Advertisment

கொள்ளிடக்கரையை வலுப்படுத்துவதில் வடகரை, தென்கரை பாகுபாடு - நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

கத

கொள்ளிடம் ஆற்றுக்கு வடகரை, தென்கரையென 2 கரைகள் உள்ளது. இதில் தென்கரை மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ளது. வடகரை கடலூர் மாவட்டத்தில் உள்ளது. இந்த கரையையொட்டி ஜெயங்கொண்ட பட்டினம், மேம்படுத்திகுடி, வெள்ளுர், நலன்புத்தூர், கருப்பூர், சின்னகாரமேடு, தீத்துக்குடி, வல்லத்துறை, சி.அரசூர், தில்லைநாயகபுரம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. வடகரை என்பது கீழணை முதல் சிதம்பரம் அருகே கடலில் கலக்கும் பகுதியான சின்னகாரமேடு கிராமம் வரை 60 கி.மீ தூரம் ஆகும். இந்தப் பகுதியில் உள்ள பொதுமக்கள் விவசாயிகள் கொள்ளிடம் தண்ணீரை நம்பி விவசாயம் செய்து வாழ்ந்து வருகிறார்கள். இந்த பகுதிகளில் விவசாய கூலியை நம்பி பல ஆயிரம் பேர் உள்ளனர்.

Advertisment

கொள்ளிட வடகரை நடப்பதற்கு லாய்கற்ற நிலையில் இருந்த நிலையில் கடந்த 2011 ஆம் ஆண்டு 108 கோடியில் 60 கிலோ மீட்டர் தூரத்திற்கும் தார் சாலை அமைக்கப்பட்டது. இதில் மினி பேருந்து உள்ளிட்ட 50 கிராம மக்களுக்கும் போக்குவரத்து வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது. இதனை அப்பகுதியில் உள்ள அனைவரும் வரவேற்றனர். மேலும் கீழணை இருக்கும் அணைக்கரைக்கு விரைவில் செல்லும் வழியாகவும் இந்த சாலை இருந்தது. மேலும் விவசாயிகள் விளை நிலங்களில் விளையும் பொருட்களை விரைவில் நகரங்களுக்கு எடுத்துச் செல்ல இந்த சாலை பேருதவியாக இருந்தது. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரமும் மேம்பட்டது.

Advertisment

இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் இந்த கொள்ளிடக்கரையை சீரமைக்க அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை இதற்கான திட்டத்தையும் அவர்கள் ஏற்படுத்தவில்லை. இதனால் கொள்ளிடம் வடகரை சாலை குறுகிப் பல இடங்களில் மண் அரிப்பால் பெரிய பள்ளம் ஏற்பட்டு தொடர் மழையால் தார்சாலை சிதலமடைந்து போக்குவரத்திற்கு லாய்கற்ற நிலை மீண்டும் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கடந்த சில ஆண்டுகளாக இரவு நேரங்களில் பள்ளம்,மேடு எனத் தெரியாமல் நடந்த செல்பவர்களும், வாகனத்தில் செல்பவர்களும் பள்ளங்களில் விழுந்து சில பேருக்கு கால், கை முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் சிதம்பரம் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வல்லம்படுகை சோதனை சாவடி அருகே 50-க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் 1000-த்திற்கும் மேற்பட்டவர்கள் வடகரையை வலுப்படுத்த குமராட்சி ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் கடந்த ஜூன் மாதம் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்போது அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இந்த நிலையில் ஆகஸ்ட் மாதம் தமிழகத்தில் மழையே இல்லாத நேரத்தில் கர்நாடக மாநிலத்தில் தொடர்ந்து மழை பெய்ததால் மேட்டூர் அணை நிரம்பி அதன் உபரி நீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் கீழணைக்கு வந்து. இதில் அதிகபட்சமாக வினாடிக்கு 2.80 லட்சம் கன அடி வெள்ளநீர் கொள்ளிடம் ஆற்றில் வெளியேற்றப்பட்டது.

கதச

ஆற்றில் வெள்ளநீர் அதிகமாகச் செல்லும்போது நீர்வளத்துறை அதிகாரிகள் கொள்ளிடம் ஆற்று வடகரையில் வலு விழுந்த பகுதிகளை பார்க்கச் சென்றபோது அவர்களின் வாகனம் செல்ல முடியாத அளவுக்கு சாலை மிகவும் குறுகியதாக மாறியிருந்தது. சாலையின் இருபுறங்களிலும் செடிகள் வளர்ந்து கிடந்தது. பல இடங்களில் கொள்ளிடக் கரையில் மண்ணரிப்பு ஏற்பட்டு கரையே சேதம் அடைந்த நிலையில் காணப்பட்டது. மழை மற்றும் வெள்ள காலங்களில் மட்டுமே பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு இந்த கொள்ளிடக்கரை நினைவுக்கு வருகிறது என்றும் நீர்வளத் துறை உயர் அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டவர்கள் நிதி ஒதுக்கி கொள்ளிடம் வடகரையை போக்குவரத்திற்கு ஏற்றவாறு வலுப் படுத்தவேண்டும் என அப்பகுதியில் உள்ள கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பொதுப்பணித்துறை உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, தற்போது கொள்ளிடம் ஆற்றில் உபரி நீர் அதிகபட்சமாக 2.80 லட்சம் கன அடி வெளியேற்றப்பட்டது. இதனால் கொள்ளிடம் வடகரை பல இடங்களில் நீர்க்கசிவு ஏற்பட்டு அதனை பொதுப்பணி துறையினர் அவசர பணியாக மணல் மூட்டைகள் மற்றும் கருங்கல், ஜல்லி, ஜிப்ஸ்களை கொண்டு ரூ 24 லட்சத்தில் சரிசெய்துள்ளதாகவும் இதற்கு எந்த திட்ட நிதியும் இல்லாததால் அவசரத்திற்கு ஒப்பந்ததாரர்கள் மூலம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கரையின் மொத்தம் 60 கி.மீ தூரத்தில் 40 கிலோ மீட்டர் தூரத்திற்கு கருங்கல் கொட்டப்பட்டு அணையை பலப்படுத்த வேண்டும் எனவும் 20 கிலோமீட்டர் தூரத்திற்கு சரியில்லாத இடங்களை சரி செய்ய அரசிற்கு ரூ 150 கோடியில் திட்டம் தயார் செய்து அனுப்பப்பட்டுள்ளது. என்றும், தற்காலிகமாக கரையில் சிதிலமடைந்த பகுதிகளை கருங்கற்களை கொட்டி சரிசெய்யும் வகையில் ரூ16 கோடியில் திட்டம் தயார் செய்து அனுப்பப்பட்டுள்ளது. இதில் எது வந்தாலும் இதற்கான பணிகள் தொடங்கும்" என்றார்.

மேலும் அவர் கூறுகையில், " மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கொள்ளிடம் ஆற்றின் தென்கரையை வலுப்படுத்துவது உள்ளிட்ட பல இடங்களை சீரமைக்க 15 ஆயிரம் கோடி செலவில் பணிகள் நடைபெற்று வருகிறது. தென்கரை பொதுப்பணித்துறை திருச்சி மண்டலத்திற்கு உட்பட்டது. ஆனால் கடலூர் மாவட்டம் சிதம்பரம், காட்டுமன்னார்குடி பகுதியையொட்டியுள்ள வடகரை பொதுப்பணித்துறை சென்னை மண்டலத்திற்கு உட்பட்டது. டெல்டாவில் திட்டம் அறிவிக்கும் போது அது தென்கரையுடன் அந்த நிதியை முடித்துக் கொள்கிறார்கள். வடகரைக்கு அந்தத் திட்டம் கிடைப்பதில்லை. இதனால் வடகரையை பலப்படுத்துவதில் சிரமம் இருந்து வருகிறது.

இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும், இந்த பாகுபாடு நீக்க கடலூர் மாவட்டத்தில் டெல்டா பகுதியாக உள்ள காட்டுமன்னார்குடி, சிதம்பரத்தை திருச்சி பொதுப்பணித்துறை மண்டலத்தில் இணைக்க வேண்டும். அப்படி இணைத்தால் தான் இதற்கு நிரந்தர தீர்வு ஏற்படும் என அவர் கூறினார். தமிழக அரசு கொள்ளிட ஆற்றின் வடகரையை வலுப்படுத்தி போக்குவரத்திற்கு ஏற்பாடு செய்யவேண்டும் என்றும், சிதம்பரம், காட்டுமன்னார்குடி பகுதிக்கு டெல்டாவுக்கு ஒதுக்கப்படும் நிதி மற்றும் திட்டங்கள் கிடைக்கும் வகையில் பொதுப்பணித்துறையில் உள்ள சிக்கல்களை நீக்கி சிதம்பரம், காட்டுமன்னார்குடி வட்டத்தை பொதுப்பணித்துறை திருச்சி மண்டலத்தில் இணைக்கவேண்டும் என்பது அனைவரின் கருத்தாக உள்ளது.

Kollidam
Advertisment
Show comments
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe