Discovery of the Chola period inscription 830 years ago!

கள்ளக்குறிச்சி அருகே திருவிழா நடத்த நிலம் தானம் செய்த கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது.

Advertisment

சேலம் வரலாற்று ஆய்வு மையத்தைச் சேர்ந்த கல்வெட்டு ஆய்வாளர்கள் விழுப்புரம் வீரராகவன், ஆறகளூர் பொன்.வெங்கடேசன் ஆகியோர் அடங்கிய குழு கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாக துருகம் வட்டம் நாகலூர் என்ற ஊரில் தொல்லியல் ஆய்வுகள் மேற்கொண்டனர். அப்போது நாகலூர் கயிலாயமுடையநாயனார் என்ற சிவன் கோயிலில் ஒரு கல்வெட்டு கண்டறியப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. 95 செ.மீ நீளமும், 85 செ.மீ அகலமும், 7 செ.மீ தடிமனும் உள்ள ஒரு பலகை கல்லில் முன்பக்கம் 14 வரிகள், பின்பக்கம் 9 வரிகளுடனும் கல்வெட்டு அமைந்துள்ளது. கோயிலின் முன்பக்கம் இது நடப்பட்டு உள்ளது.

Advertisment

830 ஆண்டுகளுக்கு முன் மூன்றாம் குலோத்துங்கசோழனின் 13- ஆம் ஆட்சியாண்டில் கி.பி. 1191- ஆம் ஆண்டு இக்கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது. இக்கல்வெட்டில் வீரராசேந்திர சோழன் என மூன்றாம் குலோத்துங்கன் குறிப்பிடப்பட்டுள்ளார். கல்வெட்டில் நாவலூர் என்று இவ்வூர் அழைக்கப்படுகிறது.

12- ஆம் நூற்றாண்டில் சோழநாட்டில் ஜனநாத வளநாட்டு பரனூர் கூற்றத்தில் நாவலூர் அமைந்திருந்தது. கூற்றம் என்பது இன்றைய தாலுக்கா போன்றது.

Advertisment

Discovery of the Chola period inscription 830 years ago!

இங்குள்ள கயிலாயமுடைய நாயனார் கோயிலுக்கு துறையுடையான் ஊராடுவான் ஆன நந்திபந்மன் என்பவர் ஒரு திருவிழாவை ஏற்படுத்தியுள்ளார். இக்கோயில் பூசைக்கு என ஏற்கனவே பத்து மா (ஆயிரம் குழி) நிலம் தானம் செய்யப்பட்டிருந்தது. மேற்கொண்டு ஆயிரம் குழி நிலம் ஒதுக்கப்பட்டு மொத்தம் இரண்டாயிரம் குழி நிலம் இத்திருவிழா நடத்த தானமாகத் தரப்பட்டுள்ளது.

இந்த திருவிழா தடையில்லாமல் நடத்தும் பொறுப்பை இக்கோயிலில் பூஜை செய்து வந்த சிவப்பிராமணன் காசிபகோத்திர நீறணிந்தான் காழிப்பிள்ளை மற்றும் அவரது சகோதரர்களிடம் ஒப்படைத்து உள்ளனர். இது மட்டுமன்றி இக்கோயிலில் தடையின்றிப் பூசைகளும் திருவிழாவும் நடக்க 4 வேலி (எட்டாயிரம் குழி) புன்செய் நிலமும் தானமாக தரப்பட்டுள்ளது.

இவ்வூருக்கு அருகேயுள்ள வரஞ்சிரம் என்ற ஊரில் உள்ள வரஞ்சிரமுடைய நாயனார் என்ற கோயிலுக்கு அமாவாசை பூஜை செய்ய ஏற்கனவே நிலம் தானமாக தரப்பட்டு இருந்தது. அந்த நிலத்தில் வரும் விளைச்சலில் இருந்தும்,வரஞ்சிரமுடையநாயனார் கோயிலுக்கு விடப்பட்ட நன்செய் நிலத்தில் வரும் விளைச்சலில் இருந்தும் 100 குழிக்கு 16 படி நெல் கயிலாயமுடைய நாயனார் கோயில் பூசைக்கும், திருவிழாவுக்கும் தரப்படவேண்டும் என கல்வெட்டு குறிப்பிடுகிறது.

Discovery of the Chola period inscription 830 years ago!

ஊரையும், நிலங்களையும், குடிகளையும் பாதுகாக்க பாடிக்காவல் என்ற ஒரு படைப்பிரிவு அக்காலத்தில் செயல்பட்டு வந்துள்ளது. அந்தப் படைக்கு அப்பகுதி விளை நிலங்களில் விளையும் தானியங்களின் ஒரு பகுதி வரியாக தர வேண்டும். அப்படி வரியாகப் பெற்ற வரகு என்ற தானியமும் இந்த திருவிழா செலவுக்காக தரப்பட்டுள்ளது.

இக்கல்வெட்டு அரசனின் நேரடி ஆணையாக வெட்டப்பட்டுள்ளது. இப்பகுதியில் அப்போது வல்லவரையன் என்ற குறுநில மன்னனின் கட்டுப்பாட்டில் இருந்துள்ளது. இந்த தானம் தொடர்ந்து நிலைத்து இருக்க வேண்டும் என வல்லவரையன் மீது சத்தியம் செய்யப்பட்டுள்ளது. இப்பகுதியில் மேலும் ஆய்வு செய்தால் இன்னும் பல வரலாற்று தடயங்கள் கிடைக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.