ஈரோடு மாவட்ட எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டமுறை எடையளவு சட்டத்தினை பின்பற்றி கடைகள், நிறுவனங்கள் செயல்படுகிறதா என ஆய்வு மேற்கொள்ள தொழிலாளர் இணை ஆணையர் மாதவன் உத்தரவிட்டார். இதன்படி, ஈரோடு தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) திருஞானசம்பந்தம் தலைமையில் தொழிலாளர் துணை ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் சட்டமுறை எடையளவு சட்டத்தின் கீழ் 144 கடைகள் மற்றும் நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், 35 கடைகளில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டன. பொட்டல பொருட்கள் எடையளவுகள் விதிகளின் கீழ் பட்டாசு கடை உள்ளிட்ட 90 கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் 5 கடைகளில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மேலும், குழந்தை தொழிலாளர் மற்றும் வளரிளம் பருவ தொழிலாளர்கள் சட்டத்தின் கீழ் தொழிலாளர்கள் துறை, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கத்துடன் இணைந்து பட்டாசு தயாரிக்கும் நிறுவனம் மற்றும் விற்பனை செய்யும் கடைகள் என 49 இடங்களில் கூட்டாய்வு நடத்தப்பட்டது. இதில், குழந்தை மற்றும் வளரிளம் பருவ தொழிலாளர்கள் யாரும் பணியமர்த்தப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது. குழந்தை தொழிலாளர் மற்றும் வளரிளம் பருவ தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்து நிறுவன உரிமையாளர்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது. குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின் கீழ் சினிமா தொழில் குறித்து 16 நிறுவனங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.
இதுகுறித்து ஈரோடு தொழிலாளர் உதவி ஆணையர்(அமலாக்கம்) திருஞானசம்பந்தம் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் கடைகள் மற்றும் நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், பீடி மற்றும் சுருட்டு சுற்றும் நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், இதர நிறுவனங்களில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்களின் விவரங்களை https://labour.tn.gov.in/ism/ என்ற தொழிலாளர் துறை வலைத்தளத்தில் நிறுவன உரிமையாளர்கள் பதிவு செய்திட வேண்டும். எடையளவுகள் மற்றும் மின்னணு தராசுகள் முத்திரையின்றி பயன்படுத்துவது, பொட்டல பொருட்கள் அதிகபட்ச சில்லறை விலையை விடக் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது, உரிய அறிவிப்புகள் இல்லாமல் விற்பனை செய்வது சட்டமுறை எடையளவு சட்டம் மற்றும் சட்டமுறை எடையளவு பொட்டல பொருட்கள் விதிகளின் கீழ் தண்டனைக்குரியதாகும்.
விதிகளை மீறி செயல்படும் கடைகள் மற்றும் நிறுவனங்கள் மீது அபராதம் விதிக்கப்படுவதோடு நடவடிக்கையும் எடுக்கப்படும். 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட வளரிளம் பருவத்தினர் பணிக்கு அமர்த்துவது குற்றம். அவ்வாறு பணிக்கு அமர்த்தியது கண்டறிந்தால், நீதிமன்ற வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, தொடர்புடைய நிறுவன உரிமையாளர் மீது ரூ.50 ஆயிரம் வரை அபராதம் அல்லது 6 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது இரண்டும் சேர்த்தும் விதிக்க நேரிடும். குழந்தை தொழிலாளர் பணிபுரிவது கண்டறிந்தால் 1098, 155214 என்ற கட்டணமில்லா தொலைப்பேசி எண்களில் தகவல் தெரிவிக்கலாம். இவ்வாறு திருஞானசம்பந்தம் தெரிவித்துள்ளார்.