Skip to main content

பணி வழங்குவதில் மருத்துவர்களிடையே தகராறு; இணை  இயக்குநர் விசாரணை!

Published on 06/06/2023 | Edited on 06/06/2023

 

Dispute among doctors over appointment in Dharmapuri

 

தர்மபுரி மாவட்டம் அரூர் அரசு மருத்துவமனையில் நாள்தோறும் சுமார் 1000க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். இந்த மருத்துவமனையில் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய தாய் சேய் அவசர  சிகிச்சை மையம், குடும்ப நலக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை, பிரசவ கால அறுவை சிகிச்சை, அதேபோல் ரத்தப் பரிசோதனை, ஸ்கேன் எக்ஸ்ரே, தமிழக முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்திலும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

 

இந்த மருத்துவமனையை மையப்படுத்தி அரூர், மொரப்பூர் பாப்பிரெட்டிப்பட்டி, கடத்தூர், தீர்த்தமலை, சித்தேரி உள்ளிட்ட பகுதிகளில் வாழும் மக்கள் இந்த மருத்துவமனைக்கு வருகை தருவதால் நோயாளிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் அரூர் அரசு மருத்துவமனையில் 19 மருத்துவர்கள்  பணியாற்றி வருகிறார்கள். இதில் பத்துக்கும் குறைவான மருத்துவரே நாள்தோறும் சுழற்சி முறையில் பணியில் உள்ளதாகவும், மருத்துவர்கள்  பற்றாக்குறையால் நாள்தோறும் காலை நேரங்களில் 9 மணிக்குப் பிறகு அரசு மருத்துவர்கள் மருத்துவமனைக்கு வருகை தருவதாக நோயாளிகள் புகார் கூறுகின்றனர். 

 

இந்நிலையில் இன்று மருத்துவமனையில் பணி வழங்குவதில் இரு  மருத்துவர்கள் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. அரூர் மருத்துவமனையின் மருத்துவ அலுவலர் ஒரு குறிப்பிட்ட ஐந்து மருத்துவர்களுக்கு மட்டுமே தொடர்ந்து பணி வழங்குவதாகவும், அவர்கள் ஐந்து பேரும் ஒரே சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்பதால் அவர்களுக்குப் பணி வழங்குவதாக மருத்துவர் ஒருவர் மருத்துவ அலுவலர் ராஜேஷ்  கண்ணனிடம் கேட்டதாகவும், நான் அப்படிதான் பணி வழங்குவேன்., உன்னால் முடிந்ததைப் பார்த்துக்கொள் என்று வாய் தகராற்றில் ஈடுபட்டதாகத் தெரிய வருகிறது. பாதிக்கப்பட்ட மருத்துவர் இது குறித்து தர்மபுரி மாவட்ட இணை  இயக்குநர் சாந்தி அவர்களுக்கு புகார் மனு கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் இணை இயக்குநர் சாந்தி, தகராற்றில் ஈடுபட்ட  மருத்துவர்களிடம் விசாரணை மேற்கொண்டார்.

 

இது தொடர்பாக இணை இயக்குநர் சாந்தி கூறுகையில், “இது சம்பந்தமாக விசாரணை செய்ததாகவும் விசாரணையின் அறிக்கையை தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு சமர்ப்பிப்பதாகவும்  மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து தர்மபுரி ஆட்சியர் முடிவு செய்வார்” என்று தகவல் அளித்தார். 

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

“டாக்டர் டீ குடிக்கக் கூடாதா...” - இ.எஸ்.ஐ. அவலம்!

Published on 03/12/2023 | Edited on 03/12/2023

 

Shouldn't you drink Dr. Tea? -ESI

 

சிகிச்சைக்காக  தனியார் மருத்துவமனைக்குச் செல்லும் அளவுக்கு வசதியில்லாத அந்தப் பெண் வீட்டில், “நீ வேலை பார்க்கும் நிறுவனத்தில் உன் சம்பளத்திலிருந்து இ.எஸ்.ஐ. பிடித்தம் செய்கிறார்களே? தீராத தலைவலிக்கு அங்கு போய் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டியதுதானே?” என்று கூற, அந்தப் பெண்ணோ “இன்று ஞாயிற்றுக்கிழமை டாக்டர்கள் வருகிறார்களோ இல்லையோ? விடுமுறை நாளோ? ஒன்றும் தெரியவில்லையே?” என்றிருக்கிறார். அந்த வீட்டில் நம்மைத் தொடர்பு கொண்டு இதுகுறித்துப் பேச, வலைத்தளத்தில் விபரம் தெரிந்துகொண்டு “இன்று மதியம் 1 மணி வரை இ.எஸ்.ஐ. மருத்துவமனை வேலை நேரம்” எனக் கூறினோம்.

 

அந்தப் பெண் இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்குக் கிளம்பியபோது நம்மையும் அழைக்க, உடன் சென்றோம். நாம் சிவகாசி இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்குச் சென்றபோது பகல் மணி 11.30. அங்கிருந்த தகவல் பலகையில் வெளிநோயாளிகள் பார்க்கும் நேரம் 8 மணி முதல் 12 மணி வரை எனப் போட்டிருந்தனர். ஆனால், எந்தப் பிரிவிலும் மருத்துவர் ஒருவர்கூட இல்லை. செவிலியர் ஒருவரிடம்  ‘டாக்டர் எங்கே?’ எனக் கேட்டோம்.  “இப்போதுதான் ஓ.பி. பார்த்துட்டு கிளம்பினார்.” என்றார்.  ‘யாரிடம் புகார் தெரிவிப்பது?’ என்று கேட்டபோது,  ‘புகார் எழுதுறதுன்னா.. ஒரு தாளில் எழுதி.. அங்கிருக்கும் புகார் பெட்டியில் போட்டுவிட்டுக் கிளம்புங்க..” என்று புகார் பெட்டி இருக்கும் இடத்தைக் கைகாட்டிவிட்டு, “டாக்டர் டீ குடிக்கப் போயிருக்கிறார். வெயிட் பண்ணுங்க. போன் பண்ணி வரச் சொல்லுறேன்.” என்றார்  கூலாக.  

 

Shouldn't you drink Dr. Tea? -ESI

 

நாம் இ.எஸ்.ஐ. மருத்துவக் கண்காணிப்பாளர் அசோக்கை தொடர்புகொண்டு இது குறித்துப் பேசினோம்.  “இன்னைக்கு ஞாயிற்றுக்கிழமைங்கிறதுனால ஓபில நோயாளிங்க எண்ணிக்கை குறைவாகத்தான் இருந்திருக்கும். யாராச்சும் ஒரு டியூட்டி டாக்டர் இருப்பாரே? டிஸ்பென்சரில கூட்டம் இருக்கும். ஆஸ்பத்திரிக்கு நோயாளிங்க ரொம்ப பேரு வரமாட்டாங்க. டாக்டர் அங்கேதான் இருப்பாரு. அங்கிட்டு எங்கேயாச்சும் போயி யாருகிட்டயாவது பேசிட்டு இருப்பாரு. நான் டாக்டரை வரச் சொல்லுறேன்.” என்று சமாளித்தார்.

 

esi hospitel

 

அடுத்த சில நிமிடங்களில் டாக்டர் பாரத்குமார் பரபரப்புடன் வந்து வெளி நோயாளிகள் பிரிவில் அமர்ந்தார்.  நாம் அவரிடம் பேசியபோது, “இன்னைக்கு காலைல 8 மணில இருந்து 11.06 மணி வரைக்கும் 40 நோயாளிங்களை நான் ஒரு டாக்டர் இருந்து பார்த்திருக்கேன். எல்லா நோயாளிகளையும் பார்த்துட்டுத்தான் போனேன்.  அதுக்குள்ள சூப்பிரண்டுகிட்ட கம்ப்ளைன்ட் பண்ணிருக்கீங்க. அவரு ரெண்டு தடவை போன் பண்ணிட்டாரு. விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைலகூட பார்க்க முடியாத சர்ஜரிய நான் பண்ணிருக்கேன். அந்த நல்ல விஷயத்தை எல்லாம் பத்திரிகைல எழுதமாட்டீங்க. டாக்டர் டீ குடிக்கக் கூடாதா? டீ குடிச்சிட்டு வர்றதுக்குள்ள?” என்று டென்ஷனானார்.  

