சென்னை பத்திரிகையாளர் மன்றத்திற்கு விரைவில் நடைபெறவுள்ள பத்திரிகையாளர் மன்றத் தேர்தலை தடை விதிக்கக் கோரி நவீன நெற்றிக்கண் பத்திரிகையின் மூத்த ஆசிரியர் ஏ.எஸ். மணியால் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. மனுவில், வாக்காளர்கள் பட்டியலில் குளறுபடி இருப்பதாகக் கூறி, மணி இந்த தேர்தலை தடை விதிக்கக் கோரியிருந்தார்.
இந்த மனு, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சௌந்தர் அமர்வில் இன்று விசாரணை வந்தது. அப்போது, சென்னை பத்திரிகையாளர் மன்றம் மற்றும் 12 உறுப்பினர்களை கொண்ட வழிகாட்டு கமிட்டியின் சார்பாக மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜரானார். விசாரணையின்போது, வில்சன் 'சென்னை பத்திரிகையாளர் மன்றத்திற்கு கடந்த 25 ஆண்டுகளாக தேர்தல் நடைபெறவில்லை என்றும் ஒரு குறிப்பிட்ட நபர்கள் மன்றத்தை ஆக்கிரமித்து, அவர்களின் தனிப்பட்ட ஆதாயத்திற்காக அதனை பயன்படுத்திவருகின்றனர் என வாதிட்டார்.
மேலும், இரண்டு தினங்களுக்கு முன்பு தான் இதுபோன்ற ஒரு மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது எனக் கூறினார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், இந்த ரிட் மனுவைத் தள்ளுபடி செய்து, தேர்தல் முடிந்த பிறகு மனுதாரர் நீதிமன்றத்தை அணுகலாம் என அறிவுறுத்தியது.