Advertisment

துரை வைகோ எம்.பி. தலைமையில் திஷா கமிட்டி கூட்டம்!

Disha Committee meeting chaired by Durai Vaiko MP

திருச்சி மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுவின் (DISHA - ஷா) கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் இன்று (10.06.2025) காலை 10:00 மணிக்கு தொடங்கி மதியம் 2 மணிக்கு நிறைவு பெற்றது. இதில் மதிமுகவின் முதன்மைச் செயலாளரும், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான துரை வைகோ திருச்சி மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு தலைவராக பொறுப்பேற்று மூன்றாவது கூட்டத்தை தலைமையேற்று நடத்தி முடித்துள்ளார்.

Advertisment

இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஒன்றிய அரசின் திட்டங்கள் ஒவ்வொன்றை பற்றியும் விளக்கமாக எடுத்துரைத்து துறை சார்ந்த அதிகாரிகள் அதன் தரவுகளை முன்வைத்தனர். அதில், தேவைப்படுகின்ற கேள்விகளை, சந்தேகங்களை கேட்டதுடன், அந்த திட்டங்களை நல்ல முறையில் அனைத்து மக்களும் பயன் பெறும் வண்ணம் நிறைவேற்றிவதற்கு ஆலோசனைகளை வழங்கினேன். அதில் முக்கியமான இரயில்வே துறை திட்டங்கள், தேசிய நெடுஞ்சாலை துறை திட்டங்கள், கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் மற்றும் விவசாயம் சம்பந்தமான திட்டங்களுக்கு கூடுதல் கவனம் செலுத்தினேன். அதில், பால் பண்ணை ஜங்ஷன் பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசல் அதிகமுள்ள அந்த பகுதியில் உரிய தீர்வை வழங்கிட வேண்டுமாய் நெடுஞ்சாலை துறை ஆணைய (NHAI) அதிகாரிகளை கேட்டுக்கொண்டேன்.

திருவெறும்பூர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து திருவெறும்பூர் ரயில் நிலையத்திற்கு அடையாளம் காணப்பட்ட கூடுதல் சாலையை அகலப்படுத்தி தருமாறு மாநகராட்சி அதிகாரிகளையும் கேட்டுக்கொண்டேன். தார் சாலையிலிருந்து ரயில் நிலையத்தை இணைக்கும் அந்த பகுதியையும் இரயில்வே துறை சீரமைத்து தருவதாக உறுதியளித்துள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள சோழமாதேவி ஊராட்சியில் சாலை மற்றும் பாலம் அமைத்துத்தர கேட்டிருந்தேன். திருச்சி இரயில் நிலையத்தில் (ராக்போர்ட் எக்ஸ்பிரஸ்) மலைக்கோட்டை அதிவிரைவு இரயில் முதல் நடைமேடையில் நிற்க வேண்டும் கேட்டுக்கொண்டேன். திருவெறும்பூர் ரயில் நிலையத்தில் சோழன் விரைவு இரயில் எப்போது நிறுத்தப்படும் என்றும் திருச்சி தாம்பரம் சிறப்பு ரயிலையும் திருவெறும்பூரில் நிறுத்த கோரிக்கை வைத்துள்ளேன்.

திருச்சி இரயில் நிலையத்தில் இரயில்வே வைபை (wifi) போதிய அளவு செயல்பாட்டில் இல்லை. இதனை சரி செய்து திருச்சி இரயில் நிலையம் முழுவதும் வைபை சிக்னல் வசதி செய்து தர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டேன். முக்கியமாக திருச்சி மாநகரில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பாதாள சாக்கடை திட்டத்தின் நிலை குறித்து கேட்டிருந்தேன். சென்ற கூட்டத்தில் திருச்சி ரயில் நிலையத்தில் பி.எஸ்.என்.எல் சிக்னல் சரியாக இல்லை என்று தெரிவித்திருந்தேன். அதற்கு பி.எஸ்.என்.எல் அதிகாரிகள் சரி செய்து இரயில் நிலையம் முழுவதும் பி.எஸ்.என்.எல் சிக்னல் முழுமையாக கிடைப்பதாக தகவல் அறிந்தேன். அவர்களுக்கு இந்த கூட்டத்தில் நான் நன்றி தெரிவித்து பாராட்டினேன்.

Advertisment

எனது கோரிக்கையை ஏற்று திருச்சியில் பிரதான இடத்தில் அமைந்திருந்த பழைய மாரிஸ் இரயில்வே மேம்பாலத்தை சொன்ன நேரத்திற்கு முன்பாகவே இடிக்கப்பட்டு தங்களது பணியை நிறைவு செய்து கொடுத்தார்கள். அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டேன். திருவெறும்பூர் பேருந்து நிலையம் கட்டப்பட உள்ள இடத்தை மாநகராட்சிக்கு வழங்குவதில் ஊரக வளர்ச்சித்துறைக்கும் மாநகராட்சிக்கும் இடையே உள்ள இடைவெளியை சரிசெய்ய வழிவகை செய்தேன். இக்கூட்டம் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமாட் முன்னிலையில் நடைபெற்றது. இதில் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, சட்டமன்ற உறுப்பினர்கள் பழனியாண்டி, சவுந்தரபாண்டியன், மாநகராட்சி ஆணையர், மாவட்ட வருவாய் அதிகாரி, மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள், அலுவலர்கள் கலந்து கொண்டனர். மதிமுக துணைப் பொதுச்செயலாளர் ரொக்கையா, திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் வெல்லமண்டி இரா சோமு, திருச்சி தெற்கு மணவை தமிழ் மாணிக்கம், திருச்சி வடக்கு டிடிசி சேரன், திசா கமிட்டி உறுப்பினர்கள் ஷியாம் மற்றும் இரயில்வே ஜெயசீலன் ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்” எனத் தெரிவித்துள்ளார்.

Meeting mdmk durai vaiko trichy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe