில் இணைந்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து பேசிய விஜயதரணி, 'தமிழகத்தில் பாஜகவை பலப்படுத்த செயல்படுவேன். சில கடினமான சூழ்நிலைகள் இருந்தாலும், கடந்த காலம் கடந்த காலமாகவே இருக்கட்டும். பாஜக அரசின் திட்டங்களால் மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்' என தெரிவித்தார். தற்போது விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் விஜயதரணி பாஜகவில் இணைந்துள்ளதால் அவரை சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க தமிழ்நாடு காங்கிரஸ் முடிவெடுத்துள்ளது. பாஜகவில் இணைந்த விஜயதரணியை காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்க காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் அஜய் குமார் உத்தரவிட்டுள்ளார். அதேநேரம் விஜயதரணியும் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

அதேபோல் அவர் வகித்து வரும் சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்தும் அவரை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என காங்கிரஸ் அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். தகுதி நீக்க கடிதம் தமிழக சபாநாயகரிடம் அளிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது. விஜயதரணி சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுவதால் விளவங்கோடு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. தற்போது நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி நெருங்கி வருவதால் நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து விளவங்கோடு இடைத்தேர்தலும் நடைபெற வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT