விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகில் உள்ள தீவனூர் என்ற ஊரைச் சேர்ந்தவர் பொய்யாதப்பன். இவரது மனைவி ஜெயலட்சுமி. இவர்களுக்கு மூன்று மகள், ஒரு மகன். இந்த நிலையில் பொய்யாதப்பன் தனது மகன் மகாலட்சுமியை அதே ஊரில் உள்ள ஜெகன் என்ற ஐயப்பனுக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார். புஷ்பராணி என்ற மற்றொரு மகளை செஞ்சி தாலுக்கா வாளப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த அன்புராஜ் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார். அன்புராஜ் புஷ்பராணி தம்பதிக்கு ஒரு பெண், ஒரு ஆண் குழந்தை. ஐயப்பன் மகாலட்சுமி தம்பதிக்கு குழந்தை இல்லை.
இந்த நிலையில் ஐயப்பனுக்கும் அவரது மனைவி மகாலட்சுமிக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கணவரை விட்டு பிரிந்து மகாலட்சுமி தாய் தந்தை வீட்டுக்குச் சென்று வாழ்ந்து வந்ததாக தெரிய வருகிறது. இதனால் கோபமடைந்த ஐயப்பன் மாமனார் பொய்யாதப்பன்வீட்டிற்கு சென்று தன் மனைவி மகாலட்சுமியை தன்னுடன் சேர்ந்து குடும்பம் நடத்த அனுப்பி வைக்குமாறு அடிக்கடி சென்று கேட்டுள்ளார். இதன் காரணமாக அவர்களுக்குள் பிரச்சனை இருந்து வந்துள்ளது. இது குறித்து இன்னொரு மருமகன் அன்பு ராஜுவிடம் பொய்யாதப்பன் தெரிவித்துள்ளார்.
இதன் அடிப்படையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அன்புராஜ் தீவனூரில் உள்ள ஐயப்பன் வீட்டிற்கு சென்று தகராறு செய்ததோடு ஐயப்பனின் இருசக்கர வாகனத்தை உடைத்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று அன்புராஜ் மாமனார் பொய்யாதப்பன் வீட்டிற்கு வந்துள்ளார் இதுகுறித்து தகவல்அறிந்த ஐயப்பன் அங்கு சென்று அன்புராஜிடம் என் வீட்டிற்கு வந்து என் இரு சக்கர வாகனத்தை ஏன் சேதப்படுத்தினாய் என்று கேட்டுள்ளார். அப்போது அன்புராஜுக்கும், ஐயப்பனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அந்த மோதலில் அருகில் கிடந்த மரக்கட்டையை எடுத்து அன்புராஜ் ஐயப்பன் தலையில் பலமாக தாக்கியுள்ளார். இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த ஐயப்பனை அருகில் இருந்தவர்கள் ஓடி சென்று பார்த்துள்ளனர். ஐயப்பன் அந்த தாக்குதலில் இறந்து போனது தெரிய வந்தது.
இது குறித்து உடனடியாக ரோஷனை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் ஐயப்பன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அன்புராஜ் தாக்கியதில் ஐயப்பன் உயிரிழந்ததும் அன்புராஜ் அங்கிருந்து தலைமறைவாகி விட்டார். இதையடுத்து போலீசார் அன்புராஜ் மனைவி புஷ்பராணி மாமனார் பொய்யாதப்பன் மாமியார் ஜெயலட்சுமி ஆகியோரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள அன்புராஜ் தீவிரமாக தேடி வருகின்றனர். உறவினர்களுக்குள் ஏற்பட்ட மோதல் ஒரு கொலையில் முடிந்துள்ளது. அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.