Dismissal of case against new electricity tariff!

ஊரடங்கு காலத்தின்போது, முந்தைய மின் கட்டண தொகையின் அடிப்படையில் புதிய மின் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

Advertisment

கரோனா பரவலைத் தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, மின் கணக்கீடு செய்யாததால், வீட்டு உபயோக தாழ்வழுத்த மின் நுகர்வோர், முந்தைய மாதத்திற்கு செலுத்திய கட்டணத்தின் அடிப்படையில் கட்டணம் செலுத்தலாம் எனவும், பின்னர் மின்சார கணக்கீடு செய்யும்போது, இரண்டு இரு மாதங்களுக்கும் சேர்த்து மின்சார பயன்பாடு கணக்கிட்டு, முந்தைய மாத கட்டணத்தின் அடிப்படையில் செலுத்தப்பட்ட தொகையை கழித்துவிட்டு, மீத தொகைக்கு பில் செலுத்த வேண்டும் எனவும் மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

இந்த உத்தரவை ரத்து செய்து, முந்தைய மின் அளவீட்டின் அடிப்படையில், முதல் இரு மாதங்களுக்கான கட்டணத்தை தனி ‘பில்’லாகவும், மீத யூனிட்களை அடுத்த இரு மாதங்களுக்கான ‘பில்’லாகவும் நிர்ணயித்து, தனித்தனி பில்கள் தயாரிக்க உத்தரவிடக்கோரி, தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவர் எம்.எல்.ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

Advertisment

 Dismissal of case against new electricity tariff!

இந்த வழக்கு,நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தற்போது மின் வாரியம் மேற்கொள்ளும் மின் கட்டண கணக்கீடுப்படி, பொது மக்கள் கூடுதல் தொகை செலுத்த நிர்ப்பந்திக்கபடுவதாகக்கூறி, அதற்கான விளக்க மனு ஒன்று மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து, தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மின்சார சட்ட விதிகளின்படி, ஊரடங்கு காலத்தின் போது, முந்தைய மின் கட்டணத் தொகையை அடிப்படையாகக்கொண்டு மட்டுமே புதிய மின் கட்டணம் கணக்கிடப்படுமே தவிர, ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட மின்சார யூனிட் அடிப்படையில் கணக்கிட முடியாது என திட்டவட்டமாகத் தெரிவித்தார். மேலும், ஊரடங்கு காலத்தில், பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கி இருந்ததாலும், 18 முதல் 20 மணி நேரம் வரை மின்சாரத்தை பயன்படுத்தியதாலும், மின் கட்டணம் அதிகரித்து இருப்பதாக விளக்கமளித்தார்.

ஊரடங்கு தொடங்கிய மார்ச் மாதம் முதல், மின்சார ஊழியர்கள் பொதுமக்களின் வீடுகளுக்கு சென்று மின் கணக்கீடு செய்யாததால், ஒவ்வொரு வீடுகளிலும் அவர்கள் பயன்படுத்திய மின்சார யூனிட்டின் அளவு யாருக்கும் தெரியாது. இது போன்ற சூழலில், மின்சார சட்ட விதிகளின் அடிப்படையில், முந்தைய மாத கட்டணம் முதல் மாதம் நிர்ணயிக்கப்பட்டதாகவும், அடுத்த மின் கட்டணத்தை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதியோடு, முந்தைய கட்டண தொகையின் அடிப்படையில் நிர்ணயித்ததாகவும்,தமிழக அரசு சார்பில் விளக்கமளிக்கப்பட்டது.

இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள்,மின் கட்டண கணக்கீட்டு முறையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். தனிப்பட்ட நபர்களின் குறைகள் இருப்பின்,அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லலாம் எனஅறிவுறுத்தியுள்ளனர்.