 

டாக்டரோ, சாமானியரோ,  டீ குடிப்பதற்கு முக்கால் மணி நேரத்துக்கு மேல் ஆகுமா என்பதுதான் கேள்வி! எத்தனை திறமையாகப் பணியாற்றினாலும் வேலை நேரத்தில் தனது இருக்கையில் டாக்டர் ஏன் இல்லை என்பதுதான் நோயாளிகளின் ஆதங்கம்!

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

திண்டுக்கல் மருத்துவரிடம் 51 லட்சம் லஞ்சம்; கையும் களவுமாக சிக்கிய அமலாக்கத்துறை அதிகாரி

Published on 01/12/2023 | Edited on 01/12/2023

 

51 lakh bribe to Dindigul doctor; The enforcement officer caught red-handed

 

திண்டுக்கல் அரசு மருத்துவமனை மருத்துவரிடம் லஞ்சம் வாங்கிய அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர் கையும் களவுமாக கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் துணை கண்காணிப்பாளராக பணிபுரிந்து வந்தவர் சுரேஷ் பாபு. கடந்த 2018 ஆம் ஆண்டு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், சுரேஷ் பாபு மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கு மதுரை அமலாக்கத்துறைக்கு சென்றது. மதுரை அமலாக்கத்துறைக்கு பதவி உயர்வு பெற்று வந்த அங்கித் திவாரி என்ற அதிகாரி, கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு மருத்துவர் சுரேஷ்பாபுவை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு வருமானத்திற்கு அதிகமாக நீங்கள் சொத்து சேர்த்தது தொடர்பான வழக்கின் விசாரணையிலிருந்து தப்பிக்க வைக்க வேண்டுமானால் மூன்று கோடி ரூபாய்  லஞ்சம் தர வேண்டும் என கேட்டுள்ளார்.

 

முதலில் இதற்கு சுரேஷ்பாபு தர மறுத்துள்ளார். ஆனால் தொடர்ந்து திவாரி தரப்பில் பேச்சுவார்த்தையில் நடைபெற்றது. இறுதியாக 51 லட்சம் ரூபாய் கண்டிப்பாக தரவேண்டும் என மிரட்டி உள்ளார் அமலாக்கத்துறை அதிகாரி திவாரி. இதனைத் தொடர்ந்து முதல் கட்டமாக மதுரை - நத்தம் சாலையில் கடந்த மாதம் ஒன்றாம் தேதி 20 லட்சம் ரூபாயை முதல் தவணையை லஞ்சமாக கொடுத்துள்ளார். அதனைத் தொடர்ந்து மீதி உள்ள தொகையை கேட்டுள்ளார் அங்கித் திவாரி.

 

மீண்டும் மருத்துவர் சுரேஷ் பாபுவை செல்போனில் தொடர்பு கொண்டு பணம் வேண்டும் என கேட்டுள்ளார். இதனையடுத்து நேற்று திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு சுரேஷ் பாபு புகார் அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் துணையோடு ரசாயனம் தடவியே 20 லட்சம் ரூபாயை பேக்கில் வைத்து இன்று காலை திண்டுக்கல் - மதுரை சாலையில் வைத்து அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரிக்கு கொடுக்கும் பொழுது கையும் களவுமாக அமலாக்கத்துறை அதிகாரி திவாரி பிடிபட்டார். தற்பொழுது லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்பி சரவணன் தலைமையில் கடந்த 12 மணி நேரமாக திண்டுக்கல் இ.பி காலனியில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் வைத்து திவாரியிடம் விசாரணை நடைபெற்ற வருகிறது. அதேநேரம் மதுரை அமலாக்கத்துறை அலுவலகம் மற்றும் அங்கித் திவாரியின் வீட்டில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

 

 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்